திருப்பீடச் செய்திகள்

2015, 2016ம் ஆண்டுகளில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களோடு உரோம் நகரில் யூபிலியை சிறப்பித்த திருத்தந்தையின் எண்ணத்தில் உருவான, வறியோரின் உலக நாள், முதன்முதலாக இவ் ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது. இம்மாதம் 19ந் திகதி ஆண்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறன்று இந் நாளைக் கடைப்பிடிக்கும் படி திருத்தந்தை கேட்டுள்ளார். இந் நாழுக்குரிய கருப்பொருளாக “வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நாம் அன்புகூருவோம்” என்பதனையும் திருத் தந்தை முன்வைத்துள்ளார்.

மேலும் அறிய திருப்பீடச் செய்திகள்

புனித ஜோசப் பிக்னிடெல்லி, சே.ச

புனித ஜோசப் பிக்னிடெல்லி, சே.ச

குரு – (1737 – 1811)

ரஸ்யாவை ஆண்டு வந்த அரசி கத்தரீன் மட்டும் யேசு சபையினருக்கு அடைக்கலம் தந்திராவிடில், யேசு சபைக்கு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு மேலிட்டதனால், திருத்தந்தையின் ஆணைப்படி, எல்லா நாடுகளிலும் யேசு சபை தடை செய்யப்பட்டிருக்கும். அப்படி ஒருநிலை ஏற்படாதபடி அன்று யேசு சபைக்கென்று ஒரு மிகப்பெரிய தேவ பராமரிப்பு இருந்தமையால், நசுக்கப்பட்ட யேசு சபைக்கு மீட்புக் கிடைத்தது. ஒடுக்கப்பட்ட யேசு சபைக்கு விடுதலை கிடைத்தது.

திருத்தந்தை கையெழுத்திட்ட பிறகு யேசு சபையின் பெயரால் எந்த நாட்டிலும் துறவிகள் இருந்திருக்க முடியாது. ஆனால் தெய்வச் செயலாக ரஸ்யாவில் மட்டும், சபை மூடப்பட்டதற்கான திருத்தந்தையின் அறிவிப்புக்கு, சூழ்நிலை காரணமாக இடமில்லாது போயிற்று. ஆதனால் அங்கு புகலிடம் பெற்ற யேசுசபை யினர் பிக்னடெல்லியின் தலைமையில் தங்கள் பணியைச் செய்து வந்தனர். இந்நிலை ஜம்பது ஆண்டுகள் நீடித்தது.

1737ல் ஸ்பெயினில் சரகோசா நகரில் பிரபு குடும்பத்தில் பிறந்தவர். குருப்பட்டத்திற்குப்பின், தனது ஊரிலேயே பரம ஏழைகள் மத்தியில் பணியாற்றினார். யேசுசபை ஒழிக்கப்பட்டபோது இவருடன் ஸ்பெயினிலிருந்து மட்டும் 5000 யேசு சபையினர் நாடு கடத்தப்பட்டனர். போர்த்துக்கல்லில் ஒழித்துக்கட்டப்பட்டது. பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி முதலிய நாடுகளில் ஓட, ஓட விரட்டப்பட்டனர். எத்தனையோ இடங்களில் மிக இல்லலுற்று கடற்பயணம் செய்து, கரையை அடைந்தா லும், கரைக்கு வர அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தான் முதலில் கோர்சிகாவிலும், பிறகு பெர்ராராவிலும், பின்னர் ரஸ்யாவிலும் நாள்களைக் கழித்தனர். அப்போது பிக்னடெல்லி தினமும் அவர்களுக்கு இருந்த சிறப்பான தேவ பராமரிப்பை எடுத்தக்கூறி வந்தார். யேசுசபை ஒழிக்கப்பட்டபோது அதன் அங்கத்தினர்கள் 23,000 பேராக இருந்தனர். இறுதியாக ரஸ்யாவிலிருந்தே யேசுசபையுடன் தொர்புகொண்டு பார்மாவில் ஒரு யேசுசபை மறை மாநிலம் உருவானது. இவர்தான் நவசந்நியாசிகளைக் கவனிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார். நாளடைவில் இத்தாலியன் மறைமாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவருக்கு 73 வயதாகும்போது1811ல் இறை வனடி சேர்ந்தார். இவர் இறந்து 3 ஆண்டுகளுக்குப்பின் 7ம் பத்திநாதர் திருச்சபை முழுவதிலும் யேசுசபைக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

பொதுக்காலம் 32ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் இருந்தவர்கள் அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 23 – 3: 9

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார்.

ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர். நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள்.

நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள்.

கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக் கொண்டார்.

கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள்.

ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர்மீது இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 15-16. 17-18 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். பல்லவி

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

அக்காலத்தில் ஆண்டவர் உரைத்தது: “உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், `நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா?

மாறாக, `எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், `நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.