பொதுக்காலம், வாரம் 3 செவ்வாய்

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12-15.17-19

அந்நாள்களில் தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது – ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப் பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள். ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார். பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவதற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 24: 7. 8. 9. 10

பல்லவி: மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? ஆண்டவர் இவரே.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்;
இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்;
இவரே மாட்சிமிகு மன்னர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா. : மாற்கு 3:31-35

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *