ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.

ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. மேலும் அறிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.

ஜனவரி : 13 புனித இலரி ஆயர்

ஜனவரி : 13
புனித இலரி ஆயர், மறைவல்லுனர் – (கி.பி.315-368)

 

இவர் பிரான்சு நாட்டினர். பாய்ட்டியர்ஸ் நகரின் மேதகு ஆயர். இலத்தீன் ரீதியில் திருச்சபையின் முதல் மறைவல்லுனர். மேலை நாட்டு திருச்சபைக்கு எதிராக தோன்றிய ஆரியப் பிதற்றலை சுட்டெரிக்கும் தீயாக இவர் திகழ்ந்தார்.இதனால் இவர் கீழைத்திருச்சபையைச் சார்ந்த பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் தூயதமதிரித்துவத்தை பற்றி அழகாக எழுதினார். இந்த நூலில் இறைமகன் இயேசுவின் தெய்வீகமும் இறைதந்தையுடன் இயல்பாக இவர் கொண்டுள்ள பிரிக்கவெண்ணாத நட்புறவும் மிளிர்கின்றன. கிரேக்க அறிவொளித் தந்தையர்களின் திருமறைப்புதயல்களை மேலைநாட்டு தந்தையர்களுக்கு அறிமுகம் செய்தவர் இவர். கீழைத்திருச்சபையில் செழிந்தோங்கிய துறவற சபைகளின் அடிப்படைகளை மேலைத்திருச்சபைக்கும் எடுத்துச் செல்ல டூர்ஸ் நகர் ஆயரான புனித மார்ட்டினுக்கு வழிகாட்டியாக அமைந்தார்.
இலத்தீன்மொழியில் எழில்மிகு திருவழிபாட்டுப் பாடல்களை தொகுத்தளித்தார். பதிதர்கள் எப்படி, பாடல் வழி மக்களை கவர்ந்நிழுக்கின்றனர். என்று சுட்டிக்காட்டி நாம் அவர்களுக்கு பின்தங்கி இருத்தல் கூடாதென்று சொல்லி பாடல்களைத் தொகுக்க ஊக்கமளித்தார். இவர் திருமணமானவர். வேற்று மறையிலிருந்து வெளியேறி திருமறையைத் தழுவியவர். வாழ்க்கையின் உண்மை இரகசியத்தை தழுவியவர். வாழ்க்கையின் உண்மை இரகசியம் எது? ஏன்ற வினா இவரது உள்ளத்தில் ஓயாமல் எழுந்தது. அதற்கு விடை காண திருமறை நூல்களைப் படித்தார். அங்கேதான் தம் வனாக்களுக்கான பொருத்தமான விடைகள் கிடைத்தன என்று குறிப்பிடுகிறார்.
இவருடைய நாள்களில் அலைக்சாண்டிரியா நகரைச் சார்ந்த ஆரியுஸ், கிறிஸ்துவிடம் தெய்வத் தன்மை இல்லை என்ற பெருந்தவற்றை விரைவாக பரப்பி வந்தான். பிரான்சிலும் இந்த தீங்கு நுழையும் நிலையிலிருந்தது. இவர் இதை வன்மையாக கண்டிக்க முயற்சி எடுத்த போது ஆரியத் தீங்கினால் ஏமாற்றப்பட்டிருந்த கொன்ஸ்டான்சியஸ் என்ற மன்னன் இலாரியாரை ஆசியா மைனரில் இருந்த பிரியாவுக்கு நாடு கடத்தி விட்டான். ஆங்கே 3 ஆண்டுகள் அகதியாயிருந்த சூழலில் தான் அவர் தம் நூல்களில் எல்லாம் இன்றுவரை மிக மேலானதாக கருதப்படும் “தூய தமத்திருத்துவம்” என்ற நூலை எழுதி வைத்தார்.
பின்னர் 359ம் ஆண்டு செலிசியாவில் நடந்த கலந்துரையாடலில் திருச்சபையின் ஆயர் பேரவையின் பெயரால் கலந்து கொள்ள அழைப்புப் பெற்று அங்கு சென்றார். அங்கிருந்து அதே ஆயர் பேரவையின் பிரதிநிதிகளில் ஒருவராக கொன்ஸ்டான்டிநோபிளுக்கு ஆரியுஸ் மன்னனின் தவறான கொள்கையை சுட்டிக்காட்ட சென்றார். மன்னன் பிடிவாதமாக தவற்றில் நிலைக்கவே இலாரியார் பிரான்ஸ் திரும்பினார். 361ல் அங்கு அவருக்கு எழுச்சிமிக்க வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அங்கே 7 ஆண்டுகள் திருப்பணியாற்றிய பிறகு இறைவனடி சேர்ந்தார்.

பொதுக்காலம், வாரம் 1 சனி

முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4.17-19; 10: 1

அந்நாள்களில் பென்யமின் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்யமினியன் அபியாவுக்குப் பிறந்த பெக்கோராத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குப் பிறந்தவர். அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும்விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர். சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேடிப் போ என்றார். அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார்; அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார், அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார், அங்கும் அவை தென்படவில்லை. சாமுவேல் சவுலைக் கண்டதும், ஆண்டவர் அவரிடம், இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான் என்றார். சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும் என்று கேட்டார். சாமுவேல் சவுலுக்குக் கூறியது:  நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.” அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து, அவரை முத்தமிட்டுக் கூறியது:ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 21: 1-2. 3-4. 5-6

பல்லவி: உமது வல்லமையில் ஆண்டவரே, அரசர் பூரிப்படைகின்றார்.

ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்;
நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்;
அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. பல்லவி

உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்;
அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.
அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;
நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். பல்லவி

நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று.
மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்.  உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;
உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.: மாற்கு 2:13-17

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17

இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.