இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

மன்னார் மறை மாவட்டத்தின், வவுனியா மறைக் கோட்டத்தில், பம்பைமடுப் பங்கின் 5ம் மைல் என்னும் இடத்தில் அமைக்கப் பட்டுள்ள இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா நாளை (08.04.2018) ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு கொண்டுடாடப் படவுள்ளது. மேலும் அறிய இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா

ஏப்ரல் 07- புனித ஜான் பாப்டிஸ்ட் டெலாசால்

ஏப்ரல் 07
புனித ஜான் பாப்டிஸ்ட் டெலாசால்
(கி.பி. 1651-1719)

 

“காலத்திற்கேற்ற கல்விமுறைத் தந்தை” என்று அழைக்கப்படும் இவர் பிரான்சில் ரீம்ஸ் நகரில் நகர மன்ற உறுப்பினர் மகனாய் தோன்றியவர். 16ம் வயதிலேயே ரீம்ஸ் நகரின் பேராலயத்தில் பெரிய பொறுப்பு வகித்தவர். 27 வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். தாழ்ச்சியிலும் பக்தி முயற்சிகளிலும் சிறந்து விளங்கினார். அதே வேளையில் ஏழைகளின் மீது கொண்ட பரிவு நாளுக்கு நாள் இவரிடம் மிகந்து வந்தது. இதுவே இவரது வாழ்நாள் எல்லாம். ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றதுக்காக தம்மை முற்றிலும் கையளிக்க உதவியாக இருந்தது.

இவர்தம் நாட்களில் ஜான்சனிசம் என்ற நச்சுக்கலந்த கொள்கை பிரான்ஸ் நாட்டை அதிர வைத்தது. பற்றாக்குறைக்கு அண்டை நாடுகளுடன் ஓயாத போர். இவை எல்லாம் நாட்டில் கடுமையான பஞ்சத்தையும் பல்வேறு இன்னல்களையும் கொண்டு வந்துவிட்டன. மேலும் கல்வியறிவு அறவே இல்லாது போயிற்று. இத்தகைய சூழலில் தான் ரீம்ஸ் நகரில் ஏழைமாணவர்களுக்கு இவர் இரு பள்ளிக்கூடங்கள் நிறுவினார். நாள்தோறும் கற்றுக் கொடுக்கும் யுக்திகள் பற்றி ஆசிரியர்களிடம் கலந்துரையாடுவார். அவர்களை எல்லா வழிகளிலும் ஊக்குவித்தார். தங்க இல்லம் அளித்து தம்மோடு உணவருந்த வைத்தார்.
இந்தப் புதிய முறையை கையாண்டதன் பயனாகத்தான் நாளடைவில் “கிறிஸ்துவப் பள்ளிகளின் சகோதரர்கள்” என்ற நிறுவனத்தை தோற்றுவித்தார். 1680ல் தொடங்கப்பட்ட நிறுவனம் முற்றிலும் தேவ பேணுதலின் அடிப்படையில் அமைய வேண்டுமென்றே திட்டம் தீட்டினார். பல நெருக்கடிகளையும் இன்னல் இடையூறுகளையும் சந்தித்த பின்னர் நாளடைவில் அது உலகளாவிய நிறுவனமாக காட்சியளிக்கத் தொடங்கியது.

காலத்தின் அறிகுறிகளிற்கு ஏற்ப தொடக்க மேல்நிலைக் கல்வி புகட்டுவதில் பல புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி கண்டதால் “கல்வித் தந்தை” என்று உலகம் போற்றுகிறது. இந்த நிறுவனத்தில் அனைவருமே சகோதரர்களாகவே இருக்க வேண்டும். குருக்களுக்கு இடமில்லை. சகோதரர்கள் அனைவரும் இளைஞர்களின் ஞானக் கண்களை திறந்து விடுவதற்கென முற்றிலும் தங்களையே இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் என்ற குறிக்கோளோடு இன்றுவரை இந்தத் துறவற சபை இயங்கி வருகிறது. தாய்மொழியில் மட்டுமே கற்றுக் கொடுத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் தோற்றுவித்தார். இத்தகைய முயற்சிகளுக்கு ஒரே குறிக்கோள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. “கல்விப் பணியின் மூலம் நேர்மையான கிறிஸ்தவர்களை உருவாக்குதல்.”

இந்தப் பணிகள் எல்லாம் முடிவுக்கு வந்த வேளையில் முழுப் பொறுப்பையும் சபை சகோதரர் ஒருவரிடம் ஒப்படைத்தார். 1719ம் ஆண்டு அவரைத் தாக்கிய ஆஸ்துமா உச்சநிலையை அடைந்தது. அத்துடன் மூட்டு வலியும் சேர்ந்து கொண்டது. இருப்பினும் இதுவரை கடைப்பிடித்து வந்த கடுமையான தவ முயற்சிகளை அவர் விட்டுவிடவில்லை. இந்த வேளையில் ஒரு சிறு விபத்தில் இவர் சிக்கிக்கொண்டது இவரது வேதனைகளை பல மடங்காக்கியது. இந்தத் சூழலில் ஏப்ரல் 7ல் பெரிய வெள்ளிக்கிழமையன்று இறைவன் இவரது தூய ஆன்மாவை ஏற்றுக் கொண்டார். கி.பி.1950ல் புனிதர் பட்டம் கொடுத்த திருத்தந்தை இவரை “பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலர்” என்று அறிவித்தார்.

பாஸ்கா காலம்-முதல் வாரம் சனி

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4:13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். “நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள். அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 118: 1,14-15. 16,18. 19-21

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்;
ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.பல்லவி

நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்;
அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.