ஜனவரி:16 முத்தி. ஜோசப் வாஸ் மறைபரப்பாளர்,

ஜனவரி:16
முத்தி. ஜோசப் வாஸ் மறைபரப்பாளர், இலங்கை(1651-1711)

இன்று இலங்கையில் கத்தோலிக்க விசுவாசம் ஓர் ஆலமரமாகக் காட்சியளிக்கிறதென்றால் அதற்கு புத்துயிர் ஊட்டிய பெருமை தந்தை ஜோசப் வாஸ் என்பவரையே முற்றிலும் சாரும். 17-வது நூற்றாண்டில் இலங்கைத் தீவில் போர்த்துக்கீசியரும் டச்சு நாட்டினரும் போட்டி போட்டுக் கொண்டு காலனி ஆதிக்கம் செலத்தி வந்தனர். போர்த்துக்கல் நாட்டினர் இலங்கையை கைப்பற்றிய அதே சமயம் கத்தோலிக்க விசுவாசத்திற்கு வித்திட்டிருந்தனர். அது முளைத்து வளரும் சமயம் டச்சு ஆதிக்கத்தினர் கால்வின் பதித்ததைப் புகுத்தி கத்தோலிக்க விசுவாசத்திற்கு ஒரு பெரும் சவாலாகத் தோன்றினர். கத்தோலிக்க விசுவாசத்தை பூண்டோடு அழித்தொழிக்க திட்டம் தீட்டிய சமயம் பார்த்து தந்தை ஜோசப் வாஸ் இலங்கையில் தனது பொற்பாதம் பதித்தார். இவர் புதிய ஆர்வத்தை ஊட்டியிருக்காவிட்டால் இலங்கையில் கத்தோலிக்க விசுவாசத்திற்குச் சமாதி கட்டப்பட்டிருக்கும்.

1651, ஏப்ரல் 21-ம் நாள் வாஸ் அடிகளார் கோவாவில் சால்செட் தீவில் பெனாலிம் என்ற இடத்தில், கிறிஸ்டோப்பர்வாஸ், மரியாதே மிராண்டாவின் 8-வது பிள்ளையாகப் பார்ப்பனர் குலத்தில் தோன்றினார். சிறு வயதிலிருந்தே ஜெபவாழ்விலும் ஏழைகள் மீதும் கரிசணை கொள்வதிலும் தனி ஆர்வம் காட்டியவர். கோவாவில் சேசுசபைக் கல்லூரியில் தனது படிப்புகளை முடித்துக் கொண்டு, புனித தாமஸ் அக்வீனாஸ் குருமடத்தில் சேர்ந்து படித்து தனது 25-வது வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். கொங்கண் பகுதியில் மங்களுரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் போர்த்துக்கீசியர் தோற்றுவித்த கத்தோலிக்க திருச்சபை நல்ல கனி தரக்கூடிய மரமாக வளர்ந்து வந்த இந்தக் காலகட்டத்தில் டச்சு நாட்டு கால்வின் பிரிவினை சபையார் கத்தோலிக்க திருச்சபையை அடியோடு அழிக்கத் திட்டம் தீட்டினார்கள். இவர்கள் மத்தியில் ஆண்டுகள் கடுமையாக உழைத்து கத்தோலிக்கர்களை ஊக்குவிக்கும் பணியில் முழுவீச்சில் இறங்கி நல்ல பலன் கிடைத்ததைப் பார்த்த பிறகு மீண்டும் கோவா சென்றடைந்தார்.
கோவாவில் இருந்த சமயம் இலங்கையிலும் டச்சு பிரிவினர் சபையார் கத்தோலிக்க விசுவாசத்தின் சவாலாகத் தோன்றினர். கத்தோலிக்கர் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். சில கத்தோலிக்கர் தெரிந்தோ, தெரியாமலோ புத்த மத வழிபாடுகளிலும் பங்கேற்றனர். தனது மங்களுர் அனுபவம் தந்தை வாசுக்கு கை கொடுத்தது. தனிமையாக இலங்கைக்குப் போவதை விட ஒரு குழுவாகப் போய் கத்தோலிக்கர்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க வேண்டுமெனத் திட்டம் தீட்டினர். கோவாவில் ஏற்கனவே தந்தை பாஸ்கால் டக்கோஸ்டா ஜெரமியாஸ் ஒரு வேத போதக துறவற சபையைத் தோற்றுவித்திருந்தார். அதில் தந்தை வாஸ் சேர்ந்த சில ஆண்டுகளுக்குப் பின் சபைத் தலைவரானார். நாளடைவில் இந்த சபைக்குப் புனித பிலிப்பு நேரி ஜெபக் குழுவினர் என்ற பெயரிட்டார். இந்த சபையினரைக் கொண்டு இலங்கையில் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக கத்தோலிக்க விசவாசத்திற்கு உறுதுணையாகப் பணிபுரிந்தார். ஆனால் 1835-ல் கோவாவில் ஏற்ப்பட்ட கொந்தளிப்பில் மற்ற துறவற சபையைப் போல் இந்த புதிய சபையும் துர்அதிஸ்ட வசமாக கிள்ளி எறியப்பட்டு முற்றிலும் நாசப்படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில் இலங்கையில் திருச்சபைக்கு உறுதுணையாக இருப்பதற்காக இங்கே செல்லும் போது கூலிவேலை பார்ப்பவர் போல் மறைமுகமாகவே கப்பலேரினார். அதுவும் ஜென்ம விரோதிகளாக கருதப்பட்ட டச்சுக் கப்பலில் ஒரு பரம ஏழை போல கப்பலுக்குள் இடம் பிடித்துக் கொண்டார். கத்தோலிக்க மத போதகர்கள் எவரையும் விட்டு வைக்காமல் கொல்லத் திட்டம் தீட்டிய டச்சுக்காரரின் கப்பலுக்குள் மாறவேடத்தில் இடம் பிடித்து இலங்கைத் தீவை அடைந்ததில் இறைவனின் சிறப்பான பராமரிப்பு இருந்ததை தந்தை வாஸ் நன்கு உணர்ந்திருந்தார். இவ்வாறு முதலில் 1687-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காலடிகளைப் பதித்தார். சீத்தாழை என்ற கத்தோலிக்க கிராமத்தில் 3 ஆண்டுகள் தங்கி அங்கிருந்து பல இடங்களுக்கும் சென்று மேய்ப்புப் பணியை மேற்கொண்டார். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் கவர்ந்து கொள்ளும் முறைகளைக் கையாண்டார். நொறுங்குண்டு கிடந்த கத்தோலிக்க சமுதாயம் தெம்பு அடைந்தது.

இவர் இவ்வாறு மாறுவேடத்தில் பணியாற்றுவதை ஓரளவு டச்சு நாட்டினர் உணர்ந்தாலும் ஆடுகளை மந்தைக்குள் கொண்டு வந்து சேர்த்தார். எத்தகைய வலை விரித்தாலும் இவரைப் பிடிக்க இயலவில்லை.

1690-ல் கண்டி நகரில் சேசுசபையைத் சேர்ந்த பழமை வாய்ந்த ஆலயத்தைக் கண்டு பிடித்ததுடன் அதைச்சுற்றிலும் வாழ்ந்து வந்த கத்தோலிக்க சமுதாயத்தையும் கண்டு பிடித்தார். இதனருகில் பற்பல சிற்றாலயங்களை எழுப்பினார். ஆங்காங்கே இருந்த கிறிஸ்தவர்களைக் கவனிக்க வேதியர்களை உருவாக்கினார். இவர் ஒருமுறை இவ்விடங்களைப்பார்த்து வர மாட்டு வண்டியில் பயணித்த போது இவரை வேவு பார்ப்பவன் என்று எண்ணி சிறையில் தள்ளப்பட்டார். இவரைச்சார்ந்த 7பேர் தூக்கிலிடப்பட்டனர். வாஸ் அடிகளாரோ 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டிருந்தார். இறுதியில் இவர் எந்த விதத்திலும் வேவு பார்ப்பவரல்லர் உன்று உணர்ந்த குறுமன்னன் இவரை விடுதலை செய்ததோடு கத்தோலிக்கர் மத்தியில் பணியாற்றவும் உத்தரவளித்தார். அரசனே, வாஸ் அடிகளார் தனக்கு உதவியாக வேறு ஒரு குருவையும் அழைத்துக் கொள்ள பரிந்துரைத்ததின் பேரில், கோவாவிலிருந்து தந்தை சல்டானா என்பவரையும் சேர்த்துக் கொண்டார்.
இக்காலத்தில் ஒரு சமயம் கடுமையான வறட்சி தலைவிரித்தாடியது. புத்தபிக்குகள் என்னென்ன மந்திரமெல்லாம் ஓதிப்பார்த்தும் பயனில்லை. அதன் பின்னர் தந்தை வாஸ் பொது இடம் ஒன்றில் திருச்சிலுவையை நட்டு பெருங்கூட்டத்தினர் முன்னிலையில் மண்டியிட்டு பக்தி பரவசத்துடன் ஜெபித்தார். மிகவிரைவில் கார்மேகம் எங்கும் கிளம்பி கனத்த மழை பெய்தது. அதிலும் இன்னுமோர் புதுமை என்னவெனில், தந்தை வாஸ் ஜெபித்துக் கொண்டிருந்த இடத்தைச் சுற்றிபற்றாக்குறைக்கு, யானைகள், காட்டுமாடுகள் இன்னும் பலவிதமான காட்டு விலங்குகளின் ஒரு சொட்டு மழை விழவில்லை. மன்னன் இதைக் கேள்வியுற்று தனது அரசின் எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று செயல்பட உத்தரவளித்தான்.

1697-ல் கண்டி நகரில் பிளேக் நோய்க்கும் பெரிய அம்மைக்கும் ஏராளமானோர் பலியானார்கள். அரசனும் அவனது தோழர்களும் தப்பித்து ஓடிவிட்ட சமயம் தந்தை வாஸ் அஞ்சா நெஞ்சத்துடன் நோயுற்றவர்களுக்குத் தேவைப்பட்ட அனைத்துச் சேவைகளையும் ஆற்றினார். பின்னர் திருகோணமலை, நெகம்போ, கொழும்பு, மட்டக்களப்பு முதலிய நகரங்களுக்கும் சென்று மக்களை விசுவாசத்தில் திடப்படுத்தினார். இருப்பினும் செல்லும் இடமெல்லாம் கால்வின் பதித்தவர்கள் இவரைப் பதம் பார்க்கத்தான் செய்தனர். பற்றாக்குறைக்கு, யானைகள், காட்டுமாடுகள் இன்னும் பலவிதமான காட்டு விலங்குகளின் ஆபத்தும் இவருக்கு நிறையவே இரு;தது.
டச்சு நாட்டு வெறியர்கள் இவரைப் பிடிக்க இயலாத சூழ்நிலையில் ஏழைக்கத்தோலிக்கர் மீது குறிவைத்தனர். அவர்களின் காது, மூக்கைக் கூட துண்டித்தனர். சிறையில் தள்ளினர். ஊரைவிட்டுத் துரத்தினர். ஒருமறை திருப்பலிக்காக கூடி வந்த 300 ஏழைக் கிறிஸ்தவர்கள் மீது புலிபோல் பாய்ந்து சித்திரவதை செய்தனர். இருப்பினும் குறுமன்னர்கள் எப்போதுமே தந்தை வாஸ் பக்கம் இருந்து, மேலும் பல குருக்களைக் கொண்டு வருவதற்கு வாய்பளித்தனர். சுமார் 11 பேர் இவ்வாறு வந்து சேர்ந்தனர். இவர்களின் ஆன்ம தாகத்தைச் சொல்லி மாளாது. இவரது சிம்ம மனத்துடன் கூடிய ஆன்ம தாகத்தை நேரடியாகப் பார்த்தவர் திருத்தந்தையின் பிரதி நிதியாக முழுஅதிகாரத்துடன் வந்த கருதினால் டூர்னோன் தந்தை வாசுக்கு ஆயர் பதவி காத்துக்கொண்டு இருந்ததை அறிவித்தார். இப்பதவியை வேண்டாம் என்று உதறி விட்டார். எப்படியோ தந்தையின் அரவணைப்பில் கோவாவில் இருந்து வந்த ஏனைய குருக்களின் அயராத உழைப்பினால் 1710ல் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 55000 ஆக உயர்ந்திருந்தது.
இறுதியில் தந்தை வாஸ் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் ஊடே இருந்த கோட்டை ஊரில் மக்களுக்கு சேவை செய்த சூழ்நிலையில் நோய்வாய்ப்பட்டார். கண்டி மருத்துவ மனைக்கு மாட்டுவண்டியில் தந்தையை ஏற்றிச்சென்றடைய 8 நாட்கள் எடுத்தன. 16.01.1711 நோய் முற்றியதை உணர்ந்ததும இறுதியாக பாவமன்னிப்பு அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார். ஒரு படுக்கையை பயன்படுத்த தனக்கு தகுதியில்லை என்று சொல்லி தன்னை தரையில்போட கேட்டுக்கொண்டார். பின்னர் பாடுபட்ட சுருபத்தை ஒருகையில் பிடித்துக்கொண்டு மற்றொருகையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் அமைதியாக தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார். கண்டியில் இவர் இறந்த செய்தி கேட்டு பெரும் கூட்டம் வர ஆரம்பித்தது. இதனால் மூன்று நாட்கள் உடலை நல்லடக்கம் செய்ய முடியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *