முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-17

என் பிள்ளைகளே, அவர் பெயரால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப் பட்டுள்ளன. எனவே உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதுகிறேன். சிறுவரே, நீங்கள் தந்தையை அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்; இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது; தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது. ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை. உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்துபோகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 96: 7-8. 8b-9. 10

பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;
மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். பல்லவி

உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். பல்லவி

வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது;
அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில், உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 36-40

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *