உறுதிப்பூசுதல்

 உறுதிப்பூசுதல்

திருவருட்ச்சாதனங்கள் பற்றி திருச்சபை சட்டநூலின் படிப்பினைகள்

நூல் – 4

பகுதி 1

தலைப்பு 2

உறுதிப்பூசுதல் அருளடையாளம்

திருச்சபை சட்டம் 879. உறுதிப்பூசுதல் அருளடையாளம் ஒரு முத்திரையைப் பதிக்கின்றது. இதனால் திருமுழுக்குப் பெற்றவர்கள் தங்கள் கிறிஸ்தவப் புகுநிலைப் பயணத்தைத் தொடர்கின்றனர், தூய ஆவியின் கொடையால் வளமையடைகின்றனர், திருச்சபையுடன் மிகவும் நிறைவாகப் பிணக்கப்படுகின்றனர், இவ்வருளடையாளம் அவர்களை உறுதிப்படுத்துகின்றது, சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவின் சாட்சிகளாக இருக்கவும், விசுவாசத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் மிகவும் உறுதியுடன் கடமைப்பட்டுள்ளனர்.

இயல் 1

உறுதிப்பூசுதல் கொண்டாட்டம்

தி.ச.880. உறுதிப்பூசுதல் அருளடையாளம் முன்னெற்றியில் கிறிஸ்மா தைலம் பூசுதல் வழியாக அளிக்கப்படுகிறது. இது கைகளை வைப்பதாலும், அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் வழியாகவும் அளிக்கப்படுகிறது.

2) உறுதிப்பூசுதல் அருளடையாளத்தில் பயன்படுத்தவேண்டிய கிறிஸ்மா தைலம், அருளடையாளம் குருவால் அளிக்கப்பட்டாலும்கூட, ஆயரால் திருநிலைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

தி.ச.881. உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை ஆலயத்தில், அதுவும் திருப்பலியின்போது கொண்டாடுவது விரும்பத்தக்கது, இருப்பினும், நியாயமான மற்றும் அறிவுக்கொத்த ஒரு காரணத்திற்காக, திருப்பலிக்குப் புறம்பே தகுதியான இடத்தில் கொண்டாடலாம்.

இயல் 2

உறுதிப்பூசுதல் பணியாளர்;

தி.ச.882. உறுதிப்பூசுதலின் சாதாரணப்; பணியாளர் ஆயர், பொதுச்சட்டம் அல்லது தகுதி வாய்ந்த அதிகாரியின் சிறப்புச் சலுகை மூலம் இச்செயலுரிமை பெற்றுள்ள குருவும் இவ்வருளடையாளத்தைச் செல்லத்தக்கவிதத்தில் அளிக்கிறார்.

தி.ச.883. கீழ்க்கண்டவர்கள் சட்டத்தினாலேயே உறுதிப்பூசுதல் அளிக்கும் செயலுரிமையைக் கொண்டுள்ளனர்:-

1) தங்களுடைய எல்லை வரம்பிற்குள், சட்டப்படி மறைமாவட்ட ஆயருக்கு இணையானவர்கள்

2) உறுதிப்பூசுதல் பெறும் ஆளைப் பொறுத்தவரை, தமது பதவி அல்லது மறைமாவட்ட ஆயரின் ஆணையின் காரணமாக, குழந்தைப் பருவத்தைக் கடந்த ஒருவருக்குத் திருமுழுக்கு அளிக்கும் அல்லது ஏற்கெனவே திருமுழுக்குப் பெற்ற ஒருவரைக் கத்தோலிக்கத் திருச்சபையின் முழு உறவு ஒனிறிப்பில் ஏற்கும் குரு,

3) இறக்கும் ஆபத்தில் இருப்பவரைப் பொறுத்தவரை, பங்குக்குரு அல்லது உண்மையில் யாராவது ஒரு குரு,

தி.ச.884. மறைமாவட்ட ஆயர் தாமே இவ்வருளடையாளத்தை அளிக்கவேண்டும், அல்லது மற்றோர் ஆயரால் அது அளிக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளவேண்டும். ஓர் அவசரத் தேவை அதைத் தூண்டினால், அவர் இவ்வருளடையாளத்தை அளிக்கும் செயலுரிமையை ஒரு குருவுக்கோ குறிப்பிட்ட பல குருக்களுக்கோ வழங்கலாம்.

2) கனமான காரணத்திற்காக, ஆயர், அவ்வாறே சட்டம் அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியின் சிறப்புச் சலுகையால் உறுதிப்பூசுதல் அளிக்கும் செயலுரிமை பெற்றுள்ள குரு, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இவ்வருளடையாளத்தை அளிக்குமாறு குருக்களைத் தங்களுடன் இணைத்துக் கொள்ளலாம்.

தி.ச.885. தக்க முறையிலும் அறிவுக்கொத்த விதத்திலும் உறுதிப்பூசுதல் அருளடையாளத்தைக் கேட்கின்ற தமது ஆளுகைக்குட்பட்டவர்களுக்கு அதனை அளிப்பதைக் கவனித்துக்கொள்ள மறைமாவட்ட ஆயர் கடமைப்பட்டுள்ளார்.

2) இச்செயலுரிமை கொண்டுள்ள குரு, யாருடைய நலனுக்காகச் செயலுரிமை வழங்கப்பட்டதோ அவர்களுக்காக அதைப் பயன்படுத்தவேண்டும்.

தி.ச.886. ஆயர் தம் சொந்த மறைமாவட்டத்தில், தமது ஆளுகைக்குட்படாத விசுவாசிகளுக்கும், அவர்களின் சொந்தத் திருச்சபை ஆளுநரின் தெளிவான தடையீருந்தாலன்றி, சட்டமுறைப்படி உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை அளிக்கலாம்.

2) தமது ஆளுகை;கு உட்பட்டவர்களாக இருந்தாலன்றி, மற்றொரு மறைமாவட்டத்தில் சட்டமுறைப்படி உறுதிப்பூசுதல் அளிப்பதற்கு அம்மறைமாவட்ட ஆயரின் குறைந்த அளவு அறிவுக்கொத்த விதத்தில் ஊகிக்கப்பட்ட அனுமதி ஆயருக்குத் தேவை.

தி.ச.887. உறுதிப்பூசுதல் அளிக்கும் செயலுரிமை கொண்டுள்ள குரு, தமக்குக் குறிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் அவ் எல்லைக்கு வெளியே உள்ளவர்களுக்கும் கூட. அவர்களின் சொந்தத் திருச்சபை ஆளுநர் தடை செய்திருந்தாலன்றி, இவ்வருளடையாளத்தைச் சட்டமுறைப்படி அளிக்கலாம். ஆனால், அவர் வேறோர் எல்லையில் இவ்வருளடையாளத்தைச் செல்லத்தக்க விதத்தில் எவருக்கும் அளிக்க முடியாது. இக்காரியத்தில் தி.ச. 883, 3 ல் உள்ள விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

தி.ச.888. பணியாளர்கள் தாங்கள் உறுதிப்பூசுதல் அளிக்கக்கூடிய எல்லைக்குள், விலக்குரிமை பெற்ற இடங்களிலும்கூட, அதை அளிக்கலாம்.

இயல் 3

உறுதிப்பூசுதல் பெறவேண்டியவர்கள்

தி.ச.889. திருமுழுக்கு பெற்று இன்னும் உறுதிப்பூசுதல் பெறாதவர்கள் மட்டுமே உறுதிப்பூதல் பெறத் தகுதியுடையவர்கள்.

2) இறக்கும் ஆபத்திற்குப் புறம்பே, சட்டமுறைப்படி உறுதிப்பூசுதல் பெறுவதற்கு. ஒருவர் அறிவுப் பயன்பாடு உடையவராக இருந்தால், அவர் உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும், ஏற்புடைய நிலையில் இருக்கவேண்டும், திருமுழுக்கு வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிக்கக் கூடியவராக இருக்கவேண்டும்.

தி.ச.890. விசுவாசிகள் இவ்வருளடையாளத்தைச் சரியான நேரத்தில் பெறக் கடமைப்பட்டுள்ளனர், பெற்றோர்கள், ஆன்ம மேய்ப்பர்கள், சிறப்பாகப் பங்குக்குருக்கள், விசுவாசிகள் இவ்வருளடையாளத்தைப் பெறுவதற்கு உரிய முறையில் பயிற்றுவிக்கப்படுவதையும், சரியான நேரத்தில் அதைப் பெறுவதையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

தி.ச.891. ஆயர் பேபரவை வேறொரு வாதை நிர்ணயித்திருந்தாலோ, இறக்கும் ஆபத்திலிருந்தாலோ, அல்லது பணியாளரின் கணிப்பில் கனமான ஒரு காரணம் வேறுவிதமாகத் தூண்டினாலோ அன்றி, உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை விசுவாசிகளுக்கு ஏறத்தாழ தன்னறிவு அடைந்த வயதில் அளிக்கவேண்டும்.

இயல் 4.

ஞானப்பெற்றோர்.

தி.ச.892. உறுதிப்பூசுதல் பெறுபவர், இயன்றவரை, ஒரு ஞானப்பெற்றோரைக் கொண்டிருக்கவேண்டும். உறுதிப் பூசுதல் பெற்றவர் கிறிஸ்துவின் உண்மையான சாட்சியாய் செயல்படுவதையும், இவ்வருளடையாளத்தில் ஊன்றியுள்ள கடமைகளை உண்டையுடன் நிறைவேற்றுவதையும் கவனித்துக் கொள்வது ஞானப் பெற்றோரின் கடமை.

தி.ச.893. ஞானப்பெற்றோரின் பணியை மேற்கொள்பவர் ச 874-ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவு செய்யவேண்டும்.

2) திருமுழுக்கில் ஞானப்பெற்றோர் பணியை மேற்கொண்டவர் உறுதிப்பூசுதலுக்கு ஞானப்பெற்றோராயிருப்பது விரும்பத்தக்கது.

இயல் 5.

உறுதிப்பூசுதல் சான்றும் பதிவும்

தி.ச. 894. உறுதிப்பூசுதல் அளித்ததை எண்பிக்க ச. 876-ன் விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

தி.ச. 895. உறுதிப்பூசுதல் பெற்றவர்கள், பணியாளர், பெற்றோர்கள், ஞானப்பெற்றோர்களின் பெயர்களும், உறுதிப்பூசுதல் அளித்த இடமும் நாளும் மறைமாவட்டச் செயலகத்தின் உறுதிப்பூசுதல் பதிவேட்டில், அல்லது, ஆயர் பேரவை அல்லது மறைமாவட்ட ஆயர் அதை விதித்திருந்தால், பங்கு ஆவணக்காப்பகத்தில் வைக்க வேண்டிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தி.ச. 535, 2-ன் விதிமுறைக்கேற்ப திருமுழுக்குப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு, அளித்த உறுதிப்பூசுதலைப் பற்ற, பங்குக்குரு, திருமுழுக்கு அளித்த இடத்தின் பங்குக்குருவுக்கு அறிவிக்கவேண்டும்.

தி.ச. 896. இடத்தின் பங்குக்குரு உடனில்லாதிருந்தால், பணியாளர், தாமாகவோ மற்றவர் மூலமாகவோ, அளித்த உறுதிப்பூசுதலைப் பற்றக் கூடிய விரைவில் அவருக்கு அறிவிக்கவேண்டும்.

திருப்பலியில் இறைவாக்கு வழிபாடு முடிந்தபின், ஆயர் கேள்விகள் கேட்க, உறுதிப்பூசுதல் பெறுவோர் பதில் கூறுகின்றனர்.)

திருமுழுக்கு வார்த்தைப பாட்டை புதுப்பித்தல்

ஆயர் ; பசாசையும், அதன் செயல்களையும், அதன் மாய கவர்ச்சிகளையும் விட்டு விடுகிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் ; விட்டு விடுகிறேன்.

ஆயர் ; வானமும் வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உ.பெறு. ; ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் ; அவருடைய ஒரே மகனும், கன்னிமரியாவிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உ.பெறு. ; ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் ; அன்று, பெந்தகோஸ்தே விழாவின் போது அப்போஸ்தலர்களுக்கு அருளப்பட்டதுபோல், இன்று, உங்களுக்குச் சிறப்பாக அருளப்பட இருக்கின்ற ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உ.பெறு. ; ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் ; புனித கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் உறவையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்த்தெழுதலையும், முடிவில்லா வாழ்வையும் விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உ.பெறு. ; ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் ; இதுவே நம் விசுவாசம், இதுவே திருச்சபையின் விசுவாசம். இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதிலே நாம் பெருமை கொள்கிறோம்.

உ.பெறு. ; ஆமென்.

கைகளை வைத்தல் :

அன்பார்ந்த மக்களே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை வேண்டுவோமாக, திருமுழுக்கில் முடிவில்லா வாழ்வுக்கென ஏற்கெனவே புதுப்பிறப்பு அடைந்து, இறைவனின் உரிமை மக்களாகப் பெற்ற இவர்கள் மீது அவர் தயவுடன் தூய ஆவியைப் பொழிவாராக. அந்த ஆவியார், தம் கொடைகளை நிறைவாக அளித்து, இவர்களை உறுதிப்படுத்தி, தம் அபிஷுகத்தில் இவர்கள் இறைமகன் கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுக்கொள்ளச் செய்வாராக.

(சற்று நேரம் மொளன செபம்)
ஆயரும் குருக்களும் உறுதிப் பூசுதல் பெறுவோர் மீது கைகளை வைக்க, ஆயர்மட்டும் கூறுவதாவது;

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையே, நீரினாலும் தூய ஆவியினாலும் உம் அடியார்கள் இவர்களைப் பாவத்தினின்று விடுவித்து, புதுப்பிறப்பு அளித்துள்ளீர், ஆண்டவரே, துணையாளராகிய தூய ஆவியைப் இவர்களுக்குள் அனுப்பியருளும்.

ஞானமும் மெய்யுணர்வும் தரும் ஆவியை, ஆலோசனையும் வல்லமையம் தரும் ஆவியை, அறிவும் பக்தியம் தரும் ஆவியை,இவர்களுக்கு அளித்தருளும், தெய்வ பயத்தின் ஆவியால் இவர்களை நிரப்பியருளும், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் ; ஆமென்.

திருத்தைலம் பூசுதல்

ஞானத்தாய் அல்லது தகப்பன் உறுதிப்பூசுதல் பெறுவோரின் தோள்மேல் தமது வலது கையை வைத்து, அவர் பெயரைச் சொல்ல, ஆயர் தம் வலது பெறுவிரல் நுனியைத் திருத்தைலத்தில் தேய்த்து, அவர் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து சொல்கிறார்.

(பெயர்) தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக் கொள், பரம தந்தையின் உன்னத கொடை அவரே!

உறு.பெறு. : ஆமென்.

ஆயர் : உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உறு.பெறு. : உமக்கும் சமாதானம் உண்டாவதாக.

திருப்பலியின் இறுதியில் ஆசியுரை :

ஆயர் : எல்லாம் வல்ல பரமதந்தை நீரினாலும் தூய ஆவியினாலும் உங்களுக்குப் புதுப்பிறப்பளித்து, உங்களைத் தம் சுவிகார மக்களாக்கிக் கொண்ட இறைவன், உங்களை ஆசீர்வதித்து , தந்தைக்குரிய தம் அன்புக்கு உகந்தவர்களாக உங்களை என்றும் காத்தருள்வாராக.

எல் : ஆமென்.

ஆயர் : பரம தந்தையின் ஒரே திருமகன், திருச்சபையில் உண்மையின் ஆவியானவர் என்றும் இருப்பாரென வாக்களித்த ஆண்டவர், உங்களை ஆசீர்வதித்து, உண்மையான விசுவாசத்தை நீங்கள் அறிக்கையிடுமாறு உங்களைத் தம் வல்லமையால் உறுதிப்படுத்துவாராக.

எல் : ஆமென்.

ஆயர் : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், தூய ஆவி உங்களை ஆவீர்வதிப்பாராக.

எல் : ஆமென்.