ஆண்டின் பொதுக்காலம் 33ம் வாரம்– செவ்வாய்

முதல் வாசகம்

இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என் முதுமைக்கு நான் தகுதியுடையவன் என மெய்ப்பிப்பேன்.

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 18-31

அந்நாள்களில் தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடையவருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதை விட மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார். உயிர்மேல் ஆசை இருப்பினும், திருச்சட்டம் விலக்கியிருந்த பண்டங்களைச் சுவைத்தும் பாராமல் தள்ளிவிடத் துணியும் எல்லாரும் இவ்வாறே செய்யவேண்டும்.

சட்டத்திற்கு எதிரான அந்தப் பலி விருந்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள் அவரோடு கொண்டிருந்த நீண்டகாலப் பழக்கம் காரணமாக அவரை ஒதுக்கமாக அழைத்துச் சென்று, அவர் உண்ணக்கூடிய இறைச்சியை அவரே தயாரித்துக் கொண்டுவருமாறும், மன்னன் கட்டளையிட்டபடி பலியிடப்பட்ட இறைச்சியை உண்பது போல நடிக்குமாறும் அவரைத் தனிமையில் வேண்டிக் கொண்டார்கள்.

இவ்வாறு செய்வதால் அவர் சாவினின்று காப்பாற்றப்படுவார் என்றும், அவரோடு அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பின் காரணமாக மனிதநேயத்தோடு நடத்தப்படுவார் என்றும் அவர்கள் எண்ணினார்கள்.

ஆனால் எலயாசர் தமது வயதுக்குரிய தகுதிக்கும் முதுமைக்குரிய மேன்மைக்கும் நரைமுடிக்குரிய மாண்புக்கும் சிறு வயதுமுதல் தாம் நடத்தியிருந்த மாசற்ற வாழ்க்கைக்கும் கடவுள் கொடுத்திருந்த திருச்சட்டத்திற்கும் ஏற்றபடி மேலான முறையில் உறுதிபூண்டவராய், உடனே தமது முடிவைத் தெரிவித்து, தம்மைக் கொன்றுவிடுமாறு கூறினார்.

அவர் தொடர்ந்து, “இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல; ஏனெனில், தொண்ணூறு வயதான எலயாசர் அன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என இளைஞருள் பலர் எண்ணக்கூடும். குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக நான் இவ்வாறு நடிப்பேனாகில் என் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்; அவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதும் ஆகும்.

மனிதரின் தண்டனையினின்று நான் தற்காலிகமாக விடுபட்டாலும், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தாலும், நான் எல்லாம் வல்லவருடைய கைக்குத் தப்ப முடியாது.

ஆகவே இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என் முதுமைக்கு நான் தகுதியுடையவன் என மெய்ப்பிப்பேன்; மதிப்புக்குரிய, தூய சட்டங்களுக்காக விருப்போடும் பெருந்தன்மையோடும் எவ்வாறு இறப்பது என்பதற்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச் செல்வேன்” என்றார். இதெல்லாம் கூறி முடித்ததும் அவர் சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.

சற்றுமுன் அவரைக் கனிவோடு நடத்தியவர்கள் இப்போது கல்நெஞ்சராய் மாறினார்கள்; ஏனெனில் அவர் கூறியது அவர்களுக்கு மடமையாகத் தோன்றியது. அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி, “நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறேன்; ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால் என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக் கொள்கிறேன்; ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்” என்றார்.

இவ்வாறு எலயாசர் உயிர் துறந்தார். அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும் நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்கியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 3: 1-2. 3-4. 5-7யb (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரே எனக்கு ஆதரவு.

ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்! `கடவுள் அவனை விடுவிக்க மாட்டார்’ என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். பல்லவி

ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.  நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். பல்லவி

 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.  என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  :1 யோவா 4: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.

அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.

இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர்.

சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்.

இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அன்னை மரியா ஆலயத்தில் காணிக்கை

அன்னை மரியா ஆலயத்தில் காணிக்கை

ஜெருசலேமில் யு}தர்களின் ஆலயம் இருந்து மறைந்த அதே இடத்திற்கருகில் புனித மரியாவின் பெயரால் எழுதப்பட்ட ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்டதை இத்தினத்தில் நினைவு கூர்கின்றோம். கீழைத் திருச் சபையும் மேலைத் திருச்சபையும் ஒருகிணைந்து, மரியா சிறுகுழந்தையாக இருந்தபோது, இவரைப் பெற்றோர் இறைவனிடம் ஆலயத்திற்குக் கொண்டுவந்து அர்ப் பணித்தனர் என்ற சம்பவத்தை தொன்றுதொட்டு நினை வுகூர்கின்றன. 6வது நூற்றாண்டிலேயே இந்தத் திருநாள் தொடங்கப்பட்டுள்ளது. 16வது நூற்றாண்டு முதல் திருச் சபை முழுவதிலும் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த அன்னா, யாவேயி டம் தனது விண்ணப்பத்தைத் தெரிவித்து வந்தார். அது கேட்கப்பட்டு யாவே மரியாவைக் கொடுத்துள்ளார். பெற் றோர் இறைவனிடம் தந்த இந்த வாக்குறுதியை நிறை வேற்றிய சம்பவமாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் மரியாவின் அமல உற்பவம், அடுத்து மரியா வின் பிறப்பு-அமல உற்பவத்தின்போது மரியாவின் மீது இறைவன் பொழிந்த அருள்மாரி, அவரது குழந்தைப் பருவத்திலும், பின்னர் வாழ்நாள் முழுவதும் அவரை முழுமையாக ஆட்கொண்டது என்பதனையும் புரிந்து கொள்வது தான் முக்கியம்.

இன்னும், மனிதர்களால் எழுதப்பட்ட ஆலயத்திலும் மிக மேலான ஆலயமாக மரியா காட்சியளிக்கின்றார். இவ் வாலயத்தில் இறைவன் வாழ்ந்தார். ஒவ்வொரு கணமும் புனிதப்படுத்தினார். இவ்வாறு மீட்பரின் பணியில் பங் கேற்கும் விதத்தில் உருவாக்கினார். இதே போல் அவரின் பிள்ளைகளாகிய நாமும் தேவனின் ஆலயங்கள், ஆல யங்களாகவே திகழ வேண்டும் என்ற கடமையை உணர வேண்டும்.