குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நினைவு கூர்கின்றார்.

மன்னார் மறைமாவட்டத்தின் ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள், இன்று தனது குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நினைவு கூர்கின்றார். அன்பு ஆயர் தந்தை அவர்களே! உங்களை வாழ்த்துகின்றோம் , உங்களுக்காகச் செபிக்கின்றோம்.

மேலும் அறிய குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நினைவு கூர்கின்றார்.

திருவருகை காலம்-இரண்டாம் வாரம், புதன்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40:25-31

யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?’ என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை. “என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 103: 1-2. 3-4. 8,10

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை;
நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.- பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

 மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

புனித லூசியா (பிரகாசியம்மாள்)

டிசம்பர் 13

புனித லூசியா (பிரகாசியம்மாள்)

இவர் கி.பி 304ஆம் ஆண்டில் சிராக்யுஸ் நகரில் மறைசாட்சியாக மாண்டவர். தியோக்ளீசியன் காலத்தில் இஃது நிகழ்திருக்கலாம். திருச்சபை முழுவதிலும் இவரது பக்தி விரைவில் பரவியது. தொடக்கத்திருச்சபையிலிருந்தே இந்தப் பக்திக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. உரோமை திருவழிபாட்டு முறையில் அமைந்துள்ளவை என்று சொல்லப்படும் “பூசையின் மாறாத செபங்களின் தொகுப்பில்” இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கி.பி 1204ம் ஆண்டிலிருந்து அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு புனிதமாகக் கருதப்பட்டு வருகிறது.

தகந்த ஆதாரம் இல்லாவிடினும் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. லூசியாவின் தாய் இரத்தப் பெருக்கினால் வேதனைப்பட்டார். இதனால் தாயும் மகளுமாகக் கட்டோனியாவுக்குத் திருப்பயணம் சென்றனர். புனித ஆகத்தாவின் ஆலயம் அங்குள்ளது. இருவரும் அங்கு உருக்கமாக மன்றாடினர். லூசியாவுக்கு அன்றிரவு கனவில் ஆகத்தா தோன்றினார். “உன் தாய்க்குத் தேவையான உடல் நலனைப் பெற்றுக் கொடுக்க உன் மன்றாட்டே போதுமானதாய் இருக்கும்போது, என்னிடம் ஏன் கேட்கிறாய்? உன் மகற்பென்னும் லீலிமலரைக் கொணடு இறைவனுக்கேற்ற இல்லிடம் தயாரித்துள்ளாய். உனது விசுவாசமே உனக்கு இப்போது உதவுவதற்குப் போதுமானது” என்றார். தாயும் நலம் அடைந்தார்.

பின்னர், தம் உடைகளைஏழைகளுக்கு தானமளிக்க லூசியா அத்தலத்திலேயே தாயிடம் விடைபெற்றார். மீண்டும் சிராக்யுசுக்குத் திரும்பினர். வாக்களித்ததுபோல் உடைமைகளைப் பகிர்ந்தளித்தார். இளைஞன் ஒருவன் ஏற்கனவே இவரை மணந்துகொள்ள முயற்சிகள் பல செய்திருந்தான். இவரது கற்பின் வாக்குறுதியைக் கேட்டுக் கலங்கினான். பழிவாங்கும் எண்ணத்துடன், “இவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்” என்று உயர் அலுவலரிடம் குற்றம் சாட்டினான்.

“உன்னை அடித்து நொறுக்கும் உனக்குப் பேசுவதற்குக்கூட நா ஏழாது” என்றான். “இறையடியாள் நான். சரியான  சொற்களைச் சரியான  நேரத்தில் சொல்லத் த}ய ஆவியார் துணை நிற்பார். ஏனெனில் தூய வாழ்வு வாழ்வோர்  யாவரும் தூய ஆவியின் ஆலயங்கள்” என்றார்.  “விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள்.  அப்போது தூய ஆவி பறந்துவிடுவார்” என்றான். “எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கம் எனக்கு இரு மடங்கு வெற்றி உண்டு புரிந்து கொள்” என்றார்.

ஆவேசமடைந்தான் அலுவலன். ஆனால் அவரையோ அசைக்க இயலவில்லை. அவர்மேல் காய்ச்சிய தார் எண்ணையை ஊற்றினார். அவருக்குத் தீங்கிழைக்கவில்லை. மேலும் ஆத்திரம் அடைந்தவர்களாய் அவரது தொண்டையில் ஒரு வாளைப் பாய்ச்சினார்கள். இவ்வாறு மறைசாட்சி முடிபெற்று நம் மங்கை தூய வாயிலை அடைந்தார்.