பாஸ்கா காலம்-6 வாரம் திங்கள்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15

பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறு நாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சில நாள்கள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம். அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், “நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்” என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்கவைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 149: 1-2. 3-4. 5-6,9


பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.

அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!
சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையில் உள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப்படுத்துவார்.பல்லவி

அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:26 – 16:4

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன். உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது. தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *