மன்னார்ப் பேராலயப் பங்கின் கிளை ஆலயமாக இருக்கின்ற தொன்மை யான விசுவாசப் பாரம் பரியத்தைக் கொண்ட ஆலயமாகிய தூய மரியன்னை ஆலயத் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடு இன்று (24.01.2018) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.
ஆலயக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந் நாட்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறிய கொட்டகையிலே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இத் திருவிழாவிற்கான இறை வார்த்தைப் பகிர்விற்காக, இந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் தூய பனிமயமாதா பசிலிக்காவின் இயக்குனரும், பங்குத் தந்தையுமான அருட்பணி.லெறின் டீ றோஸ் கொஸ்தா அவர்கள் வருகை தந்துள்ளார்.
இயேசு ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்து காணிக்கை அன்னை திருவிழாவென மாசி மாதம் 02ம் திகதி இவ் விழாக் கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினம் மாலை 05.00 மணிக்கு திருச் செபமாலையும், கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் இடம் பெற்றது.
பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அவர்களின் தலைமையில் அனைத்தும் ஆரம்பமாகிய வேளையில் அன்னையின் கொடியினை பேராலாயத்தின் அருட்பணி உதவியாளர் அருட்பணி.மொ.போ.பிற்றர் மனோகரன் அடிகளார் ஏற்றி வைத்தார். உதவிப் பங்குத் தந்தை அருட்பணி. மரிய கிளைன், தியாக்கோன் ம.தேவறாஜன் மற்றும் மறையுரைஞர் அருட்பணி. லெறின் டீ றோஸ் கொஸ்தா, பங்கிலே பணியாற்றும் ஆண், பெண் துறவிகள், இறைமக்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது. பெருந்தொகையான பங்குமக்கள் இவ்வழிபாட்டில் பங்கேற்றனர்.