தூய மரியன்னை ஆலயத் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடு

மன்னார்ப் பேராலயப் பங்கின் கிளை ஆலயமாக இருக்கின்ற தொன்மை யான விசுவாசப் பாரம் பரியத்தைக் கொண்ட ஆலயமாகிய தூய மரியன்னை ஆலயத் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடு இன்று (24.01.2018) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.

மேலும் அறிய தூய மரியன்னை ஆலயத் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடு

னது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்

நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை சிலி, பெரு ஆகிய நாடுகளுக்கு அண்மையில் மேற்கொண்ட அருட்பணிச் சந்திப்போடு நிறைவு செய்துள்ளார். 2013ம் ஆண்டு மாசி மாதம்  19ம் திகதி, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றுக்கொண்டார். அதன் பின் தனது முதல் அருட்பணிப் பயணமாக 2013ம் ஆண்டு ஆனி மாதம் 22ந் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை பிரேசில் நாட்டில் நடைபெற்ற 28வது உலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

மேலும் அறிய னது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்

இளைஞர் பணி மையத்திற்கு

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பொனாண்டோ ஆண்டகை அவர்கள், அனைத்தையும் அறிந்து கொள்ளுதல் என்னும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மறைமாவட்டத்தின் பங்குகள் பணி மையங்கள் ஆகியவற்றிற்குச் சென்று: பணி நிலைமைகளை அவதானித்து வருகின்றார். மேலும் அறிய இளைஞர் பணி மையத்திற்கு

ஜனவரி:24 புனித பிரான்சிஸ் சலேசியார்

ஜனவரி:24
புனித பிரான்சிஸ் சலேசியார்
மறைவல்லுனர்-(கி.பி.1567-1622)

 

ஜெனிவா நகரின் ஆயராக விளங்கியவர். புனித ஜான் பிரான்சிஸ் தே சாந்தாளுடன் சேர்ந்து மினவுதல் சபையைத் தோற்றுவித்தவர். “புனிதத்தில் வளர்வது எளிதிலும் எளிது. போர் வீரருக்கும் இது கைகூடும். பணித்தளத்தில் இருப்பவருக்கும் இது கைகூடும். ஏழை, பணக்காரருக்கும் இது கைகூடும். எங்கிருந்தாலும் இதயங்களை ஆண்டவரிடம் எழுப்பி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.”என்பார். “இறைவன் நமது இதயத்தில் மையங்கொண்டு வாழ விரும்புகிறார்.” என்பது இவரின் அசையாத நம்பிக்கை.
இவர் பிரான்ஸ் நாட்டில் சவாய் என்ற பகுதியில் உயர் குலத்தில் 13 மக்களில் மூத்தவராக தோன்றியவர். இவர் தம் தந்தை இவரை சட்டபடிப்புக்கு அனுப்பி உலகில் உயர்ந்த பதவியேற்க திட்டம் தீட்டினார். இத்திட்டத்துடன் பதுவை நகர் பல்கழைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார். சட்டக் கலையில் பட்டம் பெற்றபின் தந்தையின் கனவை தவிடுபொடியாக்கி விட்டு குருத்துவத்தை இவர் தேர்ந்து கொண்டார்.இயறற்கையில் இறைவனை இவர் கண்டுகளித்ததின் பயனாக இவரது பிற்கால மறைபோதனையில் இவ்வுண்மைகள் பளிச்சிட்டன.
இவர் கவனத்துடனும் திறமையுடனும் எழுதிய மறை விளக்க நூல்கள் பலவற்றைக் கால்வின் பதித்தனம் நிலவிய ஸாப்ளே எனும் மாவட்டத்தில் வாசிக்க அவற்றை மக்களிடம் வழங்கினார். அதன் பின் அங்கு அவர் நேரடியாக போதிக்கவும் கால்வின் பதிதத்தை சேர்ந்த பலரை மனந்திரும்பவும் முடிந்தது. “கடவுள் மீது அன்பு” என்ற நூலை இவர் எழுதி முடிக்க 10 ஆண்டுகள் ஆயின.
திருத்தந்தை 23ம் அருளப்பர் இவரைத் தம் வாழ்நாளெல்லாம் முன் மாதிரிகையாகத் தெரிந்து கொண்டார். திருத்தந்தை தமது நாள் குறிப்பில் இவ்வாறு எழுதியுள்ளார். “புனித சலேரியாரின் வாழ்க்கை வரலாற்றை பலமுறை படித்திருக்கிறேன். அவருடைய அறிவுரைகள் என் வாழ்வில் எவ்வளவு பொருத்தமாக உள்ளன! அவரது முன்மாதிரிகையால், தாழ்ச்சி, சாந்தகுணம், அமைதி இவைகளின் மீது என் உள்ளம் தணியாத வேட்கை கொண்டுள்ளது. நாள்தோறும் நான் சாதாரண அலுவல்களையும் மிக மேலான நோக்கத்துடன் செய்தாலே போதும் என்று இப்போது புரிந்து கொண்டேன். பிரான்சிஸ் அமைதிப் பண்பு உள்ளவராகவே மக்கள் அனைவரிடத்திலும் நடந்து கொண்டார் என்பதை அவரைத் தேடி வந்த யாவரும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.”
“ஒரு பீப்பாய் நிறைய புளித்த காடி ஈக்களை ஈர்க்க முடியாது. ஆனால் ஒரு கரண்டி தேன் பல ஈக்களை ஈர்க்க முடியும்” என்பது இவரது விருதுவாக்காயிருந்தது.

 

பொதுக்காலம், வாரம் 3 புதன்

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-17

அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா?’ இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள்வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாதது ஏன்? என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காக கோவில் கட்ட இருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலை நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல், என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்! மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 89: 3-4. 26-27. 28-29

பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.

நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்;
என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;
உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ பல்லவி

நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்;
மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். பல்லவி

அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்;
அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்;
அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா. : மாற்கு 4:1-20

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

அக்காலத்தில் இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் `ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ ” என்று கூறினார். மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.