புனித எட்மண்ட் காம்பியன்,

புனித எட்மண்ட் காம்பியன்,

ராபர்ட் பார்சன்ஸ் தோழர்கள், சே.ச

மறைசாட்சிகள் (கி.பி 1581)

இவர் இங்கிலாந்து நாட்டின் மிகப் புகழ்வாய்ந்த முதல் மறைசாட்சி. 17 வயதில் ஆகஸ்போர்ட் பல்கழைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். விரைவில் இவர் சிறந்த பேச்சாளர் என்பதும், திறமைமிக்க தலைவர் என்பதும் எல்லோருக்கும் விளங்கியது. இங்கு படிக்கம் நாட்களில் ஹென்றி அரசனின் “சமயச் சீர்திருத்த இயக்கத்தில்” சேரலானார். ஆனால் நல்ல வேளையாகத் தொடக்கத் திருச்சபையின் மறைத்தந்தையர்கள் எழுதியவற்றைக் கவனமுடன் படித்து வந்தார். இதன் விளைவாகக் கத்தோலிக்க விசுவாசத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார்.

33 வயதில் உரோமையில் இயேசு சபையில் சேர்ந்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிராக் என்ற நகரில் குருவானார். ஈராண்டுகளுக்குப் பின்னர் இரத்தினக்கல் வாணிகரின் வேடத்தில் இங்கிலாந்துக்குள் நுழைந்தார். அங்கு தந்தை ராபர்ட் பார்சன்ஸ் என்ற வேறொரு சே.ச குருவுடன் மறைபரப்பு அலுவலில் இறங்கினார். அவரது புனிதம், கனிவான தோற்றம், பேச்சுத்திறன், ஆணித்தரமாக எழுதும் முறை ஆகியவை அனைத்தும் அந்நாட்டுக் கத்தோலிக்கர்களுக்கு வதங்கிய செடிக்குத் தண்ணீர் ஊற்றியது போலிருந்தன.

ஓராண்டுக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார். அமைச்சரவைக்கு ஒரு மடல் எழுதிவைத்திருந்தார். அந்த மடலில் பல பிரதிகள் தயாரிக்கப்பட்டுக் கத்தோலிக்கரிடையே வவழங்கப்பட்டன. அது அவர்களின் விசுவாசத்தைத் தட்டி எழுப்பியது. விரைவில் அரசுக்கும் அக்கடிதம் கிட்டியது. “டைபர்ன்” என்ற அச்சத்தை மூட்டும் சிறையில் தள்ளப்படும் வரைக்கும் எம் இயேசு சபையினர் இச்சிலுவையை மகிழ்ச்சியுடன் சுமக்கத் தயாராயிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும், அரசியே! என்று குறிப்பிட்டுள்ளார். தம் சபைத் தலைவருக்கு எழுதிய மடலில் “நாள்தோறும் நாட்டின் வெவ்வேறு பகுதிக்குக் குதிரைமீது ஏறிச் செல்கிறேன். அறுவடையோ மிகுதி. குதிரைச் சவாரி நேரத்தில்தான் எனது மறையுரை மனதிற்குள் உருவாகும்” எனக்; குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை அரசி எலிநபெத்திற்கு முன் கொண்டு வந்து இவர் நிறுத்தப்பட்டார். அருகில் அமைச்சர்களும் இருந்தனர். “பாப்புவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எல்லோரும் அறிய அறிவித்தால், உனக்கு அரச அவையில் பெரியதோர் பதவி காத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினாள். “பாப்புவின் சீடன் நான் என்பதுதான் எனது மதிப்பை உயர்த்தும்” என்றார் எட்மண்ட்.

இவருக்குத் தூக்குத் தண்டனைத் தீர்ப்புக் கூறப்பட்டது. அப்போது துணிச்சலுடன் எட்மண்ட் கூறினார். “எங்கள் இத்தகைய தீர்ப்புக்குள்ளாக்குவதின் மூலம், உம்முடைய முன்னோர்கள், அதாவது முற்காலத்தில் வாழ்ந்த குருக்கள், ஆயர்கள், அரசர்கள் இவர்களுக்கும் தீர்பு வழங்கிவிட்டீர். இறைவன் என்றும் வாழ்கின்றார். நமது வாரிசுகளும் வாழத்தான் போகிறார்கள்.” 5 மாதங்களுக்குப்பின் இவர் 41 வயதில் டைபர்ன் சிறையில் ஏராளமான கடும் வேதனைகள் அனுபவித்தபின் கிறிஸ்துவுக்காகத் தூக்கிலிடப்பட்டார்.