தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் அற்புத சிலுவை இன்று 24.10.2018 மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கை வந்தடைந்தது. மாந்தை லூர்து அன்னை திருத்தலத்தின் திருப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை மன்னார்த் தீவின் நுழை வாயிலாக இருக்கும் தள்ளாடி தூய அந்தோனியார் திருவுருவத்திற்கு முன்பாக பேராலயப் பங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.அவ்விடத்திலிருந்து உந்துருளி அணிவகுப்போடு திருச் சிலுவை அழைத்துவரப்பட மன்னார் பாலத்தின் முன்பாக இறைமக்கள் இணைந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயம் வரை பவனி தொடர்ந்தது:
அதன்பின்னர் பேராலய முன்றலில் வைத்து திருச் சிலுவை பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அவர்களிடம் கல்கமுவ பங்குத் தந்தை அருட்பணி.அலெக்ஸ் ஜானக அவர்கள் வழங்கினார். அதன்பின் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. அருட்பணியாளர்கள், துறவிகள், பெருந்தொகையான இறைமக்கள் இவ் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.