நோயில் பூசுதல்

நோயில் பூசுதல்

திருவருட்ச்சாதனங்கள் பற்றி திருச்சபை சட்டநூலின் படிப்பினைகள்

நூல் – 4

பகுதி 1

தலைப்பு 4

நோயில்பூசுதல் அருளடையாளம்

திருச்சபை சட்டம் 998. நோயில்பூசுதலால், ஆபத்தான நிலையில் நோயுற்றிருக்கும் விசுவாசிகளை, பாடுபட்டு, மாட்சிமை பெற்ற ஆண்டவரிடம் திருச்சபை ஒப்படைக் கிறது. இவ்வாறு அவர் அவர்களின் துன்பத்தைத் தணித்து அவர்களை மீட்க முடியும். இவ்வருளடையாளம், எண்ணெயால் பூசுவதாலும் திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்து வதாலும் அளிக்கப்படுகிறது.

இயல். 1

அருளடையாளக் கொண்டாட்டம்.

தி.ச. 999. ஆயரைத் தவிர, நோயில் பூசுதலில் பயன்படுத்தவேண்டிய எண்ணையை மந்திரிக்கக் கூடியவர்கள்:

1) சட்டத்தில் மறைமாவட்ட ஆயருக்கு இணையானவர்கள்.

2) ஓர் அவசரத் தேவை எழும்போது, எந்த ஒரு குருவும் அருளடையாளக் கொண்டாட்டத்தின் போது மட்டும்.

தி.ச. 1000. திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் சடங்குமுறையையும் மற்றும் செயல்முறையையும் கடைப்பிடித்து, பூசுதல்களைத் துல்லியமாக நிறைவேற்றவேண்டும். இருப்பினும் ஓர் அவசரத் தேவை எழும் போது முழுவாய்ப்பாட்டைப் பயன்படுத்தி, நெற்றியில் அல்லது உடலின் மற்றொரு பகுதியில்கூட, ஒரே பூசுதல் போதுமானது.

2) பணியாளர், ஒரு கருவியைப் பயன்படுத்துவதைக் கனமான ஒரு காரணம் தூண்டினாலன்றி, தம் சொந்தக் கையால் பூசவேண்டும்.

தி.ச. 1001. ஆன்ம மேய்ப்பர்களும், நோயாளிகளுக்கு நெருக்கமானவர்களும், நோயாளிகள் உரிய நேரத்தில் இவ்வருளடையாளத்தால் ஆதரவு பெறும் வண்ணம் கவனித்துக்கொள்ளவேண்டும்.

தி.ச. 1002. மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளுக்கு ஏற்ப, உரிய விதத்தில் தயாரிக்கப்பட்டு, சரியான ஏற்புடைய நிலையில் இருக்கும் பல நோயாளிகளுக்கு, ஒரே நேரத்தில் நோயில் பூசுதல் பொதுக்கொண்டாட்டம் நிறைவேற்றலாம்.

இயல் 2.

நோயில் பூசுதலின் பணியாளர்.

தி.ச. 1003. ஒவ்வொரு குருவும் மற்றும் ஒரு குரு மட்டுமே, நோயில் பூசுதல் அருளடையாளத்தைச் செல்லத்தக்கவிதத்தில் வழங்கமுடியும்.

2) ஆன்ம அக்கறை ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து குருக்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் நோயில்பூசுதல் வழங்கும் கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர்.நியாயமான ஒரு காரணத்திற்காக, வேறெந்த ஒரு குருவும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள குருவின் குறைந்த அளவு ஊகிக்கப்பட்ட ஒப்புதலுடன் இவ்வருளடையாளத்தை வழங்கலாம்.

3) எந்த ஒரு குருவும், ஓர் அவசரத் தேவை எழும்போது, நோயில்பூசுதல் அருளடையாளத்தை வழங்குவாற்காக, ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெயைத் தம்முடன் எடுத்துச்செல்லலாம்.

இயல் 3

நோயில்பூசுதல் அளிக்கப்பெற வேண்டியவர்கள்.

தி.ச. 1004. அறிவுப்பயன்பாடு அடைந்த, நோய் அல்லது முதுமையின் காரணமாக இறக்கும் ஆபத்துத் தொடங்கும் நிலையில் இருக்கும் எந்த விசுவாசிக்கும் நோயில்பூசுதல் அளிக்கலாம்.

2) நோயாளி குணமடைந்தபின் மீண்டும் கவலைக்குரிய விதத்தில் நோய்வாய்ப்பட்டால், அல்லது அதே நோயில் ஆபத்து மிகவும் கவலைக்குரியதாகிவிட்டால், இவ்வருளடையாளத்தை மீண்டும் அளிக்கலாம்.

தி.ச. 1005. நோயாளி அறிவுப் பயன்பாடு அடைந்து விட்டாரா அல்லது அவர் ஆபத்தான நிலையில் நோயுற்றிருக்கினறாரா அல்லது அவர் இறந்து விட்டாரா என்ற ஐயம் இருந்தால் இவ்வருளடையாளத்தை அளிக்ககவேண்டும்.

தி.ச. 1006. தன்னுணர்வோடு இருந்தபோது, குறை ந்தஅளவு மறைமுகமாக இவ்வருளடையாளத்தைக் கேட்டுக்கொண்ட நோயாளிகளுக்கு அதனை அளிக்க வேண்டும்.

தி.ச. 1007. வெளிப்படையான, கனமான பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பவர்களுக்கு நோயில்பூசுதல் அளிக்கக்கூடாது.

வழிபாடு

தொடக்கம்:

குரு : ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக.
எல் : உம்மோடும் இருப்பதாக.
குரு : (நோயாளியின் மீதும் அறையிலும் தீர்த்தம் தெளித்துக் கொண்டு) இத்தீர்த்தம் நாம் பெற்ற திருமுழுக்கை நினைவூட்டுவதாக, தம் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட கிறிஸ்துவையும் நமக்கு நினைவுப்படுத்துவதாக.

அன்புள்ள சகோதரர்களே, நோயுற்றோர் உடல் நலம் தேடி ஆண்டவரிடம் வந்தார்கள் என்று நற்செய்தி கூறுகிறது. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்காக கொடிய பாடுபட்ட எம்பெருமான், இதோ, தம் பெயரால் கூடியிருக்கும் நம் மத்தியில் எழுந்தருளியிருக்கிறார்.

உங்களுள் யாரேனும் நோயிற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர் மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும் போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார் என்று அப்போஸ்தலரான புனித யாகப்பர் வழியாக நமக்குக் கட்டளை தருபவரும் அவரே.

எனவே, நோயிற்றிருக்கும் நம் சகோதரர் (சகோதரி) மீது கிறிஸ்து பெருமானின் அருளும் வல்லமையும் இறங்கி இவரது வேதனையைத் தணித்து, உடல் நலம் அருளுமாறு உருக்கமாக மன்றாடுவோம்.

மன்னிப்பு :

குரு : சகோதரரே இத்திருச்சடங்கில் நாம் தகுதியுடன் பங்கு பெற, நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும்
குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!
மக் : ஆமென்.

இறைவாக்கு :

சகோதரரே, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் கேட்போம் :

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்,.. (மத். 8 : 5 – 13)

மன்றாட்டுக்கள் :

குரு : சகோதரரே, நம் சகோதரர் (சகோதரி) ….க்காக இறைவனைத் தாழ்ந்து பணிந்து விசுவாசத்தோடு வேண்டிக் கொள்வோம்.

  1. ஆண்டவரே, இத்திருப்புசுதல் வழியாகத் தேவரீர் பரிவன்புடன் இவரைச் சந்தித்துத் தேற்றியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
    எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.
  2. தீமை அனைத்திலுமிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. இங்குள்ள நோயாளிகள் அனைவருடைய வேதனைகளையும் நீர் தணித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் நீர் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.
  5. இவரைப் பாவத்திலிருந்தும், சோதனை அனைத்திலு மிருந்தும் விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  6. குரு : உமது பெயரால் நாம் இவர் தலைமீது கைகளை வைப்பதால், இவருக்கு நல் வாழ்வும், உடல் நலமும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

திரு எண்ணெய் மீது நன்றி மன்றாட்டு :

குரு : எங்களுக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் உம் திருமகனை உலகிற்கு அனுப்பிய எல்லாம் வல்ல தந்தையாம் இறைவா, போற்றி.

எல் : இறைவா போற்றி, போற்றி.

குரு : எங்கள் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்து, எங்கள் பிணிகளைப் போக்கத் திருவுளமான ஒரே திருமகனான இறைவா, போற்றி.

எல் : இறைவா போற்றி, போற்றி.

குரு : உமது நிலையான வல்லமையால் எங்கள் உடலின் சோர்வினைப் போக்கி, திடப்படுத்தி எங்களுக்குத் துணை நிற்கும் தூய ஆவியாம் இறைவா, போற்றி.

எல் : இறைவா போற்றி, போற்றி.

குரு : அன்புத் தந்தையே, உம் அடியார் மீது திரு எண் ணெய் பூசுகிறோம். இதனால் இவர் வேதனை தணிந்து, ஆறுதல் பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

திரு எண்ணெய் பூசுதல் :

(குரு நோயாளியின் நெற்றியிலும் கைகளிலும் திரு எண்ணெய் பூசி கூறுவதாவது 🙂

இப்புனித பூசுதலினாலும், தம் அன்பு மிகுந்த இரக்கத் தாலும், ஆண்டவர் தூய ஆவியின் அருளைப் பொழிந்து உமக்குத் துணை புரிவாராக.

எல் : ஆமென்.

குரு : இவ்வாறு, உம் பாவங்களைப் போக்கி, உமக்கு நலம் அளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக.

எல் : ஆமென்.

குரு : செபிப்போமாக. இரக்கமுள்ள எங்கள் மீட்பரே, தூய ஆவியின் அருளால், இந்த நோயாளியின் சோர்வையும் பிணிகளையும் தணித்து, இவருடைய புண்களை ஆற்றி பாவங்களைப் போக்கி, உள்ளத்திலும் உடலிலும் இவர் படும் வேதனைகளை அகற்றி, உள்ளும் புறமும் இவர் முழுமையாக நலம்பெறத் தயைபுரியும். இவ்வாறு இவர் உமது பரிவன்பினால் நலமடைந்து, பழைய நிலை பெற்று, தம் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்று வாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்தபடியே நாம் ஒருமித்து இறைவனை வேண்டுவோம்.

எல் : பரலோகத்தில் இருக்கிற….
(தேவைப்படின், இங்கு இறுதி வழியுணவு வழங்கலாம்.)

ஆசீர் :

குரு : தந்தையாகிய இறைவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.

எல் : ஆமென்.

குரு : இறைவனின் திருமகன் உம்மைக் குணப்படுத்துவாராக.

எல் : ஆமென்.

குரு : தூய ஆவி உம்மீது ஒளிவீசுவாராக.

எல் : ஆமென்.

குரு : உமது உடலைக் காத்து ஆன்மாவை மீட்பாராக.

எல் : ஆமென்.

குரு : உமது உள்ளத்துக்கு ஒளிதந்து உம்மை வானக வாழ்வுக்கு வழி நடத்துவாராக.

எல் : ஆமென்.

குரு : இங்கிருக்கும் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆசீர்வதிப்பாராக.

எல் : ஆமென்.