மே:31 – புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல்

மே:31

புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல்

இந்தத் திருநாள் தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டுதலால் பிரான்சிஸ்கன் சபையில் கி.பி.1263ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்கள வார்த்தை சொன்னபிறகு சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தை சந்தித்த நேரத்தில்தான் கன்னிமரி, என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது என்ற தமது ஒப்பற்ற புகழ்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் அங்கேயே திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரையிலும் 3 திங்கள் அளவாகத் தங்கி எலிசபெத்துக்கு உதவி புரிந்தார். மரியா பாடிய பாடல் ஒரு நன்றிப்பாடலாகும். இறைவன் தன்னை தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்தகிறார். மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும் நன்றி மனப்பான்மையுடன் கூறுகின்றார்.

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத் மரியாவைப் பார்த்து கேட்டார். என் ஆண்டவரின் தாய் என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத்திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருளடையாளத்தை செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக்குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகே மரியன்னைக்குப் பாராட்டு. ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் என்று கூறுவதன் வாயிலாக மரியாவின் ஆன்மீக அடித்தளமாக அமைவது அவரது ஆழமான விசுவாசம் என்பதையும் எலிசபெத் சுட்டிக் காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் வாக்குறுதியின் பெட்டகமே என்று மரியாவை திருச்சபை அழைக்கின்றது. வாழ்த்துகின்றது.

வாக்குறுதியின் பெட்டகம் யூதர்களிடம் இருந்த நாள்வரை யூதர்கள் இறைபிரசன்னத்தையும் யாவேயின் வழி நடத்துதலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான் மரியன்னை உலக முடிவுவரை இறையேசுவின் பிரசன்னத்தை மக்களிடையே கொண்டு வந்தவர் என்று புரிந்து கொள்கிறோம். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க யூதமக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழையின் முன் ஆடிமகிழ்ந்தார். அதே போன்று எலிசபெத்தின் வயிற்றுனுள் குழந்தையாக உருவாகிக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார் என்பதை இந்தச் சந்திப்பில் காண்கிறோம். இறுதியாக திருப்பேழை 12 யூத கோத்திரத்தாரையும் எருசலேம் நகரில் தாவீதின் அரியணை முன் ஒன்றாக கூட்டிச் சேர்த்தது. அதே போன்று எல்லாருக்கும் முதல்வராக நற்செய்தி மறைபரப்பாளராக தமக்கு தேவ தூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை எலிசபெத்திடம் அறிவிக்க சென்றதன் மூலம் உலக முடிவுவரை வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதையும் உணர்கிறோம். எனவே மரியன்னை பக்தி இயேசுவைப் பின்பற்றும் அனைவரையும் ஒரே மந்தையாக கூட்டிச் சேர்க்க மீட்பரின் வல்லமையுள்ள ஜெபத்திற்கு பயன் அளிக்கும் என்று நம்புவோம். ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்ற மனித ஆன்மா எது? தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும் இறைவனின் தொண்டுக்காகவும் அவரது புகழ்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கின்ற ஆன்மா தான். மேலும் அத்தகைய ஆன்மா இறைகட்டளை அனைத்தையும் உறுதியுடன் கடைப்பிடித்து தேவ மகத்துவத்தையும் அவரது வல்லமையையும் எப்போதும் கண்முண் நிறுத்தும்.

மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். ஏனெனில் மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறு பெற்றிருந்தார். இதை நன்றாக உணர்ந்திருந்தார். ஒரே ஆளான மகனாகிய கடவுள் அவரது மகனாகவும் இதைவிட மேலாக அவரது ஆண்டவராகவும் இருப்பார் என்று உணர்ந்திருந்தார். வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே. மரியன்னை தமக்கு வரும் மேன்மை எல்லாம் அருங்கொடை எனவும் வல்லமையே உருவானவரிடம் இருந்து வருகிறதெனவும் உணர்ந்து பாடுகிறார். இது புனித வணக்கத்துக்குரிய பேதாவின் விளக்கவுரை.

அன்னை கன்னிமரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா

தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
முதல் வாசகம்

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : எசா 12: 2-3. 4. 5-6


பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.” மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-25

அன்புக்குரியவர்களே, உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்றும் முன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார். உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும். எனவே நீங்கள், தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள். ஏனெனில், “மானிடர் அனைவரும் புல்லைப் போன்றவர்; அவர்களது மேன்மை வயல்வெளிப் பூவைப் போன்றது; புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.” இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 147: 12-13. 14-15. 19-20


பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.பல்லவி

அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 32-45

அக்காலத்தில் சீடர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழ இருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். அவர், “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர்களிடம் கூறினார். செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப் புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம் 8 வாரம் செவ்வாய்

முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16

அன்புக்குரியவர்களே, உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள். ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராய் இருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள். முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள். உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவர்களாய் இருங்கள். `நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்’ என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 98: 1. 2-3. 3-4


பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும

உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

அக்காலத்தில் பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார். அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அருட்பணியாளர்களுக்கு புதிய பணிப் பொறுப்பு

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராகக் கடந்த ஆண்டு மார்கழி மாதம் பொறுப்பேற்ற ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களுக்காக வழங்கும் முதலாவது பணி மாற்ற ஒழுங்கமைப்பு இன்று மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மேலும் அறிய அருட்பணியாளர்களுக்கு புதிய பணிப் பொறுப்பு

பொதுக்காலம், வாரம் 8 திங்கள்

முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப்பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது. இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்.
இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 111: 1-2. 5-6. 9,10

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்;
நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;
அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். –பல்லவி

அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்;
தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்;
இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். –பல்லவி

தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;
தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;
அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.
அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. –பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட’ ” என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம், வாரம் 7 சனி

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது. என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 141: 1-2. 3,8

பல்லவி: தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!

ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.
உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக!
மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! பல்லவி

ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்;
என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.
ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன;
உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மே:26 – புனித பிலிப்புநேரி

மே:26
புனித பிலிப்புநேரி
குரு – (கி.பி.1513-1595)

இவர் இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் பிறந்தவர். 26 வயது நடக்கும்போது வணிகத் தொழிலை விட்டு விட்டு தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோமை நகர் சென்றடைந்தார். தத்துவக்கலை, இறையியல் பயின்றதோடு ஜெபத்திலும,; தவமுயற்சிகளிலும் தம்மை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டார். அந்நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும் மாலையானதும் நடந்தே சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு இரவில் புனித செபஸ்தியாரின் புதை குழி வளாகத்தில் தங்குவார்.

மேலும் நலிவுற்ற மக்களின் நலன்களைக் கருதி மருத்துவ மனைகளில் நோயாளிகளைச் சந்திப்பார். தெரு வழியாக செல்லும் போது ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இணங்கண்டு தமது திறமையான பேச்சினாலும் அனுகுமுறைகளினாலும் இறைவன் பக்கம் மனம்மாறச் செய்வார். இந்த அனுபவமானது கி.பி.1548ல் தமது குறிக்கோளை ஏற்றுக் கொண்டவர்களை ஒருங்கிணைக்கவும் திவ்ய நற்கருணை ஆராதனை பக்தி முயற்சிகளை தொடங்குவதற்கும் புனிதரைத் தூண்டியது. இவ்வாறு 10 ஆண்டுகள் உருண்டோடின.

இவரின் ஆன்ம குரு இவரைக் குருத்துவததை நாடப் பணித்தார். குருப்பட்டம் பெற்றபின் 33ஆண்டுகளாக “ஆரட்டரி„ என்று அழைக்கப்படும் செபக் குழுவை பல குருக்களைக் கொண்டு நடத்தினார். ஏராளமான ஞானப்பயன் கிடைப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இவர்களே (ஆரட்டோரியன்ஸ்) “ஜெபக் குழுவினர்„ என்று இந்நாள்வரை போற்றப்படுகின்றனர். நாள்தோறும் இவரிடம் ஒப்பரவு அருட்சாதனம் பெறவும் ஆன்மீக ஆலோசனை பெறவும் தொழிலாளர் பல பணிகளை முடித்தபின் வந்த வண்ணம் இருந்தனர். கர்தினால்கள் பலரும் குருக்களும் இவரது ஆலோசனையை நாடிவந்தனர். இவர் திருப்பலி நிறைவேற்றும் போதெல்லாம் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்கு கொண்டு வந்து சேர்த்தார். எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கவும் ஆழமான இறைஅனுபவம,; தாழ்ச்சி, ஒறுத்தல் ஆசைகளைக் கட்டுப்படுத்தல் அடிக்கடி ஒப்பரவு அருட்சாதனத்தைப் பெறுதல் ஆகியவற்றில் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார். இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தன் அலுவலகத்திற்கு விரைவாக போய்விடுவார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும் முகமாக பூசைக்கு உதவி செய்யும் சிறுவர் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளை கொடுத்து “அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள்„ என்றார். இளைஞரும் தம் குற்றத்தை இதன்மூலம் உணர்ந்து திருத்திக் கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். பிறரை பழிதூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்கச் சொன்னார். பறித்து முடித்த பின் அவற்றைக் காற்றில் பறக்கவிடச் சொன்னனார். இதன்பின் அந்தப் பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டிருக்கின்றார். அதாவது அவ்வளவு முடிகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டுவரக் கேட்டிருக்கின்றார். இது இயலாதே என்று பெண்கூற அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள் திருத்திக் கொள் என்று சொன்னார்.

இவரை உரோமை நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என அழைக்கின்றார்கள். இது இவருக்கு மிகப் பொருத்தம். நாள்தோறும் பிலிப்பு வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு ஆண்டவரே, பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான்.

மடுமாதா திருத்தலத்தில்

கிறிஸ்தவ, சுற்றுலாத் துறை அமைச்சின் வேண்டுகையின் பேரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் மருமாதா திருத்தலத்தில் திருப்பயணிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படவுள்ள 300 வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப கலந்துரையாடல் ஆய்வுப்பணிகள் கடந்த 23.05.2018 புதன்கிழமை மடுமாதா திருத்தலத்தில் நடைபெற்றது. மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில்