பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் செவ்வாய்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37

அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும். சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள், `ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்’ என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 93: 1. 1-2. 5

பல்லவி: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். அல்லது: அல்லேலூயா.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்;
ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பல்லவி

பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;
அது அசைவுறாது.
உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது;
நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை;
ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார். நிக்கதேம் அவரைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்? விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *