மே:03 – புனித யாக்கோப்பு

மே:03

புனித யாக்கோப்பு
திருத்தூதர்

இவர் யூதா ததேயுவின் சகோதரர், ஆண்டவரின் உறவினர். இவரின் தாய்க்கும், இயேசுவின் தாய்க்கும், அக்காள் தங்கை முறை. இவர் செபதேயுவின் மகன் அல்லர். அல்பேயுவின் மகன். பக்தியில் சிறந்து விளங்கியவர். எருசலேம் நகரின் முதல் ஆயராக விளங்கியவர். (தி.ப.21,18) யூத மரபுகளைக்காத்து எருசலேம் ஆலயத்தில் திருப்பணிகளையும் திறம்பட நடத்தி வந்தவர். ஏரோது அக்ரிப்பா இழைத்த கொடுமைகளை பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்.

நற்செய்தியில் இவர் சிறப்பிடம் பெறாவிடினும் நமதாண்டவர் விண்ணேற்பு அடையும்முன் இவருக்கு சிறப்பான முறையில் காட்சி தந்தார் என்று புனித பவுல் குறிப்பிடுகிறார். மேலும் பவுல் மனந்திரும்பிய பிறகு 3 ஆண்டுகள் கழித்து பேதுருவுடன் எருசலேம் சென்றடைந்த போது கிறிஸ்தவர்கள் பொதுவாக பவுலை சந்தேக கண்கொண்டு பார்த்தாலும் யாக்கோப்பு இவரை இருகரம் விரித்து வரவேற்றார். யெருசலேமில் கூடிய முதல் பொதுச்சங்கத்தில் பிற இனத்தவர் விருத்தசேதனமின்றி திருமுழுக்குடன் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று ஒரே மனதாக முடிவெடுத்தபோது யாக்கோப்பு சகோதரரே கடவுளிடம் திரும்பும் பிறஇனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது என்ற முடிவை அரங்கேற்றினார்.

யூத வரலாற்று ஆசிரியர் கி.பி.62ல் யாக்கோப்பு கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டார் என்று உறுதிபடக் கூறுகிறார். திருமுகம் ஒன்று இவரால் எழுதப்பட்டுள்ளது. இந்தத் திருமுகம் பற்றி 23ம் யோவான் தாம் பாப்புவாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் தமது ஆண்டுத் தியான குறிப்பேட்டில் குறிப்பிட்டு வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *