பொதுக்காலம், 32ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9

எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.

உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று.

செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல். திபா 105: 2-3. 36-37. 42-43 (பல்லவி: 5)

பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார். அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. பல்லவி

ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. 2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், `என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், `நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”

பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

புனித பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு

புனித பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு

உரோமையில் முதன் முதலாகப் புனித பேதுருவின் கல்லறையின் மேல், வத்திக்கான் குன்றின் அடிவாரத் தில் எழுதப்பட்ட சிற்றாலயம் 83ம் ஆண்டில் பாப்பு புனித  அனாக்ளீட்டஸ் என்பரால் கட்டப்பட்டது. இங்குதான் புனிதரின் திருப்பண்டங்கள் புனிதமாக வைக்கப்பட்டுள் ளன. நாளடைவில் மாமன்னன் கொன்ஸ்டான்டைன் மிகப்பெரிய பேராலயம் ஒன்றை இதே இடத்தில் நிறு வினார். 16வது நூற்றாண்டில் உலகப்புகழ் மைக்கிள் ஆஞ்சலோவின் யுத்தியின்படி இப்போது காட்சியளிக்கும் பேராலயம் எழுதப்பட்டது. 50,000 பேர்களுக்கு இடமளிக்க கூடிய இப்பேராலயத்தை இதே நாளில் திருத்தந்தை 7வது அர்பன் புனிதப்படுத்தினார்.

திருத்தந்தை புனித அனாக்கீற்றஸ் புனித பவுலின் நினைவாக வேறொரு பேராலயம் எழுப்பினார். ஓஸ்டியா நகர் நோக்கிச் செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. 395ல் கட்டப்பட்ட இப்பேராலயம் 400 அடி நீளமானது. இதற்குத் தியடோசியன் பேராலயம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. 1823ல் பெரிதோர் நெருப்பு இவ்வாலயத் தைச் சேதப்படுத்தவே, இதற்கு முன்பு இருந்த கம்பீரத் தோற்றத்தைக் காட்டிலும் புதுப்பிக்கப் பெற்ற பேராலயம் அதிகக் கம்பீரமாக இந்நாள் வரை காட்சியளிக்கிறது. 1854ல் மரியாவின் அமலஉற்பவம் பிரகடனப்படுத்தப் பெற்ற நாள்கள் கழித்து இவ்வாலயம் திருத்தந்தை 9ம் பத்திநாதரால் அர்ச்சிப்புப் பெற்றது.