கத்தோலிக்க திருச்சபையில் இன்று (21.10.2018) ஞாயிற்றுக் கிழமை உலக மறைபரப்புத் தினம் கடைப்பிடிக்கப்படு கின்றது. கத்தோலிக்க மக்கள் தாம் பெற்ற இறை நம்பிக்கையை வாழவும், ஆழப்படுத்தவும், சவால்களுக்கு மத்தியில் வாழும் ஏனைய கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் இறை நம்பிக்கையை ஆழப்படுத்தவும், கிறிஸ்துவின் அன்பையும், இரக்கத்தையும் அனைவரும் சுவைக்கவும் இறைவேண்டுதல் செய்வதும், தம்மை முழுமையாக அர்ப்பணிப்பதும்,பொருளுதவி அளிப்பதும் இந்நாளின் மையமாக அமைகின்றது.இந் நாள் மன்னார் மறைமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆழமான அர்ப்பணிப்போடு இறைமக்கள், குருக்கள், துறவிகளால் முன்னெடுத்தச் செல்லப்படுகின்றது: மன்னார் மறைமாவட்டத்திலுள்ள அனைத்துப் பங்குகளிலும் அப் பங்குகளின் வள நிலைக்கேற்ப இந் நாள் நிகழ்வுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. குறிப்பாக பெரும்பாலான பங்குகளில் மறைபரப்புச் சந்தை ஏற்படுத்தப்பட்டு கணிசமான தொகையினை மறைமாவட்டம் திருத்தந்தையின் மறைபரப்புப் பணி நிதியத்திற்கு வழங்கிவருகின்றது.
இன்று (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை உலக மறைபரப்புத் தினம் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் எழுச்சியோடு முன்னெடுத்தச் செல்லப்படும் நிலையில், இன்றைய மறைபரப்பு நாள் பதிவுகளில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற மறைபரப்புச் சந்தை நிகழ்வுகள் எமது செய்திப் பிரிவுக்குக் கிடைத்துள்ளது. அதன் பதிவுகளை இங்கே தருகின்றோம்.
இந் நிகழ்வில் நிதிசேகரிப்பதற்கு மறைபரப்புச் சந்தைக்குள், விற்பனை நிலையங்கள் கிறிஸ்தவ விழுமியங்களை உள்ளடக்கியதான பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. விளையாட்டுக்கள், கேள்வி பதில் போட்டிகள், வினோத நிகழ்வுகள், அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்புக்கள் என்பனவும் முக்கிய இடம் பெற்றன.