ஏப்ரல்:11 புனித ஸ்தனிஸ்லாஸ்

ஏப்ரல்:11

புனித ஸ்தனிஸ்லாஸ்
கிராக்கோ நகர் ஆயர், மறைசாட்சி – (கி.பி.1030-1079)

இவர் பிரபு குலத்தில் தோன்றியவர். பெற்றோருக்குப் பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமலிருந்து ஜெபதப முயற்சிகளின் பயனாகப் பிறந்தவர். பெற்றோர் இவரை ஆழ்ந்த ஞானத்திலும் தெய்வ பயத்திலும் வளர்த்தனர். இவர் குருத்துவத்தை மேற்கொண்டார். ஞானத்துடன் மறையுரை ஆற்றுவதன் மூலம் மக்களைக் கவர்ந்தார். ஆயராக நியமனம் பெற விரும்பவில்லை. எனினும் திருத்தந்தை 2ம் அலைக்சாண்டரின் கட்டாயத்தின் பேரில் இப்பதவியை ஏற்றுக் கொண்டார்.
அப்போது போலந்தை ஆட்சி செய்த மன்னன் 2ம் பொலோஸ்லாஸ் பண ஆசை பிடித்தவனாகவும் தீய செயல்களுக்கு அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்தான். ஆயரின் அறிவுரை அவனது மனதை மாற்றியது. ஆனால் மீண்டும் பழைய பாவ நிலைக்கே திரும்பினான். ஒரு பிரபுவின் மனைவி மீது குறி வைத்தான். அவள் இணங்க மறுத்த போது அடியாட்கள் அவளை அரச அரண்மணைக்கு தூக்கிக் கொண்டு வந்தனர்.
ஆயர் பொலஸ்லாவோஸைக் கண்டித்தார். பயனில்லை. திருச்சபைக்கு புறம்பாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த காம அரக்கன் ஆயர் தம் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தும்போது கொலைசெய்ய அடியாட்களை அனுப்பினான். அவர்கள் ஆயரை நெருங்கிய போது அவரைச் சுற்றி பேரொளி நிறைந்திருந்ததைக் கண்டு பின்வாங்கினர். பின்னர் அரசனே வந்து திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த ஆயரின் தலையைக் கொய்து கொன்றான். நாளடைவில் அரசன் போலந்து நாட்டினின்று விரட்டப்பட்டான். கங்கேரி நாடு சென்று ஒசியாக் என்ற இடத்தில் ஆசீர்வாதப்பர் சபை மடத்தில் தஞ்சம் புகுந்து தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்து இறந்தான்.

ஆயர் ஸ்தனிஸ்லாஸ் , போலந்து நாட்டின் பாதுகாவலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *