மார்ச் :25 – ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பு

மார்ச் :25
ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பு

இந்தத் திருநாள் தொடக்கத்திலிருந்தே “மனிதவதாரத்தின் பெருவிழா ” என்றும் “மீட்பின் தொடக்கம்” எனவும், “கிறிஸ்துவின் உற்பவம்” எனவும் பொருத்தமாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தத் திருநாள் 430ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறதென்பதிலிருந்து இதன் பெருமை புலனாகிறது. இந்தத் திருநாள் கொண்டாடத்தில் அதிதூதர் கபிரியேல் கன்னிமரியிடம் “கிறிஸ்து, மனிதகுல மீட்பர், உம் வயிற்றில் கருவுற்றுத் தோன்றுவார்.” என்ற மாபெரும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்ததைக் கொண்டாடுகிறது. “இதோ ஆண்டவரின் அடிமை நான். உமது வார்த்தையின்படி ஆகட்டும்” என்று சொன்ன உடனே மரியா கருவுற்றார். மரியா கருவுற்ற குழந்தை 9 மாதங்கழித்து டிசம்பர் 25ல் உலகின் மீட்பராகப் பிறந்தது. இந்தப் புனித சம்பவம் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கிப்போலிட்டஸ் என்ற வரலாற்று ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரியாவின் “ஆகட்டும்” என்ற சொல் எத்துணை ஆற்றல் வாய்ந்தது! “உண்டாகட்டும்” என்றார் எல்லாம் வல்லவர். “ஒளி உண்டாயிற்று. விண்ணும் மண்ணும் தோன்றின” என்கின்றார் புனித தாமஸ் வில்லனோவா.
“இறைவனின் தாயாகத் திகழ்வதைவிட மிக்க மேலான நிலையை இறைவன் ஏற்படுத்தி இருக்க இயலாது.”
புனித பெர்னாடின் சியென்னா, “படைப்புக்கள் அனைத்தும் அமைதி காத்து நடுக்கமுறட்டும். இறைவன் தூய கன்னியிடம் வருகின்றார். கன்னியின் மனிதத் தன்மையில் பங்கேற்கின்றார். இந்த மகிமையை ஆழமாக சிந்தனை செய்வோம்.”
புனித பீட்டர் டேமியன், “இதோ ஆண்டவரின் அடிமை” என்று நான் உதிர்த்த சொற்களை என்னிடம் யாரெல்லாம் நினைவூட்டுகிறார்களோ அவர்களுக்கு எப்போதும் நான் தாயாக இருந்து அவர்களின் தேவையை நிறைவு செய்ய விரைந்து வருகிறேன்” – மரியன்னை
“ஓர் அடிமையின் சாயலை இறைவன் எடுத்துக் கொண்டார். ஆனால் பாவ மாசு அவரைத் தீண்டவில்லை. நமது மனிதத் தன்மைக்கு பெருமை தேடித் தந்தார். அதனால் தமது இறைமகத்துவத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. அடிமையின் உருவெடுத்து தம்மை வெறுமையாக்கினார். இவ்வாறு மனித குடும்பத்தில் ஓர் உறுப்பினராகக் காட்சியளித்தார்.”
“இந்நிலை அவரது பரிவிரக்கத்தை காட்டுகிறதேயன்றி, அவரது வலிமையை இழந்துவிட்டார் என்று குறிப்பதில்லை. இவ்வாறு மனிதனை உண்டாக்கிய அவரே, அடிமையின் உருவத்தில் மனிதனாக உண்டாக்கப்பட்டார். தெய்வீக மகத்துவத்திலிருந்து இறங்கி நம்மிடையே வருகின்றார். உண்மையிலேயே கடவுளானவர், உண்மையாகவே மனுஉரு எடுத்தார். இந்த ஒருங்கிணைப்பில் ஏமாற்றம் எதுவும் இல்லை.” இன்றைய திருத்தம் பெற்ற ‘பிரிவியரி’ வாசகத்தில் புனித பெரிய சிங்கராயர் எழுதிய மடல்களிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.