பாஸ்கா காலம்-5 வாரம் திங்கள்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18

அந்நாள்களில் பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர். இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள். அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள். லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து உரத்த குரலில், “நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்” என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பிக் கூறினர். அவர்கள் பர்னபாவைச் `சேயுசு’ என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை `எர்மசு’ என்றும் அழைத்தார்கள். நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விரும்பினார். இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது: “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்கள் இனங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார்; என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.” இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 115: 1-2. 3-4. 15-16


பல்லவி: எங்களுக்கன்று, ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்.

எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று: மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்;
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும்.
`அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? பல்லவி

நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்;
தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.
அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே,
வெறும் மனிதக் கைவேலையே! பல்லவி

நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக!
விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே.
விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;
மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 21-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.” யூதா – இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் – அவரிடம், “ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?” என்று கேட்டார். அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *