முதல் வாசகம்
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16
சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார். ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. “ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?” நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்: திபா 145: 8-9. 10-11. 12-13. 13-14
பல்லவி: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர்.
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். –பல்லவி
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். –பல்லவி
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு;
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. –பல்லவி
உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்;
தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.
தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார்.
தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். –பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது. “வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.