திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் வெள்ளி

முதல் வாசகம்


இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48:17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 1: 1-2. 3. 4,6

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

நற்பேறு பெற்றவர் யார் அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ `அவன் பேய் பிடித்தவன்’ என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.