சுந்தரபுரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

மன்னார் மறைமாவட்டத்தின் பணி எல்லைக்குள் அமையும், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் பங்கின் கிளை ஆலயமான சுந்தரபுரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் நேற்றைய நாளில் (29.11.2017) புதன் கிழமை மாலை 04.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட திருத்தூதூப் பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு ஆலயத் திருவிழாவின் தொடக்கநாள் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பங்கினை கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் பொறுப்பேற்று வழி நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மிகவும் கடினமான பணிமுன்னெடுப்புக்களைக் கொண்ட இந்தப் பங்கிலே கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்களின் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன.

மேலும் அறிய சுந்தரபுரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

புனித அந்திரேயா

புனித அந்திரேயா

திருத்தூதர்

அந்ரேயா என்ற சொல்லுக்கு “வீர மனிதன்” என்பது பொருள் இவர் பேதுருவின் அண்ணன் மீனவர். கலிலேயாக் கடற்கரையோரம் இவரது தொழில் ஈடுபட்டிருந்தார். ஏற்கெனவே திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். இயேசுவை அவர் மெசியா என்று கட்டிக்காட்டியவுடன் தம் தம்பியையும் அழைத்துக் கொண்டு போய் இவர் இயேசுவின் சீடரானார். இரு முறை கிரேக்கர்கள் இயேசுவைப் பார்த்துப் பேச வேண்டும் என்று பிலிப்புவிடம் கேட்டபொழுது, பிலிப்பு அந்திரேயாவிடம் இதைத் தெரிவிக்கின்றார் (யோவா : 40 – 42).

இவர் இயேசுவின் விண்ணேற்புக்குப் பின் துருக்கிக்குச் சென்று அவர்களிடமும், சித்தியர்களிடமும் மறைபரப்புப் பணியில் இறங்கினார். பைசான்சியம் நகருக்கப் புனித ஸ்டாக்கிஸ் என்பவரை இவர் முதல் ஆயராகத் திரு நிலைப்படுத்தினார். பின்னர் மாசிடோனியா, கிரீஸ் நோக்கிச் சென்றார். நீரோவின் கொடுங்கோல் ஆட்சியில் பத்ராஸ் என்ற ஊரில் தம் 60ம் ஆண்டு இதே நாளில் ஓ வடிவில் அமைந்த சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சி முடிபெற்றார். இந்தவிதமான சிலுவை அவருக்கு மிகுந்த வேதனை கnhடுக்கும் என்று இவ்வாறு செய்தான். இவ்வாறு அறையப் பட்டிருந்த நிலையி லேயே, இவர் இரண்டு நாட்களுக்கு மக்களுக்குப் போதித்திருக்கிறார்.

இவரது உடல் கொன்ஸ்டான்டி நோபிளுக்குக் கொண்டு வரப்பட்டது. திமோத்தேயு, லூக்கா இவர்களுக்கு அருகில் அடக்கம் பண்ணப்பட்டார். கி.பி. 1210ல் சிலுவைப் போரில் ஈடுபட்ட கிறிஸ்தவப் போர்வீரர்கள், புகிதருடைய திருப்பண்டங்களைத் தென் இத்தாலியில் அமால்ஃபி என்ற நகரில் இன்றுவரை புனிதமாக வைத்துள்ளனர். இவர் ர~;யா, போலந்து நாடுகளுக்குப் பாதுகாவலர். இவர் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவிலேயே தமக்கு காத்திருந்த புனித சிலுவையை அடயாளங்கண்டு கொண்டு, “எனக்காகத் தயாரிக்கப்பெற்ற உன்னைப் பல காலமாக எதிர்நோக்கி வாழ்ந்தேன். மகிழ்ச்சி ஆரவாரத்துடனும், நம்பிக்கையு டனும் உன்னை நெருங்கி வருகிறேன். இதற்கு முன் என் ஆண்டவரை நீ சுமந்தாய். மகிழ்சியுடன் என்னையும் ஏற்றுக்கொள்” என்றாராம்.

மன்னார் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் இன்று புதன்கிழமை (29.11.2017) காலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு வந்து மறமாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர்களை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.

மேலும் அறிய

உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆட்காளிவெளிப் பங்கின் எல்லைக்குள் அமைந்துள்ள சாளம்பன் என்னும் இடத்திற்குப் போகும் வழியில் இருக்கும் சந்தியில் பல் ஆண்டுகாலமாக நிறுவப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருவுருவக் கூட்டினுடை கண்ணாடிகள் கடந்த திங்கட் கிழமை இரவு இனந் தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் பொதுக்காலம் 34ம் வாரம்– புதன்

முதல் வாசகம்

மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின. :இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14, 16-17, 23-28

அந்நாள்களில் பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான்.

அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிலிருந்து கொண்டு வந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக் கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள். திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார்.

அரசன் அவரைப் பார்த்து, “என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே? உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன்.

இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன் மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்” என்றான்.

அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: “உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்.

விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னின்று அனுப்பி, இந்த எழுத்துக்களைப் பொறிக்கச் செய்தார்.”

பொறிக்கப்பட்ட சொற்களாவன: “மேனே மேனே, தேகேல், பார்சின்” இவற்றின் உட்பொருள்: `மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர். பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் :தானி (இ) 1: 39-40. 41-42. 43-44 (பல்லவி: 39b)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள். விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;காற்று வகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; நடுக்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

கோலாலம்பூரில் திருப்பீடத்திற்கான தூதரகம்

இம்மாதம் 23ந் திகதி மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் திருப்பீடத்திற்கான தூதரகம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடவுள் தரும் நற்செய்தியையும் நல்லொழுக்க வாழ்க்கைப் பண்புகளையும் உலகெங்கும் விதைக்கவே திருப்பீடத்திற்கான தூதரகங்கள் அமைக்கப்படுகின்றன என்று  பேராயர் அஞ்சலோ பெக்சியூ அவர்கள் தெரிவித்தார்.

மேலும் அறிய கோலாலம்பூரில் திருப்பீடத்திற்கான தூதரகம்

ஆண்டின் பொதுக்காலம் 34ம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 2: 31-45

அந்நாள்களில் தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: “அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம்மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.

அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறு பகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது. அந்தக் கல் இரும்பினாலும் களிமண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது.

அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.

அரசரே! இதுவே நீர் கண்ட கனவு; அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம். அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார். உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார்.

எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. உமக்குப்பின் உமது அரசை விட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும். பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும். மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களிமண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும்.

ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்தது போல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்;

ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள். அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும். மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: தானி(இ) 1: 34. 35-36. 37-38 (பல்லவி: 34b)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

வானத்திற்கு மேல் உள்ள நீர்த்திரளே, ஆண்டவரை வாழ்த்து; ஆண்டவரின் ஆற்றல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்’ என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும்.

ஆனால் உடனே முடிவு வராது” என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

ஆண்டின் பொதுக்காலம் 34ம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20

யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.

அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசன் தான் உண்டு வந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டான். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள். அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகி வந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார். அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.

அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, “உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சுகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்; நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்” என்றான்.

தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது: “ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்கு தண்ணீரையும் மட்டுமே தாரும்.

அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பாரும்; அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும்” என்றார்.

அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப் பார்த்தான். பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது. ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ண வேண்டிய சிறப்புணவுக்கும் பருக வேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.

கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார். அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.

அரசன் அவர்களோடு உரையாடலானான்; அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர். ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான்.

அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: தானி(இ) 1: 29. 30-31. 32-33 (பல்லவி: 29b)

பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;  கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

உமது ஆட்சிக்குரிய அரியணை மீது நீர் வாழ்த்தப் பெறுவீராக.  உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: மத் 24: 42,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4

அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.

வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

அவர், “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.