திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் திங்கள்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.” அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது `தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழி வரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். அங்கே சிங்கம் இராது; அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்.: திபா 85: 8-9. 10-11. 12-13

பல்லவி: இதோ நம் இறைவன் வந்து நம்மை விடுவிப்பார்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.  நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, மாநிலத்தின் ஆண்டவராம் அரசர் வருவார், அவரே நமது அடிமைத்தனத்தின் நுகத்தடியை அகற்றிடுவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-26

ஒரு நாள் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர். அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? `உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, அல்லது `எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *