வாழ்விக்கும் விவிலியம், வாழ்வாக்குவது எப்படி?

வாழ்விக்கும் விவிலியம், வாழ்வாக்குவது எப்படி? சிந்தனை வழங்குபவர் அருட்பணி லெறின் டீ றோஸ் கொஸ்தா. 31/01/2018 மரியன்னை ஆலயத் திருவிழா ஆயத்த வழிபாட்டில்,மன்னார்.

எது திருச்சபை? ஒரு விவிலியப்பார்வை.

எது திருச்சபை? ஒரு விவிலியப்பார்வை. வழங்குபவர் அருட்பணி லெறின் டீ றோஸ் கொஸ்தா. 39/01/2018 மரியன்னை ஆலயத் திருவிழா ஆயத்த வழிபாட்டில்,மன்னார்.

ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா

விடத்தல்தீவு பங்கின் கிளை ஆலயமாக அமைந்துள்ள ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா இன்று (31.01.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. மேலும் அறிய ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா

பொதுக்காலம், வாரம் 4 புதன்

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2,9-17

அந்நாள்களில் தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, “மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையைக் கணக்கிடுங்கள்” என்றார். யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு ஆயிரம் பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு ஆயிரம் பேர் யூதாவிலும் இருந்தனர். வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது மனம் வருந்தினார். “நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்” என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார். தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: “நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: “நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன்படி நான் செய்வேன்” “. காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: “உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்”. “நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழ வேண்டாம்” என்று தாவீது கூறினார். ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம்வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, “போதும்! உன் கையைக் கீழே போடு” என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார். மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, “பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!” என்று கூறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 32: 1-2. 5. 6. 7


பல்லவி: ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.
ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்’ என்று சொன்னேன்.
நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்;
பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி

நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்;
உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா. : மாற்கு 6:01-06

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

ஜனவரி:31 புனித தொன்போஸ்கோ

ஜனவரி:31
புனித தொன்போஸ்கோ
சலேசியன் சபை நிறுவுநர்-(கி.பி.1815-1888)

 

இளவயதில் இவர் கண்ட கனவு ஒன்று. இவரது வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் 15 முறை திரும்ப வந்தது. இதன் மூலம் தேவ அழைத்தலில் மறைந்துள்ள சில பேருண்மைகளை ஆழமாக இவர் உணர்ந்தார். இக்காட்சிகள் இவரது தேவ அழைத்தலின் நாளிலிருந்து இறுதிவரை மரியன்னையின் சிறப்பான சலுகை இவருக்கு கிடைத்ததையும் வெளிக்கொணருகின்றன. திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவரிடம் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதக் கேட்டுக் கொண்டார். அதில் ஜான்போஸ்கோ குறிப்பிடுகின்றார். ஒருமுறை வீட்டு முற்றத்தில் சிறுவர் பலரின் நடுவில் நான் நிற்பதாக காட்சி கண்டேன். சிலர் நன்றாக கூடிக்குலாவி கும்மாளம் போட்டு விளையாடுகின்றனர். மற்றவர்கள் பழிச்சொற்களை உதிர்கின்றனர். நான் இந்த தீயவர்களை கடிந்து அடித்துத் தவற்றை நிறுத்தச் சொன்னேன். பின்னர் வெண்ணாடை அணிந்த ஒருவர் இவர்களை கண்காணித்துக் கொள். அடித்துத் துன்புறுத்தி நீ இவர்களை கவரமுடியாது. மாறாக பொறுமை அமைதியான இயல்பு தான் வெல்லும் என்றார். உடனே அழகான ஒரு பெண் தோன்றினார். அப்போது கொடிய விலங்குக் கூட்டம் ஒன்று காணப்பட்டது. இந்த விலங்குகளுக்கு இப்போது நடக்கப் போவது போல் இந்த சிறுவர்களிடமும் நீ நடந்து கொள்ள வேண்டும் என்றார். இவ்வாறு சொன்னபோது விலங்கினங்கள் சாந்தமுள்ள ஆடுகளாக மாறின. மாறி அன்னைமரியுடனும் இயேசுவுடனும் ஆரவாரத்துடன் விளையாடின. மறுநாள் காலையில் தொன்பொஸ்கோ இந்தக் கனவை தன் தாயிடம் கூறினார். ஜியோவான்ன,p ஒருநாள் குருவானவராகப் போகிறாய் என்று கூறினார் தாய். அப்போது புனிதருக்கு வயது 9 மட்டுமே.
இவரது குருத்துவப் பணி முதலில் ட்யூரின் நகரில் தொடங்கியது. தனது 60வது வயதில் ஆயிரக்கணக்காண சிறுவர்களுக்கு ஞானப்பயிற்சிகள் அளித்த பிறகு தமது வாழ்வை திரும்பிப் பார்க்கிறார். ஒருமுறையாவது யாரையும் தண்டித்ததாக நினைவில்லை என்கிறார். சிறுவர்களுடன் பழகும் போது தோழமை, அன்பு, நட்புறவு அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுதல,; பொறுப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டு தான் கவர்ந்திழுக்க இயலும் என்பது இவரது அசையாத நம்பிக்கை. அடிக்கடி ஒப்பரவு அருட்சாதனத்திலும், திவ்விய நற்கருணையிலும் பங்கு பெற வைப்பது, ஆழமாக மறைக்கல்வி புகட்டுவது, கலை உணர்வை வளர்ப்பது இவைகளையே சலேசியன் சபையின் அனுகுமுறையாக இவர் வைத்துள்ளார்.
இன்று இவரது குருத்துவ துறவற சபையில் 20000க்கும் மேற்ப்பட்டோர் உள்ளனர். உலகின் எல்லாப் பகுதிகளிலும் இவர்களது துறவற சபை பரவியுள்ளது. திருச்சபையின் மிகப் பெரிய துறவற சபைகளில் ஒன்றாகப் பல அரும்பெரும் பணிகளை இன்று ஆற்றி வருகிறது. புனித மேரி மஸெல்லாவுடன் சேர்ந்து பெண்களுக்கும் சலேசிய சபையை இவர் நிறுவியுள்ளார் .பொதுநிலையினரில் இத்துறவிகளுடன் திருப்பணியில் ஒத்துழைப்பவர்களுக்கென 3ம் சபை போன்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுக்காலம், வாரம் 4 செவ்வாய்

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 18: 9-10,14,24-25,30-19: 3

அந்நாள்களில் அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதைமீது ஏறி வந்து கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது. இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று, இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன் என்று கூறினான். யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார். அப்போது தாவீது இரு வாயில்களுக்கும் இடையே அமர்ந்து கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச் சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடிவருவதைக் கண்டான். காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துகொண்டிருந்தான். அரசர் அவனை நோக்கி, விலகி, அங்கே நில் என்று கூற, அவனும் விலகி நின்றான். அப்போது கூசியனும் வந்து, என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார் என்று கூறினான். இளைஞன் அப்சலோம் நலமா? என்று அரசர் வினவ, கூசியன், என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உமக்கு எதிராகத் தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப்போல் ஆவார்களாக! என்றான். அப்போது அவர் அதிர்ச்சியுற்று, என் மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே! என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார். அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார் என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று. போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப் போன்று, அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 86: 1-2. 3-4. 5-6


பல்லவி: ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.

ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.
என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். பல்லவி

என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். பல்லவி

ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.: மாற்கு 5:21-43

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், `என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, `சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

. கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி

இம்மாதம் 18ந் திகதி தொடக்கம் 25ந் திகதிவரை ( 18-25.01.2018) முன்னெடுத்துச் செல்லப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி கத்தோலிக்க மற்றும் பிரதான கிறிஸ்த சபைகள் 23.01.2018 செவ்வாய்க்கிழமை வவுனியா அங்கிலிக்கன் ஆலயத்தில் ஒன்றுகூடி மேலும் அறிய . கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி

பொதுக்காலம், வாரம் 4 திங்கள்

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 15: 13-14, 30;16: 5-13

அந்நாள்களில் தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, “அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்” என்று கூறினான். தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், “வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்” என்றார். தாவீது அழுதுகொண்டே ஒலிவ மலை ஏறிச் சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடு இருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச்சென்றனர். தாவீது பகூரிம் வந்தபோது, சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான் . அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும், எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள் மீதும் கல்லெறிந்தான். சிமயி பழித்துக் கூறியது: “இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ! நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்.” அப்போது செரூயாவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, “இச்செத்த நாய் என் தலைவராம் அரசரைப் பழிப்பதா? இதோ நான் சென்று அவனது தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதி தாரும்” என்றான். அதற்கு அரசர், “செரூயாவின் மக்களே! இதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒருவேளை “தாவீதைப் பழி!” என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், “இவ்வாறு நீ ஏன் செய்தாய்?” என்று யார் சொல்ல முடியும்” என்றார். மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: “இதோ! எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார். ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தைக் காண்பார். இன்று அவன் பழித்துப் பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்.” தாவீது தன் ஆள்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 3: 1-2. 3-4. 5-7

பல்லவி: ஆண்டவரே, எழுந்தருளும்; என்னை மீட்டருளும்.

ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்!
`கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’ என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். பல்லவி

ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலை நிமிரச் செய்பவரும் நீரே.
நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். பல்லவி

நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.
என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.
ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா. : மாற்கு 5:1-20

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில் இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார். அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் `இலேகியோன்’, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார். அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

37வது ஆண்டின் நிறைவு

நம் முன்னோரின் விசுவாசத்தால் வளம் பெற்ற மன்னார் மறைமாவட்டம், யாழ் மறைமாவட்டத்தின் நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டுதன் 37வது ஆண்டின் நிறைவு தை மாதம் 24ந் திகதியாகும். இதனையொட்டி இன்று 27.01.2018 சனிக்கிழமை தோட்ட வெளி மறை சாட்சியரின் தூய அன்னை ஆலயத்தில் நன்றித் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் தலைமையில் பல அருட்பணியாளர்கள் இணைந்து ஒப்புக் கொடுத்தனர். மேலும் அறிய 37வது ஆண்டின் நிறைவு

ஜனவரி:27 புனித மெர்சி ஆஞ்செலா

ஜனவரி:27
புனித மெர்சி ஆஞ்செலா கன்னி-(கி.பி.1472-1540)

 

அர்சுலைன் துறவற சபை நிறுவுநர். சிறுவயதிலிருந்தே கடுமையான தவமுயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ரொட்டித்துண்டு, சில காய்கறிகள், தண்ணீர் மட்டுமே இவருடைய அன்றாட உணவாக இருந்தது. இந்த நிலையில் புனித பிரான்ஸ்சிசின் 3ம் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இத்தாலியில் ப்ரெஸ்யா என்ற ஊரில் திருச்சபையிலேயே முதன் முதலாக இவரது முயற்சியால் பெண்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கென்று துறவற சபை தோன்றியது. பத்து வயதில் பெற்றோரை இழந்தார். அதன்பின் வசதி நிறைந்த அவரது மாமாவிடம் வளர்ந்து வந்தார். அப்போது தான் தாம் வாழ்ந்த சூழலில் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களுக்கு மறைக்கல்வி எத்துணை இன்றியமையாதது என்று உணர்ந்தார். இவர் தம்முடன் பிரான்சிஸ்கன் 3ம் சபையைச் சார்ந்த இளம் பெண்கள் பலரையும் சேர்த்துக் கொண்டார். ஒருமுறை தோழியர் சிலருடன் புனித நாடுகளுக்கு திருப்பயணம் மேற்கொண்டார். கிரீட் நாட்டை அடைந்த பொழுது பார்வையை முற்றிலும் இழந்தார். இதனால் தாயகம் திரும்பி விடலாம் என்று மற்றவர்கள் சொன்ன போது திருப்பயணத்தை மேற்கொள்வோம் என்று உறுதிபடக் கூறினார். எனவே திருப்பயணத்தை தொடர்ந்தனர். என்னே வியப்பு! திருத்தலத்தின் எல்லா இடங்களையும் நல்ல பார்வை உள்ளவர் போல் கண்டுகளித்தார். தாயகம் திரும்பும் வழியில் கிரீட் நகரில் ஒரு பாடுபட்ட சுரூபத்திற்கு முன் செபித்துக்கொண்டு இருக்கும் போது எந்த இடத்தில் பார்வை இழந்தாரோ அதே இடத்தில் ஆண்டவர் அவருக்கு அற்புதமாக பார்வையை மீண்டும் அளித்தார்.
இவர் அடிக்கடி கூறியது குடும்பங்களிலே தலைவிரித்தாடும் தீமைகளை களையாவிடில் சமுதாயத்தில் அத்தகைய தீமைகளை களைய முடியாது. வருங்கால தலைமுறைப் பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்துத்தான் குடும்பங்களில் ஆழமான கிறிஸ்தவ வாழ்வை தோற்றுவித்து அதையே சமுதாயத்திலும் நிலைநாட்ட வேண்டும். இவர் உயிரோடு இருந்தவரை இச் சபையினர் துறவற வார்த்தைப்பாடு கொடுக்க அனுமதி பெறவில்லை. இவரது இறப்புக்கு பிறகே திருச்சபை சட்டதிட்டங்களின் படி வார்த்தைப்பாடுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழ்வு தொடங்கப்பட்டது. இதற்கு மூலகாரணமாக அமைந்தவர் புனித சார்லஸ் பொரமேயோ.
வட அமெரிக்காவில் முதன்முதலாக 1639ம் ஆண்டு க்யுபெக் நகரில் பெண்களுக்கு அர்சுலைன் துறவிகளால் கல்விக்கூடம் உருவாக்கப்பட்டது. புனித அர்சுலா ஆஞ்சலாவின் காலத்திற்கு முன்பிருந்தே பெண்களின் நலனுக்காக உழைத்தவர். இவர் மேலை நாட்டின் பல்கழைக்கழகங்களின் பாதுகாவலராகவும் தேர்ந்து கொள்ளப்பட்டிருந்தார். எனவே அர்சுலாவை தமது சபைப் பாதுகாவலியாகத் தேர்ந்து கொண்டார்.