பொதுக்காலம், வாரம் 7 புதன்

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

“இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே, சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடு இருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை. இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 49: 1-2. 5-6. 7,8,9. 10

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்;
மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.
தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.பல்லவி

துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்?
என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?
தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ
தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். பல்லவி

உண்மையில், தம்மைத்தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது;
தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது.
மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது.
ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா?
படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா?பல்லவி

ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவது போல,
ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ!
அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-40

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *