மறைவாழ்வுக் கல்வி தேர்வு,

இலங்கை தேசிய கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய அருட்பணி மையம், மறைவாழ்வுக் கல்விப் பணியாளருக்கென வருடந்தோறும் நாடு தழுவிய ரீதியில் நடாத்தும் மறைவாழ்வுக் கல்வி முதல் தேர்வு, மேலும் அறிய மறைவாழ்வுக் கல்வி தேர்வு,

குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு

மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும், தற்போது அமெரிக்கா நியூயோர்க் மறைமாவட்டத்தில் பணி புரிபவருமான அருட்பணி ஆலோசியஸ் பாக்கியநாதர் அடிகள் தனது குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு நிறைவினை நேற்று 22.09.2018 மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் கொண்டாடினார். மேலும் அறிய குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு

பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு

2018.09.16

முன்னுரை.

ஆண்டவர் என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்: என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நாம் மன்றாடும் நாளில் நமக்குச் செவி சாய்க்கும் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு.

நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே அது உயிரற்றதாயிருக்கும்: என்னும் செய்தியே இன்று நமக்கு முன் வைக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது. இறைவனை அன்பு செய்கின்றோம், அவரை விசுவசிக்கின்றோம் என்று சொல்லுகின்றவர்கள்;, அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும், இறைவனுடைய சித்தத்திற்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், தாழ்ச்சியுடையோராய் இருக்க வேண்டும், உயர்வு – தாழ்வு மனப்பான்மையோடு வாழக்கூடாது. இவைகளை இன்றைய இறைவார்த்தைகள் வலியுறுத்திக் கூறுகின்றன.

எனவே நாமும் இறைவார்த்தையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன், இறைச் சித்தத்திற்கு என்றும் பணிந்திருப்பேன், ஒற்றுமையிலும், உறவிலும் இறைவனைச் சந்திப்பேன் என்னும் செயலோடு கூடிய உறுதிப்பாட்டுடன் வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்பு வித்தேன்.:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 50:5-9

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்;டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

.இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 116:1-6,8-9

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்

ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்: ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.பல்லவி:

சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன: பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன: துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்: ‘ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்’ என்று கெஞ்சினேன்.பல்லவி:

ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்: நம் கடவுள் இரக்கம் உள்ளவர். எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்: நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.பல்லவி:

என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்: என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார். உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2:14-18

என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, ;நலமே சென்று வாருங்கள்: குளிர் காய்ந்து கொள்ளுங்கள்: பசியாற்றிக் கொள்ளுங்கள்: ; என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

ஆனால்,  ;ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன ; என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. கலாத்தியர். 6:17

அல்லேலூயா, நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்..அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35

அக்காலத்தில்

இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊருகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.  வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ;நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ; என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் அவரிடம், ;சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ; என்றார்கள்.

ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ; என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ;நீர் மெசியா ; என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ; என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சென்னார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ;என் கண் முன் நில்லாதே, சாத்தானே.  ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ; என்று கடிந்துகொண்டார்.

பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ; என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. அருளும் நீதியும் கொண்டவரான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும், தமது விசுவாச வாழ்வை: முன்மாதிரிகை, பொறுப்புணர்வு, தாழ்மை, இறைசித்தத்திற்குப் பணிந்த வாழுதல் ஆகிய பண்புகளால் எடுத்துக்காட்டி வாழுவதற்கு வேண்டிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  2. இரக்கத்தின் தந்தையே இறைவா! முன்மாதிரிகை, பொறுப்புணர்வு, தாழ்மை, இறைசித்தத்திற்குப் பணிந்த வாழுதல் ஆகிய பண்புளை எம்மிலே வளர்த்து, உமக்கு உவப்புடைய  வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  3. அன்புத் தந்தையே இறைவா!  இலத்திரனியல்  பொருட்களை உற்பத்தி செய்கின்றவாகளும், பயன்படுத்துகின்றவர்களும், ஓழுக்கத்தையும், நற் சமூக விழுமியங்களையும் மனத்திற் கொண்டு செயற்படும் நல்மனத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  4. பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்ற தந்தையே! உலகில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் வன்முறையாளர்கள், மற்றும் தலைவர்கள் உண்மையினதும், நீதியினதும் வழிக்குத் திரும்பி அமைதியை ஏற்படுத்துவோராகச் செயற்பட அவர்களை மாற்றியமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  2018Sunday24thordinary

142 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின், மன்னார் தூய செபஸ்தியார் போராலயப் பங்கில் 142 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.09.2018) மிகவும் பக்தி அருட்சியோடு நடைபெற்றது. மேலும் அறிய 142 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு

சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பும், திறப்பு விழாவும்

ஆட்காட்டிவெளிப் பங்கின் கிளை ஆலயமான சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பும், திறப்பு விழாவும் கடந்த 04.09.2018 புதன் கிழமை மாலை பங்கத் தந்தை அருட்பணி.ச.சத்தியறாஜ் தலைமையில் ஆலய அருட்பணிப் பணிப் பேரவையின் பங்களிப்போடும், ஆலய மக்களின் பங்களிப்போடும் நடைபெற்றது. மேலும் அறிய சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பும், திறப்பு விழாவும்

சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

 

ஆட்கட்டிவெளிப் பங்கு / சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய ( மன்னார் மறை மாவட்டம் ) ஆலயத் திறப்பு , அர்ச்சிப்பு விழா Adkaddiveli ( Mannar Diocese) Parish / Chalampan Our Lady of Refugee Church Opening and Consecration 04/09/2018

பொதுக்காலம், வாரம் 22 செவ்வாய்

முதல் வாசகம்   

      
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார். ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. “ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?” நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 145: 8-9. 10-11. 12-13. 13-14

பல்லவி: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர்.
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு;
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்;
தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.
தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார்.
தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது. “வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுநிலையினருக்கான இறையியல் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டள்ளது.

கத்தோலிக்க திரு அவையின் பொது நிலையினரை இறையியல் நம்பிக்கை உண்மையில் வலுப்படுத்தும் நோக்கோடு: மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் பேரார்வத்தினால் மன்னார் மறைமாவட்டத்தில் பொதுநிலையினருக்கான இறையியல் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டள்ளது. மேலும் அறிய பொதுநிலையினருக்கான இறையியல் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டள்ளது.

ஆண்டின் பொதுக்காலம் 22 வாரம் திங்கள்

முதல் வாசகம்


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 119: 97-98. 99-100. 101-102

பல்லவி: ஆண்டவரே! திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!

ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.
என் எதிரிகளை விட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை;
ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது. பல்லவி

எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளவனாய் இருக்கின்றேன்;
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்;
முதியோர்களை விட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன்.
ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன். பல்லவி

உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன்.
உம் நீதி நெறிகளை விட்டு நான் விலகவில்லை;
ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30

அக்காலத்தில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப் பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், `மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, `கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.