37வது ஆண்டின் நிறைவு

நம் முன்னோரின் விசுவாசத்தால் வளம் பெற்ற மன்னார் மறைமாவட்டம், யாழ் மறைமாவட்டத்தின் நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டுதன் 37வது ஆண்டின் நிறைவு தை மாதம் 24ந் திகதியாகும். இதனையொட்டி இன்று 27.01.2018 சனிக்கிழமை தோட்ட வெளி மறை சாட்சியரின் தூய அன்னை ஆலயத்தில் நன்றித் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் தலைமையில் பல அருட்பணியாளர்கள் இணைந்து ஒப்புக் கொடுத்தனர். மேலும் அறிய 37வது ஆண்டின் நிறைவு

ஜனவரி:27 புனித மெர்சி ஆஞ்செலா

ஜனவரி:27
புனித மெர்சி ஆஞ்செலா கன்னி-(கி.பி.1472-1540)

 

அர்சுலைன் துறவற சபை நிறுவுநர். சிறுவயதிலிருந்தே கடுமையான தவமுயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ரொட்டித்துண்டு, சில காய்கறிகள், தண்ணீர் மட்டுமே இவருடைய அன்றாட உணவாக இருந்தது. இந்த நிலையில் புனித பிரான்ஸ்சிசின் 3ம் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இத்தாலியில் ப்ரெஸ்யா என்ற ஊரில் திருச்சபையிலேயே முதன் முதலாக இவரது முயற்சியால் பெண்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கென்று துறவற சபை தோன்றியது. பத்து வயதில் பெற்றோரை இழந்தார். அதன்பின் வசதி நிறைந்த அவரது மாமாவிடம் வளர்ந்து வந்தார். அப்போது தான் தாம் வாழ்ந்த சூழலில் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களுக்கு மறைக்கல்வி எத்துணை இன்றியமையாதது என்று உணர்ந்தார். இவர் தம்முடன் பிரான்சிஸ்கன் 3ம் சபையைச் சார்ந்த இளம் பெண்கள் பலரையும் சேர்த்துக் கொண்டார். ஒருமுறை தோழியர் சிலருடன் புனித நாடுகளுக்கு திருப்பயணம் மேற்கொண்டார். கிரீட் நாட்டை அடைந்த பொழுது பார்வையை முற்றிலும் இழந்தார். இதனால் தாயகம் திரும்பி விடலாம் என்று மற்றவர்கள் சொன்ன போது திருப்பயணத்தை மேற்கொள்வோம் என்று உறுதிபடக் கூறினார். எனவே திருப்பயணத்தை தொடர்ந்தனர். என்னே வியப்பு! திருத்தலத்தின் எல்லா இடங்களையும் நல்ல பார்வை உள்ளவர் போல் கண்டுகளித்தார். தாயகம் திரும்பும் வழியில் கிரீட் நகரில் ஒரு பாடுபட்ட சுரூபத்திற்கு முன் செபித்துக்கொண்டு இருக்கும் போது எந்த இடத்தில் பார்வை இழந்தாரோ அதே இடத்தில் ஆண்டவர் அவருக்கு அற்புதமாக பார்வையை மீண்டும் அளித்தார்.
இவர் அடிக்கடி கூறியது குடும்பங்களிலே தலைவிரித்தாடும் தீமைகளை களையாவிடில் சமுதாயத்தில் அத்தகைய தீமைகளை களைய முடியாது. வருங்கால தலைமுறைப் பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்துத்தான் குடும்பங்களில் ஆழமான கிறிஸ்தவ வாழ்வை தோற்றுவித்து அதையே சமுதாயத்திலும் நிலைநாட்ட வேண்டும். இவர் உயிரோடு இருந்தவரை இச் சபையினர் துறவற வார்த்தைப்பாடு கொடுக்க அனுமதி பெறவில்லை. இவரது இறப்புக்கு பிறகே திருச்சபை சட்டதிட்டங்களின் படி வார்த்தைப்பாடுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழ்வு தொடங்கப்பட்டது. இதற்கு மூலகாரணமாக அமைந்தவர் புனித சார்லஸ் பொரமேயோ.
வட அமெரிக்காவில் முதன்முதலாக 1639ம் ஆண்டு க்யுபெக் நகரில் பெண்களுக்கு அர்சுலைன் துறவிகளால் கல்விக்கூடம் உருவாக்கப்பட்டது. புனித அர்சுலா ஆஞ்சலாவின் காலத்திற்கு முன்பிருந்தே பெண்களின் நலனுக்காக உழைத்தவர். இவர் மேலை நாட்டின் பல்கழைக்கழகங்களின் பாதுகாவலராகவும் தேர்ந்து கொள்ளப்பட்டிருந்தார். எனவே அர்சுலாவை தமது சபைப் பாதுகாவலியாகத் தேர்ந்து கொண்டார்.

பொதுக்காலம், வாரம் 3 சனி

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7.10-17

அந்நாள்களில் ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான். உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார். அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வரவழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப்பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்” என்று கூறினார். அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார். பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது. தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக் கிடந்தார். அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பம் இல்லை. அவர்களோடு அவர் உண்ணவும் இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 51: 10-11. 12-13. 14-15


பல்லவி: தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே, கடவுளே! படைத்தருளும்.

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.: மாற்கு 4:35-41

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி