பொதுக்காலம், வாரம் 3 சனி

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7.10-17

அந்நாள்களில் ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான். உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார். அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வரவழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப்பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்” என்று கூறினார். அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார். பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது. தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக் கிடந்தார். அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பம் இல்லை. அவர்களோடு அவர் உண்ணவும் இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 51: 10-11. 12-13. 14-15


பல்லவி: தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே, கடவுளே! படைத்தருளும்.

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.: மாற்கு 4:35-41

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

ஜனவரி:26 புனித திமொத்தேயு

ஜனவரி:26
புனித திமொத்தேயு
மறை ஆயர், வேதசாட்சி-(கி.பி.97)

திமொத்தேயுவின் தந்தை புற இனத்தவராகவும், தாய் யூதகுலத்தைச் சார்ந்தர்களுமாயிருந்தார்கள். புனித பவுல் பல இடங்களிலும் சென்று போதித்த போது திமொத்தேயுவும் அவர் தம் தாயாரும் பாட்டியும் அவரிடத்தில் திருமுழுக்குப் பெற்றார்கள். திமொத்தேயுவின் பக்தியையும் அறிவினையும் அறிந்த திருத்தூதர்கள் அவரைத் தம் துணைவராகத் தெரிந்து கொண்டனர். புனித பவுல் அவரைத் திருச்சபைக்காக வேதனைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களிடம் அனுப்புவார். சில வேளைகளில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடம் அனுப்புவார். பவுலின் வழியிலேயே திமொத்தேயு நடந்து கொண்டபடியால் எபேசு நகருக்கு ஆயராக நியமனம் பெற்றார். பவுல் சிறையில் வைக்கப்பட்டபொழுது திமொத்தேயுவுக்கு மெய்மறை பற்றி இரு திருமடல்கள் எழுதியனுப்பினார். திமொத்தேயு எண்ணற்ற புண்ணியங்களையும் தவச் செயல்களையும் செய்து வேதத்துக்காக தடிகளால் அடிக்கப்பட்டு வேதசாட்சி முடிபெற்றார்.

 

பொதுக்காலம், வாரம் 3 வெள்ளி

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 5-10,13-17

அந்நாள்களில் இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார். ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள். தாவீது அவள் யாரென்று கேட்க, ஆள் அனுப்பினார். அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா என்று கூறினர். தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அவள் தம்மிம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள். அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆள் அனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள். அப்பொழுது தாவீது இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பிவை என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பி வைத்தார். உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார். பிறகு தாவீது உரியாவிடம், உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார். உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக்கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை. உரியா தம் வீட்டுக்குச் செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை? என்று கேட்டார். தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்குக் குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார்; தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை. காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். அம்மடலில் அவர், உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். நகரின் ஆள்கள் புறப்பட்டுவந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 51: 1-2. 3-4. 4-5. 8-9

பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். பல்லவி

மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அல்லேலூயா.: மாற்கு 4:26-34

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில் இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார். மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார். அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

37 ஆண்டுகள் நிறைவு விழா

மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 37 ஆண்டுகள் (1981) நிறைவுவிழாத் திருப்பலி எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி அன்னை ஆலயத்தில் நடைபெறும். மேலும் அறிய 37 ஆண்டுகள் நிறைவு விழா

ஜனவரி:25 புனித பவுல் மனமாற்றம்

ஜனவரி:25
புனித பவுல் மனமாற்றம்

“சகோதரர்களே, உங்களுக்கு ஒன்று தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி இயேசு கிறிஸ்து அளிய திருவெளிப்பாட்டின் வழியாகவே எனக்கு கிடைத்தது. ஒரு காலத்தில் நான் யூதமறையை பின்பற்றிய போது, கடவுளின் திருச்சபையை எவ்வளவோ துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தேர்ந்தெடுத்து தம் மகனைப்பற்றிய நற்செய்தியை புறவினத்தாருக்கு அறிவிக்கும் படி அம் மகனை எனக்குள் வெளிப்படுத்த திருவுளம் கொண்டார். ஒரு காலதடதில் நம்மை துன்புறுத்தியவன் தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை போதித்து இப்பொழுது நற்செய்தி அறிவிக்கிறான் என்று மட்டும் (யூதேயா நாட்டு கிறித்தவர்கள்) கேள்விப்பட்டிருந்தனர்” (கலா.1, 11-24).
“நானே முன்னர் கடவுளைப் பழித்தேன். திருமறையை துன்புறுத்தினேன். கொடுமை புரிந்தேன். ஏனெனில் விசுவாசத்தைப் பெறாத நிலையில் அறியாமையால் அவ்வாறு நடந்தேன்” (1திமோ.1, 13-13).
“ நீ கண்களை திறப்பாய். அவர்கள் இருளைவிட்டு ஒளிக்கு வந்து பேயின் அதிகாரத்திலிருந்து கடவுள் பக்கம் திரும்பச் செய்வாய்.” (தி.ப.26,78).
“நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே கையளித்தார்.” (கலா.2, 22).
“நீ துன்புறுத்தும் இயேசு நானே ” என்ற சொற்கள் சவுலைக் கிறிஸ்துவின் சீடனாக மாற்றிவிட்டன. இங்கே இயேசு தம்மையும் தம்மீது விசுவாசம் கொண்டவர்களையும் ஒன்றாக்கிக் கொண்டதை பவுல் முற்றிலும் புரிந்து கொண்டார். கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டவர்களை கறுவருக்கக் கங்கணம் கட்டிய தவற்றை ஒரு நொடியில் உணர்கிறார்.

 

பொதுக்காலம், வாரம் 3 – புனித பவுல் மனமாற்றம் திருநாள்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16

அந்நாள்களில் பவுல் மக்களை நோக்கிக் கூறியது: “நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள்மீது ஆர்வம் கொண்டுள்ளதுபோன்று நானும் கொண்டிருந்தேன். கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையில் அடைத்தேன்; சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன். தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன். நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. நான் தரையில் விழுந்தேன். அப்போது, `சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என்ற குரலைக் கேட்டேன். அப்போது நான், `ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன். அவர், `நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே’ என்றார். என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை. `ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?’ என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, `நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்’ என்றார். அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடு இருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள். அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, `சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்’ என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன். அப்போது அவர், `நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்’ என்றார்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 117: 1. 2

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!பல்லவி

ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.: மாற்கு 16:15-20

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றிக் கூறியது: “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

தூய மரியன்னை ஆலயத் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடு

மன்னார்ப் பேராலயப் பங்கின் கிளை ஆலயமாக இருக்கின்ற தொன்மை யான விசுவாசப் பாரம் பரியத்தைக் கொண்ட ஆலயமாகிய தூய மரியன்னை ஆலயத் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடு இன்று (24.01.2018) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.

மேலும் அறிய தூய மரியன்னை ஆலயத் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடு