புனிதர் அனைவரின் பெருவிழா

 

புனித பெர்னார்து தந்த மறையுரையிலிருந்து ஒரு பகுதி

“ இந்த திருநாள் என்ன பயன்? பூவுலகில் புனிதர் அனை வருக்கும் வணக்கம் காட்டுகிறோம். எதற்காக? அவர் களை இறைவன் பெருமையில் உயர்ததிவிட்டாரே! நாம் தரும் வணக்கம் அவர்களுக்குத் தேவையில்லை, நாம் எழுப்பும் புகழ்ப்பாக்களும் தேவையற்றவை. அவர்களை நினைவுகூரும்போது பயன் பயன் பெற வேண்டியவர்கள் நாம்தாம். அவர்களை நினைத்தாலே, அவர்களிடம் சென்று என்றும் நான் அவர்களுடன் உறவுகொள்ள விரும்புகின்றேன் என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர்களுடன் நாம் தோழமை கொண்டாட வேண்டும்.

வாழ்வோர் நாட்டிலுள்ள புனிதர்களுடன் தோழமை கொள்ளும் தகுதி பெறவேண்டும் என்பது நமது முதல் குறிக்கோளாய் இருக்கட்டும். சகோதரர்களே, நமது அக்கறையின்மையை விட்டொழிப்போம். மறுவுலகில் உள்ளவற்றைப் பற்றியே சிந்தனையாய் இருப்பதற்காகக் கிறிஸ்துவுடன் உயிர்தெழுவோம். அவர்களின் மகிழ்ச்சி யில் நாமும் பங்கடைய வேண்டும் மேலம் புனிதர்களின் பரிந்துரையை நாம் மேலான முறையில் விரும்ப வேண்டும். ஏனெனில் நாம் நமது மன்றாட்டினால் பெற முடியாத நன்மைகளை அவர்களின் மன்றாட்டிய் பயனாகப் பெறலாம்.

“இதன் பின்னணியல் மறைசாட்சிகளையும், புனிதர்களை யும் பற்றிச்சற்றுச் சிந்திப்போம். சான்றாக, கி.பி. 153-ஆம் ஆண்டில் ஆயர் புனித போலிக்கார்ப் மறைசாட்சி முடி பெற்றார். இதை (வானகத்தில் அவரது) பிறந்த நாளாகத் தொடக்கக் கிறிஸ்தவர்கள் கொண்டாடினார். எவ்வா றெனில் இப்புனிதருடைய எலும்புகளை விலையுர்ந்த மாணிக்கக்கல்லுக்கு மேலானதாகவும், பொள்ளைவிட மிக மேலானதாகவும் மதித்து, ஒன்று சேர்த்து ஒரு புனித மான இடத்தில் வைத்தனர். இங்கேதான் ஆண்டவரின் பெயரால் ஆர்ப்பரிப்போடும், அக்களிப்போடும் அவர்கள் ஒன்றாகக் கூடிவந்து புனிதரின் பிறந்த நாளைக் கொண் டாடினர். நமக்கு முன் சென்ற இவர்களின் வானகப் பிறப்பு நாளைக் கொண்டாடும்போது நாமும் வீரர்களாகச் சாட்சி பகர நம்மைத் தயாரித்துக்கொள்கிறோம்.

கி.பி. 8-ஆவது நூற்றுண்டில், புனித உருவங்கள், சுரூபங் கள் போன்ற இவற்றை உடைத்தெறிய வேண்டும் என்று குழப்பம் எழுப்பியவர் “ஜக்கனோக்ளாஸ்டஸ்” என்று பெயர் பெற்றனர். கி.பி. 787-ஆம் ஆண்டு நிசெயாவில் கூடிய 2-வது பொதுச்சங்கத்தின் மூலம் இவ்வெழுச்சிக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது. இப்புனித உருவங்களை நாம் பார்க்கும்போது, இவைகள் எந்த ஆள்களைக் குறிக்கின்ற னவோ அவர்களை நினைவுபடுத்துகின்றன. அவர்களை நினைத்துக்கொள்வதனால், அவர்களைப்பின்பற்ற முயலுகிறோம். அவர்களுக்கு வணக்கம் காட்டுகிறோம்.

“கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று அவல்லது வேளா வேளைகளில் எழுப்பும் சிறுசிறு மன்றாட்டு மட்டுமன்று. ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்கு தந்துள்ள விலைமதிக்கப் பெறாத முன்மாதிகையும், பாடமும் நமக்கு மகிழ்ச்சியூட் டும், ஊக்குவிக்கும் உதவிகளாகும்” எனத் திருத்தந்தை 23-ஆம் ஜான் கூறிச்சென்றார்.

“கிறிஸ்துவைப் பற்றுதலுடன் பின்பற்றியவர்களை, அதாவது புனிதர்களை, நாம் பார்க்கும்போது விரவிருக் கும் அழியாத வான் வீட்டை நாம் தேடுவதற்கு ஒரு புதிய எழுச்சியைக் கொடுக்கிறது. இவ்வுக மேடு பள்ளங்களி டையே உறுதியானதும் பாதுகாப்புள்ளதுமான நேர் பாதை யைக் காட்டி அவரவர்களின் வாழ்க்கை நிலைமைக் கேற்ப, கிறிஸ்துவுடன் ஒருங்கிணைந்து வாழ, அதாவது புனிதத்தில் வளர்ச்சியடைய, வழிகாட்டிகளாக அமை கின்றார்கள்”.

“எனவே, இந்தத் திருச்சங்கம் வான்வீட்டில் பெருமை பெற்று இன்புறும் நம் சகோதரர்களுடன் நாம் கொண்டி ருக்க வேண்டிய தோழமையைக் குறித்து நம் முன்னோர் களின் வணக்கத்துக்குரிய விசுவாசத்தை ஆழ்ந்த பற்று தலுடன் ஏற்றுக்கொள்கிறது”.

இதன் பொருட்டு, புனிதர்களிடம் நாம்  காண்ப்பிக்க வேண்டிய பக்தி எதில் அடங்கியுள்ளது எனில், அவர் களின் நல்வாழ்வின் முன்மாதிரிகையைக் கற்றுக் கொள்வதில், அவர்களுடன் தோழமை கொள்வதிலும், அவர்கள் நமக்காகப் பரிந்துரைப்பதைப் பெற்றுக் கொள்ளப் பேராவல் கொள்வதிலும் அடங்கியுள்ளது.

இத்தகைய விசுவாச ஒளியில் நாம் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது புனிதர்களுடன் நாம் அடைய விரும்பும் தோழமை இறைவனுக்கு நாம் செலுத்தவேண்டிய ஆராத னையை எவ்வகையிலும் குறைக்காமல், மிக மேலாக வலுப்படுத்தப்படுகிறது என்பதை விசுவாசிகளுக்குக் கற்றுத்தருவார்களாக (சங்க ஏடுகள் : திருச்சபை எண் 50 – 31).

கி.பி. 4-ஆம் நூற்றூண்டில் மே 13-இல் எடெஸ்ஸா நகரில் ஆண்டு தோறும் “உலக முழுவதிலும் அறந்த மறைசாட் சிகளின் திருநாள்” கொண்டாடப்பட்டதாகக் குறிப்பிடுகின் றார் புனித எஃப்ரேம். அந்தியோக்நகரில் இதே வேளை யில் இத்திருநாள் தூய ஆவியாரின் திருநாளுக்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் “அனைத்துப் புனிதர்களின் ஞாயிறு என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாகப் புனித ஸான் கிறிசோஸ்தம் குறிப்பிடுகின்றார். பைசன்றைன் ரீதியில் இவ்வாறுதான் கொண்டபடப்பட்தாகப் புனித ஜான் கிறிஸ்தாஸ்தம் குறிப்பிடுகின்றார். பைசன்றைன் ரீதியில் இன்றுவரை இவ்வாறுதான் கொண்டாடப்படு கிறது.

பொதுக்காலம், வாரம் 29 திங்கள்

முதல் வாசகம்

.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 20-25

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஆபிரகாம் ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்றார்; கடவுளைப் பெருமைப் படுத்தினார். தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். ஆகவே “அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதி னார்.” “நீதியாகக் கருதினார்” என்று எழுதியுள்ளது அவரை மட்டும் குறிக்கவில்லை; நம்மையும் குறிக்கின் றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ் வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படு வோம். நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடை யவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்  லூக் 1: 69-70. 71-73. 74-75

பல்லவி: தம் மக்களைத் தேடி வந்த இஸ்ரயேலின் ஆண்டவரைப் போற்றுவோம்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.பல்லவி

நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.பல்லவி

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்  வாழ் நாளெல்லாம் அச்சமின்றி  அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிலூக்கா 12:13-21

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத் தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளு மாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர்அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவ           ராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்திய வர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைக ளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது” என்றார். அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், `நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில் லையே!’ என்று எண்ணினான். `ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டு வேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச் சியில் திளைத்திடு எனச் சொல்வேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், `அறிவி லியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடை யவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு,

முதல் வாசகம்


இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
45: 1, 4-6

சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர் களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது கூறுவது இதுவே: என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்து கொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை திறந்திருக்கச் செய் வார்; அவரது வலக் கையை உறுதியாகப் பற்றிப் பிடித் துள்ளார்; அவரிடம் ஆண்டவர் அறியாதிருந்தும் உனக் குப் பெயரும் புகழும் வழங்கினேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறை யும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.                             

பதிலுரைப் பாடல்  திபா 96: 1,3. 4-5. 7-8. 9-10

பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக் குச் சாற்றுங்கள்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.பல்லவி

ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.பல்லவி

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக் குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.பல்லவி

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங் கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றி னத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின் றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5

தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுது வது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடை விடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக் காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப் பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவு கூருகிறோம். கடவு ளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரி களே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தை யைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21

அக்காலத்தில் பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட் படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக் கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக் குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடை யவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம், வாரம் 28 சனி

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திரு முகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18

சகோதரர் சகோதரிகளே, உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. ஆகவே கடவுளின் அருள் செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையா யிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்த வர்கள் எல்லாருக்கும் – திருச்சட்டத்திற்கு உட்பட்டோரு க்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் – உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தை யாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். “உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக் கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங் களுக்குத் தந்தையானார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்  திபா 105: 6,7. 8-9. 42-43

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.பல்லவி

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கை யையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும்  அவர் நினைவில் கொண்டுள்ளார்.பல்லவி

ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக்கா 12:8-12

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப் படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர் வீர்கள். அல்லேலூயா.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னி லையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனு க்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்ட வரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம், வாரம் 28 வெள்ளி

முதல் வாசகம்


திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திரு முகத்திலிருந்து வாசகம் 4: 1-8

சகோதரர் சகோதரிகளே, இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை. ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? “ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.” வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்: “எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 32: 1-2. 5. 11 

பல்லவி: என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம்
மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.  ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ,
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்.பல்லவி

என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்;  என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்’ என்று சொன்னேன்.
நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.பல்லவி

நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்;
நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக்கா 12:1-7

அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
13: 10-17

அக்காலத்தில் ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்” என்றார். ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார். அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப் பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம், வாரம் 28 வியாழன்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 21-30

சகோதரர் சகோதரிகளே, கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச் சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின் றன. இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கை யின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடைய வராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டு வது இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். ஆயி னும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின்மூலம் கடவுளுடைய அருளால் இலவச மாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவ்வாறு மனித ரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ள வர். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார். அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமை பாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப் படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில் தான். ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரை யும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 130: 1-2. 3-4. 5-6
பல்லவி: பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு

.
ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக் குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.பல்லவி

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந் தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.பல்லவி

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. லூக்கா 11:47-54

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54

அக்காலத்தில் இயேசு கூறியது: “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங் கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின் னம் எழுப்புகிறீர்கள். இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறை வாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர் களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள். ஆபேலின் இரத்தம் முதல், பலி பீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரி யாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற் காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப் படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரை யும் தடுக்கிறீர்கள்.” இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்கு மாறு பல கேள்விகளைக் கேட்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

ஜப்பசி 18 -புனித லூக்கா – நற்செய்தியாளர் விழா

 

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-17

அன்பிற்குரியவரே, விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய். தேமா இன்றைய உலகப் போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்றுவிட்டனர். என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ள வர். திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பி விட்டேன். நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற் சுருளையும் எடுத்துவா. கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக் குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராது இருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந் தும் என்னை விடுவித்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 145: 10-11. 12-13. 17-18
பல்லவி: உம் அன்பர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;  உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.பல்லவி

 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.பல்லவி

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்;
அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிமன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக்கா 10:1-9

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர் களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இரு வராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள் களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடை யின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப் புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக் கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென் றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முத லில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந் தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங் கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறை யாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி..

தூய யோசேவ் வாஸ் அடிகளார் பற்றிய கண்காட்சி.

      Un-thiru-yazhil

தூய யோசேவ் வாஸ் ஆண்டை சிறப்புக்கும் நோக்குடன் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் திருச்சபை வளர்ச்சிக்குழுவும், கலைபண்பாட்டுக் குழுவும் இணைந்து பங்குத் தந்தை அருட்பணி ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரின் வழிகாட்டுதலின் கீழ் தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் வாழ்வும் பணியும் பற்றிய கண்காட்சியொன்றினை 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி தொடக்கம் மாலை 07.00 மணிவரை தூய செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் திருவழிபாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

மேலும் அறிய தூய யோசேவ் வாஸ் அடிகளார் பற்றிய கண்காட்சி.