தவக்காலம் -புனித வாரம் செவ்வாய்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார். அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்’ என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது’ என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 71: 1-2, 3-4, 5-6, 15 மற்றும் 17

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்;
ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்;
எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி

என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்;
கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்;
ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்;
நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;
ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்;
தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;
உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். பல்லவி

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும்
நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்;
உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது.
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;
இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக; அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

அக்காலத்தில் தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, “யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்” என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், “நீ செய்ய இருப்பதை விரைவில் செய்” என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம். அவன் வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்” என்றார். சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை

வழமையாக நடைபெறும் தவக்காலம் 6ம் வெள்ளி மன்னார் தூய செபஸ்தியார் பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை கடந்த 23.03.2018 வெள்ளிக்கிழமை மேலும் அறிய பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை

தவக்காலம் -புனித வாரம் திங்கள்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7

ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 27: 1, 2, 3, 13-14

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு;
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில்,
என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். பல்லவி

எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது;
எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்;
உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

 
எங்கள் அரசரே போற்றப் பெறுக. எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.  

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11

பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது இயேசு, “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை” என்றார். இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மார்ச் :25 – ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பு

மார்ச் :25
ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பு

இந்தத் திருநாள் தொடக்கத்திலிருந்தே “மனிதவதாரத்தின் பெருவிழா ” என்றும் “மீட்பின் தொடக்கம்” எனவும், “கிறிஸ்துவின் உற்பவம்” எனவும் பொருத்தமாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தத் திருநாள் 430ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறதென்பதிலிருந்து இதன் பெருமை புலனாகிறது. இந்தத் திருநாள் கொண்டாடத்தில் அதிதூதர் கபிரியேல் கன்னிமரியிடம் “கிறிஸ்து, மனிதகுல மீட்பர், உம் வயிற்றில் கருவுற்றுத் தோன்றுவார்.” என்ற மாபெரும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்ததைக் கொண்டாடுகிறது. “இதோ ஆண்டவரின் அடிமை நான். உமது வார்த்தையின்படி ஆகட்டும்” என்று சொன்ன உடனே மரியா கருவுற்றார். மரியா கருவுற்ற குழந்தை 9 மாதங்கழித்து டிசம்பர் 25ல் உலகின் மீட்பராகப் பிறந்தது. இந்தப் புனித சம்பவம் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கிப்போலிட்டஸ் என்ற வரலாற்று ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரியாவின் “ஆகட்டும்” என்ற சொல் எத்துணை ஆற்றல் வாய்ந்தது! “உண்டாகட்டும்” என்றார் எல்லாம் வல்லவர். “ஒளி உண்டாயிற்று. விண்ணும் மண்ணும் தோன்றின” என்கின்றார் புனித தாமஸ் வில்லனோவா.
“இறைவனின் தாயாகத் திகழ்வதைவிட மிக்க மேலான நிலையை இறைவன் ஏற்படுத்தி இருக்க இயலாது.”
புனித பெர்னாடின் சியென்னா, “படைப்புக்கள் அனைத்தும் அமைதி காத்து நடுக்கமுறட்டும். இறைவன் தூய கன்னியிடம் வருகின்றார். கன்னியின் மனிதத் தன்மையில் பங்கேற்கின்றார். இந்த மகிமையை ஆழமாக சிந்தனை செய்வோம்.”
புனித பீட்டர் டேமியன், “இதோ ஆண்டவரின் அடிமை” என்று நான் உதிர்த்த சொற்களை என்னிடம் யாரெல்லாம் நினைவூட்டுகிறார்களோ அவர்களுக்கு எப்போதும் நான் தாயாக இருந்து அவர்களின் தேவையை நிறைவு செய்ய விரைந்து வருகிறேன்” – மரியன்னை
“ஓர் அடிமையின் சாயலை இறைவன் எடுத்துக் கொண்டார். ஆனால் பாவ மாசு அவரைத் தீண்டவில்லை. நமது மனிதத் தன்மைக்கு பெருமை தேடித் தந்தார். அதனால் தமது இறைமகத்துவத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. அடிமையின் உருவெடுத்து தம்மை வெறுமையாக்கினார். இவ்வாறு மனித குடும்பத்தில் ஓர் உறுப்பினராகக் காட்சியளித்தார்.”
“இந்நிலை அவரது பரிவிரக்கத்தை காட்டுகிறதேயன்றி, அவரது வலிமையை இழந்துவிட்டார் என்று குறிப்பதில்லை. இவ்வாறு மனிதனை உண்டாக்கிய அவரே, அடிமையின் உருவத்தில் மனிதனாக உண்டாக்கப்பட்டார். தெய்வீக மகத்துவத்திலிருந்து இறங்கி நம்மிடையே வருகின்றார். உண்மையிலேயே கடவுளானவர், உண்மையாகவே மனுஉரு எடுத்தார். இந்த ஒருங்கிணைப்பில் ஏமாற்றம் எதுவும் இல்லை.” இன்றைய திருத்தம் பெற்ற ‘பிரிவியரி’ வாசகத்தில் புனித பெரிய சிங்கராயர் எழுதிய மடல்களிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

தவக்காலம் 05 ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்



இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28

தலைவராகிய ஆண்டவர் கூறியது: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து, எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன், இஸ்ரயேலின் மலைகள் மீது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன்.

அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார். அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்த குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன்.

அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசனாய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்; என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும், அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.

நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: எரே 31: 10. 11-12. 13

பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.

மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; `இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள். பல்லவி

ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். பல்லவி

அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57

அக்காலத்தில் மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர். ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர்.

தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, “இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!” என்று பேசிக்கொண்டனர்.

கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை” என்று சொன்னார்.

இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.

ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார். யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழ இருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.

அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். “அவர் திருவிழாவுக்கு வரவேமாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

தூய கர்த்தர் ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை தவக்காலச் சிறப்பு வழிபாடுகள்

நீண்டதொரு விசுவாச, ஆன்மிகப் பாராம்பரியங்களைக் கொண்ட மன்னார், பரப்புக்கடந்தான் தூய கர்த்தர் ஆலயத்தில் வருடாந்தம் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை நடைபெறும் தவக்காலச் சிறப்பு வழிபாடுகள் இன்று (23.03.2018) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நடைபெற்று வருகின்றன. மேலும் அறிய தூய கர்த்தர் ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை தவக்காலச் சிறப்பு வழிபாடுகள்

தவக்காலம் 05 ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்



ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

அந்நாள்களில் எரேமியா கூறியது: `சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்; `பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; `ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்!’ என்கிறார்கள்.

ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.

படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 18: 1-2,3. 4-5. 6

பல்லவி: என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்.

அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்;  போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. பல்லவி

என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வும் அளிக்கின்றன.

நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42

அக்காலத்தில் இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “ `நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை `இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக `இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார்.

இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர்.

அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மார்ச்:23 – புனித மாங்கிரோவேகா துரிபியுஸ்

மார்ச்:23
புனித மாங்கிரோவேகா துரிபியுஸ்
ஆயர் – (கி.பி.1538-1606)

இவர் ஸ்பெயின் நாட்டில் மயோர்கா நகரில் பிறந்தவர். அறிவுக் கூர்மை உடையவர். சலமான்கா பல்கழைக்கழகத்தில் சட்டக்கலை வல்லுனர் பட்டம் பெற்றிருந்தார். தென் அமெரிக்காவில் பெரு மாநிலத்தின் பாதுகாவலர் புனித சூசையப்பர் என்றாலும், தென் அமெரிக்கா முழுவதிலும் இப்புனிதர் நாட்டின் பாதுகாவலராகவே போற்றப்படுகிறார். புனித லீமாரோஸ் இவரின் தோழமையைப் பெற்றிருந்ததாகவும், இவரிடம் உறுதிப்பூசுதல் பெற்றதாகவும் குறிப்பு ஒன்று கூறுகிறது.