திருவிழா தொடக்க வழிபாடுகள்

மன்னார் தூய பேராலயப் பாதுகாவலர் தூய செபஸ்தியான் திருவிழா தொடக்க வழிபாடுகள் இன்று மாலை ஆரம்பமாகியது . மேலும் அறிய திருவிழா தொடக்க வழிபாடுகள்

தூய செபஸ்தியார் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று

மன்னார் மறைமாவட்டத்தின் பேராயலத்தின் பாதுகாவலரான தூய செபஸ்தியார் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று (11.01.2018) வியாழக்கிழமை ஆரம்பமாகின. இன்று மதியம் 12.00 மணிக்கு பேராலய முன்றலில் பங்கு மக்களும் பணியாளர்களும் ஒன்று கூடியிருக்க திருவிழாவிற்கான தூய செபஸ்தியாரின் கொடியினை பங்குத்தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளார் , ஆன்மிகச் சம்பிரதாய முறைப்படி இறை வேண்டுதலோடு ஆசிர்வதித்து ஏற்றி வைத்தார். மேலும் அறிய தூய செபஸ்தியார் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று

பொதுக்காலம், வாரம் 1 வியாழன்

முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில் இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினர், பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர். பெலிஸ்தியர் இஸ்ரயேலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல, போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுள் நாலாயிரம் பேரைப் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்தினர். வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பியபோது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி, கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டுவரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்னியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேலர் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரத்தைக் கேட்டதும் பெலிஸ்தியர், எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்தினுள் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டனர். அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு, கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை! நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலைநிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்! பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!என்றனர். பெலிஸ்தியர் மீண்டும் போர்தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்குத் தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 44: 9-10. 13-14. 23-24

பல்லவி: உமது பேரன்பை முன்னிட்டு ஆண்டவரே, எங்களை மீட்டருளும்.

இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்; இழிவுபடுத்திவிட்டீர்.
எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.
எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர்.
எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர். பல்லவி

எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்;
எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.
வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்;
ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர். பல்லவி

என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்;
எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.
நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக்கொள்கின்றீர்?
எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்துவிடுகின்றீர்? பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா: மாற்கு 1:40-45

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.