இம்மாதம் 24ம் திகதி வெள்ளிக் கிழமை தொடக் கம் மருதமடுத்த் திருத்தயாரின் திருத்தலத்தில் நடைபெற்று வரும் இலங்கைக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கான 71வது ஒன்று கூடல் இன்று நிறைவுக்கு வருகின்றது. இன்று காலை மன்னார் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கிலே இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று காலையில் மடுத்திருப்பதியிலிருந்து வருகை தந்திருந்த தேசிய மற்றும், மற்றும் மறைமாவட்டக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இயக்குனர்களையும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய மாநாட்டுப் பங்கேற்பினரையும் மன்னாரிலிருந்து சென்றிருந்த மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களையும் வங்காலை தூய ஆனாள் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரும், வங்காலைப் பங்குச் சமூகமும் ரவீதி நுழை வாயிலில் தமிழ்ப் பண்பாட்டு முறையில் வரவேற்றனர்.
தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில், இலங்கைக் கத்தோலிக்க இளைஞர் பணிக்கான தேசிய இயக்குனர் அருட்பணி மல்கம் பெனாண்டோ அடிகள் ஏனைய மறைமாவட்டங்களின் கத்தோலிக்க இளைஞர் பணிக்கான மறைமாவட்ட இயக்குனர்கள் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க இளைஞர்களும், துறவிகளும், இறைமக்களும் இத் திருப்பலியில் கலந்து கொண்டனர். திருப்பலி முடிவில் அன்புச் சமூக உரையாடலுடன் கலை உணவும் இடம் பெற்று இறுதியில் இளைஞர்களுக்கான நிறைவு அமர்வுடன் அனைத்தும் முடித்துவைக்கப்பட்டன.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் பணிக்கான இயக்குனர் அருட்பணி சந்தாம்பிள்ளை ஜெயபாலன் அடிகளார் அனைத்து ஒழுங்குளையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நெறியாள்கை செய்திருந்தார். இவரோடு இணைந்து, அருட்சகோதரிகளும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் பணிக்குழுவின் இளைஞர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.