ஏப்ரல்:30 – புனித ஜந்தாம் பத்திநாதர்

ஏப்ரல்:30
புனித ஜந்தாம் பத்திநாதர்
பாப்பு –(கி.பி.1504-1572)

இவர் இத்தாலி நாட்டில் அலைக்சாண்டிரியா நகருக்கருகில் கி.பி. 1504ம் ஆண்டு பிறந்தார். தொமினிக்கன் குருத்துவ சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றபின் மறைக்கலைகளைக் கற்றுத்தந்தார். அடுத்து ஆயராகவும் பின்னர் கர்தினாலாகவும் கி.பி.1566ம் ஆண்டில் பாப்புவாகவும் உயர்த்தப் பெற்றார்.

16ம் நூற்றாண்டு திருச்சபையின் மாபெரும் நிகழ்ச்சியாக வரலாற்று புகழ்பெற்றது திரிதெந்தீன் பொதுச்சங்கம். இச்சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்துவதில் இவர் பெரியதோர் பொறுப்பினை ஏற்றார். இன்று 2ம் வத்திக்கான் சங்க தீர்மானங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் விளைவுகள் எப்படியோ,அப்படியே திரித்தெந்தின் சங்கம் முடிந்த பின்னும் இருந்தன. மேலும் துருக்கியரின் சீற்றத்தையும் வெறியையும் இவர் சந்திக்க வேண்டியிருந்தது. குருமடங்களுக்குள் பெரிய சீர்திருத்தங்களை இவர் கொண்டு வந்தார். திருத்தம் பெற்ற புதிய திருப்பலி நூலை இவர் வெளியிட்டார். புதிய திருத்தெந்தின் மறைக்கல்வி நூல் ஒன்றினையும் வெளியிட்டார். திருச்சபையில் தோன்றிய குறைபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மருத்துவமனைகள் பல கட்டுவதற்கு காரணமாயிருந்தார். உணவின்றித் தவித்தோருக்கு உதவியளித்து வந்தார்.

இங்கிலாந்து அரசி முதல் எலிசபெத்திடமிருந்தும் இத்தாலி நாட்டு அரசன் 2ம் மாக்ஸிமில்லியனிடமிருந்தும் கடும் எதிர்ப்புக்களைச் சந்தித்தார். பிரான்சில் கொந்தளிப்பு ஹாலாந்து நாட்டில் போர்க்குரல் ஆகியவற்றினிடையில் துருக்கியரின் தாக்குதலையும் எதிர்கொண்டார். ஒரு பெரிய கடற்படையைத் திரட்டினார். லெப்பான்றோ என்ற வளைகுடாவில் துருக்கியர் மீது வெற்றி கண்டார். திருச்சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர பாடுபட்ட இத்திருத்தந்தை நாள்தோறும் பலமணிநேரம் இறைவனுடன் ஒன்றிப்பதன் மூலம் அனைத்திலும் வெற்றி பெற்றார். இவர் கடுமையான உண்ணா நோன்புகள் இருப்பார். பாப்பவாயிருந்தும் தமது தொமினிக்கன் சபை ஒழுங்குகளை விடாமல் கடைப்பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *