மே:31 – புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல்

மே:31

புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல்

இந்தத் திருநாள் தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டுதலால் பிரான்சிஸ்கன் சபையில் கி.பி.1263ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்கள வார்த்தை சொன்னபிறகு சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தை சந்தித்த நேரத்தில்தான் கன்னிமரி, என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது என்ற தமது ஒப்பற்ற புகழ்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் அங்கேயே திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரையிலும் 3 திங்கள் அளவாகத் தங்கி எலிசபெத்துக்கு உதவி புரிந்தார். மரியா பாடிய பாடல் ஒரு நன்றிப்பாடலாகும். இறைவன் தன்னை தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்தகிறார். மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும் நன்றி மனப்பான்மையுடன் கூறுகின்றார்.

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத் மரியாவைப் பார்த்து கேட்டார். என் ஆண்டவரின் தாய் என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத்திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருளடையாளத்தை செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக்குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகே மரியன்னைக்குப் பாராட்டு. ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் என்று கூறுவதன் வாயிலாக மரியாவின் ஆன்மீக அடித்தளமாக அமைவது அவரது ஆழமான விசுவாசம் என்பதையும் எலிசபெத் சுட்டிக் காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் வாக்குறுதியின் பெட்டகமே என்று மரியாவை திருச்சபை அழைக்கின்றது. வாழ்த்துகின்றது.

வாக்குறுதியின் பெட்டகம் யூதர்களிடம் இருந்த நாள்வரை யூதர்கள் இறைபிரசன்னத்தையும் யாவேயின் வழி நடத்துதலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான் மரியன்னை உலக முடிவுவரை இறையேசுவின் பிரசன்னத்தை மக்களிடையே கொண்டு வந்தவர் என்று புரிந்து கொள்கிறோம். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க யூதமக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழையின் முன் ஆடிமகிழ்ந்தார். அதே போன்று எலிசபெத்தின் வயிற்றுனுள் குழந்தையாக உருவாகிக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார் என்பதை இந்தச் சந்திப்பில் காண்கிறோம். இறுதியாக திருப்பேழை 12 யூத கோத்திரத்தாரையும் எருசலேம் நகரில் தாவீதின் அரியணை முன் ஒன்றாக கூட்டிச் சேர்த்தது. அதே போன்று எல்லாருக்கும் முதல்வராக நற்செய்தி மறைபரப்பாளராக தமக்கு தேவ தூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை எலிசபெத்திடம் அறிவிக்க சென்றதன் மூலம் உலக முடிவுவரை வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதையும் உணர்கிறோம். எனவே மரியன்னை பக்தி இயேசுவைப் பின்பற்றும் அனைவரையும் ஒரே மந்தையாக கூட்டிச் சேர்க்க மீட்பரின் வல்லமையுள்ள ஜெபத்திற்கு பயன் அளிக்கும் என்று நம்புவோம். ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்ற மனித ஆன்மா எது? தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும் இறைவனின் தொண்டுக்காகவும் அவரது புகழ்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கின்ற ஆன்மா தான். மேலும் அத்தகைய ஆன்மா இறைகட்டளை அனைத்தையும் உறுதியுடன் கடைப்பிடித்து தேவ மகத்துவத்தையும் அவரது வல்லமையையும் எப்போதும் கண்முண் நிறுத்தும்.

மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். ஏனெனில் மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறு பெற்றிருந்தார். இதை நன்றாக உணர்ந்திருந்தார். ஒரே ஆளான மகனாகிய கடவுள் அவரது மகனாகவும் இதைவிட மேலாக அவரது ஆண்டவராகவும் இருப்பார் என்று உணர்ந்திருந்தார். வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே. மரியன்னை தமக்கு வரும் மேன்மை எல்லாம் அருங்கொடை எனவும் வல்லமையே உருவானவரிடம் இருந்து வருகிறதெனவும் உணர்ந்து பாடுகிறார். இது புனித வணக்கத்துக்குரிய பேதாவின் விளக்கவுரை.

அன்னை கன்னிமரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா

தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
முதல் வாசகம்

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : எசா 12: 2-3. 4. 5-6


பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.” மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.