ஆண்டின் பொதுக்காலம், வாரம் 2 – செவ்வாய்

முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1-13

அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார். அதற்குச் சாமுவேல், “எப்படிப் போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்று விடுவானே?” என்றார். மீண்டும் ஆண்டவர், “நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! `ஆண்டவருக்குப் பலியிட வந்துள்ளேன்” என்று சொல்; ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்பொழுது நீ செய்ய வேண்டியது என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்” என்றார். ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்த பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர்கொண்டு வந்து, “உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே” என்று கேட்டனர். அதற்கு அவர், “ஆம் சமாதானம் தான்; ஆண்டவருக்குப் பலிசெலுத்த வந்துள்ளேன்; உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்” என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார். அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்து விட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். அடுத்து, ஈசாய் அபினதாபை அழைத்து சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். அவர், “இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்று கூறினார். பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். “ஆண்டவர் இவனையும் தேர்ந்து கொள்ளவில்லை” என்றார் சாமுவேல். இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். “இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, “உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா?” என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், “ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், “தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து, அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 89: 19. 20-21. 26-27

பல்லவி: என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடித்தேன்.

முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது:
வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்;
மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். பல்லவி

என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்;
என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்;
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். பல்லவி

`நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்;
மண்ணகத்தில் மாபெரும் மன்னன் ஆக்குவேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா. : மாற்கு 2:23-28

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28

ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறை இல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *