மே:25 – புனித ஏழாம் கிரகோரியார்

மே:25
புனித ஏழாம் கிரகோரியார்
பாப்பு – (கி.பி.1028-1085)

கில்டர்பிராண்ட் என்பது இவருக்கு பெற்றோரால் இட்டபெயர். இவர் டஸ்கனி நாட்டில் பிறந்தவர். உரோமையில் தன் படிப்புக்களை முடித்தபின் புனித ஆசீர்வாதப்பர் சபைத் துறவியானார். இவர் 5 பாப்பரசர்களுக்கு ஆலோசகர்களாக இருந்தார். பின்னர் இவரே பாப்புவின் நிலைக்கு உயர்த்தப் பெற்ற 7ம் கிரகோரியார் என்ற பெயரை தேர்ந்து கொண்டார். இவரது நாள்களில்தான் கிரகோரியாரின் சீர்திருத்தம் என்ற மாபெரும் சீர்திருத்தம் திருச்சபைக்கு கிடைத்தது. இதன்மூலம் திருச்சபை பாப்பரசர்களை தெரிந்து கொள்வதில் அரசர்களின் குறுக்கீட்டை முழுமையாக நீக்கிக் கொண்டு பொலிவுடன் திகழ்ந்தது. குருக்கள், திருமணத்தில் ஈடுபடுவது புனித பொருட்களும் புனித பதவிகளும் விற்க்கப்படுவது ஆகிய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளியிட்டார். இதன் காரணமாக அரசரான 4ம் என்றி இவரைக் கடுமையாக எதிர்க்க நேர்ந்தது. இதனால் இவர் சலர்னோவுக்கு ஓடி விட்டார். அங்கே கி.பி. 1085ம் ஆண்டு புனிதராக இறந்தார்.

மே:25 புனித பாஸி மரிய மதலேனம்மாள்

மே:25
புனித பாஸி மரிய மதலேனம்மாள்
கன்னி – (1566-1607)

இந்தத் தூய்மையின் வடிவம் இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் உயர்ந்த குடியில் தோன்றியவர். இளமையிலேயே நற்கருணைமீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அதோடு தனது கன்னிமையை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்திருந்தார். தமது 16ம் வயதில் கடுந்தவமுயற்சிகள் நிறைந்த கார்மேல் மடத்தில் சேர்ந்தார். துறவற வாழ்வில் நெடுநாள்களாய் இறைவன் அனுப்பிய பெரிய சிலுவையாகிய ஆன்ம இருளை இவர் சுமக்க வேண்டியிருந்தது. இறைவனால் முழுவதும் கைவிடப்பட்டதுபோல் உணர்ந்தார்.

இருந்தாலும் சவுக்கினால் தம்மையே கடுமையாக அடித்துக் கொள்வார். தாழ்ச்சி நிரம்பியவராக பேயின் கடுமையான தாக்குதலை எல்லாம் எதிர்த்து நின்றார். இதன் வழியாக இறைவனிடமிருந்து மீண்டும் அமைதியைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு அடிக்கடி இயேசு அவர்முன் தோன்றுவார். திருப்பாடுகள் அனுபவித்த ஆண்டவரின் காட்சி இவருக்கு 16 ஆண்டுகளாக நீடித்தது. அதோடு இவர் ஆண்டவரின் 5 திருக்காயங்களும் தமது உடலில் பதிந்திருக்கும் பேறு பெற்றிருந்தார். இவ்வாறு வேதனைகளின் நடுவே தமது 41ம் வயதில் இறைவன் திருவடி சேர்ந்தார்.

பொதுக்காலம், வாரம் 7 வெள்ளி

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 9-12

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்று கொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள். தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள். நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்;
என்றென்றும் சினங்கொள்பவரல்லர். பல்லவி

அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு
மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ;
அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி


நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை; உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில் இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம், வாரம் 7 வியாழன்

முதல்வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 49: 13-14. 14-15. 16-17. 18-19

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே;
தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே.
பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்;
சாவே அவர்களின் மேய்ப்பன். பல்லவி

அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்;
அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்;
பாதாளமே அவர்களது குடியிருப்பு.
ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி;
பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார். பல்லவி

சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ,
அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!
ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை;
அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. பல்லவி

உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும்,
`நீங்கள் நன்மையையே நாடினீர்கள்’ என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,
அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்துகொள்வர்;
ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை.பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 41-50

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: “நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. ஏனெனில் பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம், வாரம் 7 புதன்

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

“இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே, சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடு இருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை. இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 49: 1-2. 5-6. 7,8,9. 10

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்;
மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.
தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.பல்லவி

துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்?
என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?
தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ
தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். பல்லவி

உண்மையில், தம்மைத்தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது;
தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது.
மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது.
ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா?
படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா?பல்லவி

ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவது போல,
ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ!
அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-40

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 7 செவ்வாய்

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-10

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணம் என்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெற முடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக் கொள்வது கடவுளைப் பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார். அல்லது “மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது” என மறைநூல் சொல்வது வீண் என நினைக்கிறீர்களா? ஆகவே, “செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்” என்று மறைநூல் உரைக்கிறது. எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள். இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும். ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 55: 6-7. 8-9. 9-10. 22


பல்லவி: கவலையை ஆண்டவர்மேல் போட்டுவிடு; அவரே உனக்கு ஆதரவு.

நான் சொல்கின்றேன்: `புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?
நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!
இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! பல்லவி

பெருங் காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!
என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும். பல்லவி

ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்.’
இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர். பல்லவி

ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்;
அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

தூய சவேரியார் திருவிழா

தேவன்பிட்டி தூய சவேரியார் ஆலயப் பங்குச் சமூகம் தங்கள் பங்கின் பாதுகாவலராகிய தூய சவேரியார் திருவிழாவை 19.05.2018 சனிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் அறிய தூய சவேரியார் திருவிழா

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 7 திங்கள்

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 13-18

அன்புக்குரியவர்களே, உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும். உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம். இத்தகைய ஞானம் விண்ணிலிருந்து வருவது அல்ல; மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு சார்ந்தது; பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல் களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 19: 7. 8. 9. 14


பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;
என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29

அக்காலத்தில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை” என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், “நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, “இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?” என்று கேட்டார். அதற்கு அவர், “குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார். அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, “ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே” என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், “அவன் இறந்துவிட்டான்” என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான். அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மே:20 – புனித சியென்னா பெர்னர்தீன்

மே:20
புனித சியென்னா பெர்னர்தீன்
குரு – (கி.பி.1380-1444)

இவர் பிரான்சிஸ்கன் துறவற சபையை சீர்திருத்தியவர். இவருடைய நாள்களில் இவரே இத்தாலி நாட்டிலேயே புகழ் வாய்ந்த மறைபேச்சாளர். இவருக்கு 20 வயது ஆனபோது, தமக்கொத்த இளைஞர்களை சேர்த்துக் கொண்டார். இவர்களின் ஒத்துழைப்பினால் சியென்னா நகரில் ஒரு மருத்துவ மனையின் முழுப் பொறுப்பை ஏற்றார். ஆங்கே நாள்தோறும் குறைந்தது 20 பேர்களாவது பிளேக் நோய்க்க பலியானார்கள். ஆவர்களிடையே இவர் தொண்டு புரிந்தார்.

ஈராண்டுகளுக்குப் பின் பிரான்ஸ்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். குரப்பட்டம் பெற்றபின் 12 ஆண்டளவாக தனிமையாக ஜெபத்தில் நாள்களைக் கழித்தார். புpன்னர் பல இடங்களுக்கும் கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரையாற்றினார். சீர்திருத்தம் பெற்ற சபைக்கு தலைவரானார். நூளடைவில் பாப்புவின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மறையுரையாற்றத் தொடங்கினார். ஊத்தமமனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது சூழ்நிலையில் தாண்டவமாடிய கொடுமைகள் ஆகியவைகளைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயர் என்று சொல்லும் புண்ணிய முயற்சியையும், தாய்மாமரி, தூய வளனார் பக்தியையும் ஏராளமாகப் பரப்பி வந்தார். ஐர்ளு என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுரக்கம். இந்த 3 எழுத்துக்களையம் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து கொள்வார். புpன்னர் அதை மக்கள் மீது வைத்து அவர்களை மந்திரிப்பது இவரது வழக்கம்.

இவரது உருக்கமான மறையுரையைக் கேட்க சில வேளைகளில் 30,000 பேர் கூட ஆலயத்திற்கு வெளியிலும் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களை பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித் திரியக் கூடாதென்றும் இவர் அறிவுரை தந்துள்ளார். ஐர்ளு என்ற இயேசுவின் பெயருக்கு இவர் காட்டிய சிறப்பு பக்தி விரைவில் மக்களிடம் பரவியது. இந்தச்சின்னம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் காட்டப்பட்டது.
மும்முறை இவரைப்பற்றி திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம் இந்தக் குற்றச்சாட்டுக்களின் நடுவே முந்திய நிலையைவிட மிகவும் கூடியது. சீர்திருத்தம் பெற்ற இவரது சபையில் தொடக்கத்தில் 300பேர் இருந்தனர். இது ஆல் போல் தழைத்து இவரது இறுதி நாள்களில் 4000 பேராக பொலிவுடன் விளங்கியது. இறைமகன் விண்ணேற்ப்பு அடைந்த நாளன்று கி.பி.1444ல் இவரும் விண்ணகம் சென்றார்.