இவ் ஆண்டு நடைபெற்ற 5ம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் மன்னார் தூய சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவன் செல்வன் அன்ரோனியோ குபேரகுமார் நயோலன் அபிஷேக் 191 மதிப்பெண்களைப் பெற்று, மன்னார் மாவட்ட மட்டத்திலும், வன்னிப் பிரிவிலும் முதல் நிலை மாணவன் என்ற நிலையையும், வடமாகாண பிரிவில் மூன்றாம் நிலை மாணவன் என்ற நிலையையும் எட்டியுள்ளார். இம் மாணவனைப் பாராட்டி,பிரான்ஸ் நாட்டில் வாழும் மன்னார் அபிவிருத்தி அமைப்பு ஊக்குவிப்புப் பரிசொன்றை வழங்கியுள்ளது. இது மன்னார் பேராலயப் பங்குப் பணியாளர் அருட்பணி ச.ஜொ. பெப்பி சோசை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (08.11.2017) புதன்கிழமை மன்னார் தூய சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் புலமைப் பரிசில் பெற தகுதிபெற்ற 24 மாணவர்களையும், இவர்களை இத் தேர்வுக்காக ஆயத்தப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி ஊக்குவிக்கும் நிகழ்வு இக்கல்லூரி மாணவர்களின் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு இக்கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் ( டிலாசால் சபை) தலைமை தாங்கினார். அந் நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் பேராலயப் பங்குப் பணியாளர் அருட்பணி ச.ஜொ. பெப்பி சோசை அடிகளார் இதனை செல்வன் அன்ரோனியோ குபேரகுமார் நயோலன் அபிஷேக் அவர்களுக்கு வழங்கிக் கொளரவித்தார். மேலும் இக் கல்லூரி மாவட்ட மட்டத்தில் 7ம்,8ம், 10(2)ம், 14ம், 18(2)ம் இடங்களையும் பெற்றிருந்தது.