ஜீன்:19
புனித ரோமுவால்ட்
மடாதிபர் – (கி.பி.952-1027)
இவர் இத்தாலியில் ரவென்னா நகரில் பிரபு குலத்தில் தோன்றியவர்.20 வயதுவரை மனம்போன போக்கில் வாழ்ந்தவர். ஒருமுறை இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக இவரின் கண்ணெதிரில் கொன்று போட்டார். இதற்கு கழுவாயாக ஆசீர்வாதப்பர் சபை ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கு கடும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும் பின்னர் பிரனீஸ் மலைப்பகுதியிலும் ஜெபதவ வாழ்க்கையை மேற்கொண்டார்.
இடுத்த 30 ஆண்கள் அளவாக வட இத்தாலி, தென் பிரான்ஸ், தென் ஸ்பெயின் பகுதிகளில் துறவு மடங்களில் ஒழுங்குகளை பற்றுறுதியுடன் கடைப்பிடிக்க வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு மனித வாடையே இல்லாத சூழலில் குடிசைகள் அமைத்துக் கொடுத்தார். அதில் ஒரு மடம் தான் கமல்டொலி என்ற இடத்தில் அப்பினைன் மலை உச்சியில் கி.பி.1012ம் ஆண்டு 5 குடிசைகள் கொண்டதாக அமைந்துள்ளது.
புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபையை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் கமல்டொலில் நிறுவப்பட்ட மடம்தான் கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவறசபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலைத்திருச்சபையில் தவ முனிவர்களுக்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை ஒரு பணித்தளம் ஒரு தோட்டம் இவற்றைப்பெற்றுக் கொண்டு அங்கே என்றும் மௌனம், தனிமை இவற்றினிடையே இறைபணிபுரிகிறார். வேளி உலகத் தொடர்பை அவர் நினைத்தும் பார்க்க முடியாது.
இப்புனிதரின் வாழ்க்கை வரலாறு பற்றி விபரிக்கும் புனித பீற்றர் டேமியன் இவ்வாறு கூறுகிறார்: “ரோமுவால்ட்டு உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும் ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார்!” மௌனமும் கடும் தவமுயற்சிகளும் தான் இச்சபையின் சிறப்புக் கூறுகள். கி.பி.1086ம் ஆண்டு முதல் பெண்கக்கும் அவர்களின் நிலைக்கேற்ப கமெல்டொலிஸ் மடங்கள் தோன்றத் தொடங்கின. புனிதரின் கல்லறையில் பல புதுமைகள் நிகழ்ந்ததாக குறிப்புக்கள் உள்ளன. இதன் காரணமாக இவர் இறந்து 5 ஆண்டுகளிற்குப்பின் இவரது கல்லறை மீது ஒரு ஓர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. கி.பி.1466ல் இவரது உடல் அழியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.