சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம் இன்று 28.02.2018 புதன் கிழமை காலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் அறிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம்

02ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்


வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20

 
யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்” என்றனர்.

ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும். நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழி பறித்திருக்கின்றார்கள்; அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 31: 4-5. 13. 14-15

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். பல்லவி

பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். பல்லவி

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; `நீரே என் கடவுள்’ என்று சொன்னேன். என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும், என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

`உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,’ என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 17-28

 

அக்காலத்தில் இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து, “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்.

ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்று அவர்களிடம் கூறினார். பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். “உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார்.

அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.

அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் “எங்களால் இயலும்” என்றார்கள்.

அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர்மீதும் கோபங் கொண்டனர்.

இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

02ஆம் வாரம் – செவ்வாய்

  முதல் வாசகம்


நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20

 

எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாய் இருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.

உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்கிறார் ஆண்டவர்; ” உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.

மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 50: 8-9. 16-17. 21, 23

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.

நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக்கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக் கின்றேன்.  நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

 
அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

 

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்.

ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப்பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறாhர்கள்.

விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால் நீங்கள் `ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர் சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்படவேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

02ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

 

நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4-11

 

என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம்.

எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை. என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே.

ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.

ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 79: 8. 9. 11. 13

பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.

 

எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். பல்லவி

எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. பல்லவி

அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.

 

நற்செய்தி வாசகம்

 
மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

 

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

முதல் வாசகம்


உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

 

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாக வும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 119: 1-2. 4-5. 7-8

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

 

மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். பல்லவி

ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! பல்லவி

உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன். 8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

 நற்செய்தி வாசகம்

 
உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

 

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பிப்ரவரி:23 புனித பொலிக்கார்ப்

பிப்ரவரி:23

புனித பொலிக்கார்ப்
ஆயர், மறைசாட்சி-(கி.பி.156)

இப் புனிதர் “அப்போஸ்தலிக்க தந்தையர்கள்” என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற குழுவைச் சார்ந்தவர். நற்செய்தியாளர் புனித யோவானின் சீடர். போலிக்கார்ப்பிடம் மறைக்கல்வி கற்று தேர்ந்தவர்கள். புனித இரனேயுசும், பாப்பியாசும் ஆவார். அந்தியோக்கியா நகர் ஆயர் புனித இஞ்ஞாசியார் கொலைக் களத்திற்கு சங்கிலி போட்டு இழுத்துச் செல்லப்பட்ட போது ஸ்மிர்னா நகரில் போலிக்கார்ப் அவரைச் சந்தித்து அவர் கட்டப்பட்டிருந்த சங்கிலியை வணக்கத்துடன் முத்தமிட்டார். “அந்தியோக்கியா நகர் திருச்சபையை கவனித்துக் கொள்ளும்” என்று இவரை உருக்கமாக கேட்டுக் கொண்டார் இஞ்ஞாசியார்.
கொடுங்கோலன் மார்க்கஸ் ஆலியுஸ் ஆட்சியின் 6ம் ஆண்டில் பெரும் வேத கலாபனை தோன்றியது. பலரும் துணிச்சலுடன் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டார்கள். போலிக்கார்ப்பை விசுவாசிகள் ஒளிந்து கொள்ளும்படி கேட்டனர். அவ்வாறு மறைந்த நேரம் ஒருவன் அவரை காட்டிக் கொடுத்தான். அவரை கைதியாக்க வந்த கும்பலைப் பார்த்து சற்றுநேரம் செபித்து விட்டு வர இசைவு கேட்டார். இவர்களுக்கு இரவு உணவளித்தார்.
பின்னர் ஆர்ப்பரிப்புடன் கிளம்பினார். “கிறிஸ்துவை மறதலித்தால் உனக்கு விடுதலை” என்று முழங்கினான் மன்னன். “86 ஆண்டுகளாக அவருக்கு ஊழியம் புரிந்து வருகிறேன். அவர் எனக்கு எவ்வித தீங்கும் இழைக்கவில்லை. இத்தகையவரை நான் பழித்துரைப்பேனா? நான் ஒரு கிறிஸ்தவன்” என்று அச்சமின்றி பதிலுரைத்தார். இவ்வாறு விடையளித்த போது அவரது முகம் தெய்வீக ஒளியுடன் காணப்பட்டது. “இவன் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்று ஆணை பிறக்கவே, எதிர்ப்பாளர்கள் வெறியுடன் அங்குமிங்கும் ஓடி விறகுக் கட்டைகளை கொண்டு வந்து சேர்த்தனர். “நான் அஞ்சி அழுது ஓடமாட்டேன். எனவே என்னைக் கட்ட வேண்டாம். எனக்கு உறுதியூட்டும் தெய்வம் நான் அசைவுறாதிருக்க வரமருள்வார்” என்றார். எனவே கைகளை மட்டும் முதுகுப் புறம் கட்டினார்கள். நெருப்பு மூட்டப்பட்டது. ஆனால் அவ்வேளையில் ஒரு புதுமையும் நிகழ்ந்தது. விறகுக் கட்டைகள் விரைவாக பற்றி எரிந்தாலும் நான்கு சுவர்கள் எழும்பி அவரைப் பாதுகாப்பது போல் தோன்றியது! அவரது தசை எரியும் போது தீயநாற்றத்திற்குப் பதில், நறுமணப் புகை வந்து கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கொடுங்கோலன் அவரை ஈட்டியால் குத்தி கொல்ல கட்டளையிட்டான். அப்போது அவர்மீது ஒரு புறா பறந்து வந்தது. நெருப்பை அணைக்க போதுமான இரத்தம் மேலிருந்து புறப்பட்டு வந்தது. வெறித்தனம் நீங்காத சூழலில் அவரது உடலை அரக்கன் எரித்துச் சாம்பலாக்கினான். இந் நிகழ்ச்சி கி.பி155ல் இதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு நடந்ததாக வரலாறு கூறுகிறது.

முதல் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்


தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28

 ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.

அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.

ஆயினும், `தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 130: 1-2. 3-4. 5-6யஉ. 7-8

பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

 

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6யஉ விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.


நற்செய்தி வாசகம்

 

நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

 

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்:

“கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

பிப்ரவரி 22 – திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா

முதல் வாசகம்

நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள்.

உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 23: 1-3. 4. 5. 6

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி

சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர். (அல்லேலூயா.)

நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பிப்ரவரி:22 புனித பேதுருவின் தலைமைப்பீடம்

பிப்ரவரி:22
புனித பேதுருவின் தலைமைப்பீடம்

ஆண்டவர் இயேசு திறவுகோலின் அதிகாரத்தை பேதுருவிடம் ஒப்படைத்தார். இவ்வாறு பேதுரு பெருமைப்படுத்தப்பட்டதை நினைவு படுத்தவே இந்த திருநாள் கி.பி.354ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளைக் கொண்டாடுவதன் மூலம் பேதுருவுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். இறைவனின் சிறந்த பேணுதலால் அவர் திருச்சபையின் தலைவராக நியமனம் பெற்றார் எனவும் நினைவு கூர்கிறோம். எல்லாத் திருத்தந்தையர்களும் பேதுருவின் வழித் தோன்றல்கள். எனவே அவர்கள் கிறிஸ்து ஏற்படுத்திய ஒரே திருச்சபையின் தலைவர்கள். இவர்களனைவரும் கிறிஸ்துவின் போதனைகளை நமக்கு கற்றுக் கொடுக்கின்றனர்.
“காத்தேட்ரா” என்பதற்கு ஆயரின் அரியணை என்பது பொருள். இதிலிருந்து தோன்றும் சொல்தான் “கத்தீட்ரல்” என்பது. ஆயரின் ஆலயம் இருக்கும் அரியணை தான் “கத்தீட்ரல்” என்று அழைக்கப்படுகிறது. புனித பேதுரு தலைமைப்பீடம் என்பது பேதுரு திருச்சபையின் தலைவர் என்பதைக் குறிக்கிறது. இத்திருநாளுக்குரிய கட்டளை செபத்தின் இரண்டாம் வாசகத்தில் கூறப்படுவது போல் “ இத்திருநாளைக் கொண்டாடுவதன் மூலம் குருத்துவப் பணி பெருமைப்படுத்தப்படுகிறது.”

இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மகத்தான வரவேற்பளித்தது.

மன்னார் மறை மாவட்டத்தின் வவுனியா மறைக் கோட்டத்தின் தலைமை ஆலயமாக உள்ள வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு கடந்த 18.02.2018 ஞாயிற்றுக் கிழமை மகத்தான வரவேற்பளித்தது. மேலும் அறிய இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மகத்தான வரவேற்பளித்தது.