ஆண்டின் பெதுக்காலம் வாரம் 7 செவ்வாய்

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-10

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணம் என்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெற முடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக் கொள்வது கடவுளைப் பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார். அல்லது “மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது” என மறைநூல் சொல்வது வீண் என நினைக்கிறீர்களா? ஆகவே, “செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்” என்று மறைநூல் உரைக்கிறது. எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள். இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும். ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 55: 6-7. 8-9. 9-10. 22


பல்லவி: கவலையை ஆண்டவர்மேல் போட்டுவிடு; அவரே உனக்கு ஆதரவு.

நான் சொல்கின்றேன்: `புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?
நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!
இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! பல்லவி

பெருங் காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!
என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும். பல்லவி

ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்.’
இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர். பல்லவி

ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்;
அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *