நம் முன்னோரின் விசுவாசத்தால் வளம் பெற்ற மன்னார் மறைமாவட்டம், யாழ் மறைமாவட்டத்தின் நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டுதன் 37வது ஆண்டின் நிறைவு தை மாதம் 24ந் திகதியாகும். இதனையொட்டி இன்று 27.01.2018 சனிக்கிழமை தோட்ட வெளி மறை சாட்சியரின் தூய அன்னை ஆலயத்தில் நன்றித் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் தலைமையில் பல அருட்பணியாளர்கள் இணைந்து ஒப்புக் கொடுத்தனர்.இன்று காலை 07.00மணிக்கு முதல் நிகழ்வாக ஆயர் அவர்களை தோட்டவெளி மறைசாட்சியரின் தூய அன்னை ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் நுழைவாயிலில் குருக்கள், துறவியர், இறைமக்கள் வரவேற்றனர்.
புதிய நினைவுத் தூபி திறப்புவிழா:
ஆயரின் வரவேற்ப்பைத் தொடர்ந்து தோட்டவெளி மறைசாட்சியரின் தூய அன்னை ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான, அழகிய மறைசாட்சியரின் தூய அன்னை நினைவுத் தூபியை ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்களும், நினைவுப் படிகக் கல்லை மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளாரும் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் தோட்டவெளி தூய யோசேவ்வாஸ் பாடசாலை மாணவர்களின் மேற்கத்திய இசை முழக்கத்துடனும், சில பெரியவர்களின் பாரம்பரியக் கவிப் பாடலுடனும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
மறை சாட்சிகளின் கல்லறையில் முழந்தாட் படியிட்டுச் செபம்:-
மன்னாரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவின் விசுவாசிகளானார்கள் என்பதற்காகக் கொலை செய்யப்பட்ட விசுவாசிகளின் எலும்புகள் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்ற ஆயர் அவர்கள் சில நிமிடங்கள் அங்கு முழந்தாட்படியிட்டுச் செபித்தார். ஆயரின் இந்த செயல் பலருடைய உள்ளத்தையும் தொட்ட ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது.
புதிய உரோமைத் திருப்பலிச் செபப் புத்தகம் வெளியீடும், திருப்பலியும்:-
அதன்பின்னர் தோட்டவெளி தியான மண்டபத்தில் இறைமக்கள், துறவியர், குருக்கள், மற்றும், அரச, அரச சார்பற்ற நிர்வாகக் கட்டமைப்பின் பணியாளர்கள் புடைசூழ திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அவ்வேளையில் ஆயர் அவர்கள்: புதிய உரோமைத் திருப்பலிச் செபப் புத்தகத்தை வெளியிட்டு, இன்று தொடக்கம் மன்னார் மறைமாவட்டத்தின் எல்லாப் பங்குகளிலும் இத் திருப்பலிப் புத்தகமே பயன்படுத்தப் படும் என்றும், அத் திருப்பலிப் புத்தகத்திலுள்படியே மாற்றியமைக்கப்பட்ட செபங்களைச் சொல்லவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
திருப்பலியைத் தொடர்ந்து மறைசாட்சியரின் தூய அன்னையின் திருவுருவ ஆசீருடன் விழா நிறைவுற்றது.