இலங்கையின் திருத்தூதரென நாம் அனைவரும் பெருமையோடு நினைவு கூரும் தூய யோசேவ் வாஸ் அடிகளார் இந்தியாவின் கோவா நகரிலிருந்து, இலங்கை வாழ் கத்தோலிக்க மக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த 1687ம் ஆண்டு இலங்கைக்குப் பயணித்தபோது, இறைவனின் விருப்பப்படி தன்னையறியாமலேயே தற்போதைய மன்னார் நகரித்திலிருந்து தென் கிழக்குப் பக்கமாக சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சவுத்பார் என்னும் இடத்திலுள்ள கடற்கரையில். 1687ம் ஆண்டு வைகாசி மாதம் 05ம் திகதி முதன்முதலாகத் தரையிறங்கினார் என ஆதாரபூர்வமான வரலாற்றுக் குறிப்புக்கள் வரைவிட்டுக் காட்டுகின்றன.
இவ்விடத்தில் கடந்த பல ஆண்டுகளாக, உள்ளநாட்டுப் போரில் மாற்றங்கள் எற்பட்டு நிலையில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் 05ம் திகதி வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. மன்னார் சாந்திபுரம் பங்கின் பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட இவ்விடத்தின் பொறுப்பினை சாந்திபுரம் கிறிஸ்து அரசர் ஆலயப் பங்குத் தந்தை ஏற்று முன்னெடுத்து வருகின்றார்.
நேற்றைய தினம் 05.05.2018 சனிக்கிழமை அதாவது தூய யோசேவ் வாஸ் அடிகளார் முதன் முதலாக இலங்கையில் தடம் பதித்த அந்த நாளில் அதே இடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. சாந்திபுரம் கிறிஸ்து அரசர் ஆலயப் பங்குத் தந்தை அருட்பணி.யூட் ஞானறாஜ் நேரு அடிகளாரின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரு வழிபாட்டு நிகழ்வுகளில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இத் திருநிகழ்வில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மூத்த பிரஜைகளின் சமாச இயக்குனர் அருட்பணி.அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி. அடிகளார், மறைமாவட்ட அன்பிய இயக்குனர் அருட்பணி.அ.ஆரோக்கியம் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவிற்கு குருக்கள், துறவிகளும்,வடமகாண சபை உறுப்பினர் கௌரவ பிறிமூஸ் சிராய்வா. மன்னார் பிரதேச செயலர் திரு.பரமதாஸ், மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற பணியாளர்கள் பலரும், இறைமக்களும் கலந்து கொண்டனர். திருப்பலி முடிவில் தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் திருவுருவம் கடலுள் இயந்திரப் படகில் எடுத்துச் செல்லப்பட்டு கடல் ஆசீர்வதிக்கப்பட்டது.