பொதுக்காலம், 32ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

ஞானம் – என்றுமுள்ள ஒளியின் சுடர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 22 – 8: 1

ஞானம் ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது. ஞானம் – எதிர்க்க முடியாதது; நன்மை செய்வது; மனித நேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.

ஞானம் – அசைவுகள் எல்லாவற்றையும் விட மிக விரைவானது. அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.

ஞானம் – கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது.

ஞானம் – என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல்.

ஞானம் – ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது; தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது; தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது; அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது. ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.

ஞானம் – கதிரவனை விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.

ஞானம் – ஒரு கோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது; எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல். திபா 119: 89,90. 91,130. 135,175 (பல்லவி: 89)

பல்லவி: ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு.

ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. பல்லவி

உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி

உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. யோவா 15: 5

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர்.

அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது.

ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.

பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.

அவர்கள் உங்களிடம், `இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள்.

ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *