மார்ச்: 04 புனித கசிமிர்

மார்ச்: 04

புனித கசிமிர்
போலந்து நாட்டின் பாதுகாவலர் – (கி.பி.1458-1484)

கசிமிர் அரச குலத்தில் தோன்றியவர். போலந்து நாட்டு அரசனின் 13 பிள்ளைகளில் மூன்றாம் பிள்ளையாகத் தோன்றினார். சிறுவயது முதலாக தம்மை கடுமையாக கட்டுப் படுத்தி வாழ்ந்தவர். வெறுந் தரையில் உறங்கி வந்தார். இரவில் பல மணிநேரம் செபம் செய்வார். இறுதி நாள் வரை கற்பென்னும் புண்ணியத்தில் நிலைத்து நின்றார்.
ஹங்கேரி நாட்டினர் தங்கள் அரசனிடம் வெறுப்பு அடைந்தனர். அப்போது அண்டை நாடாகிய போலந்தின் மன்னனாக இருந்த கசிமிரின் தந்தையிடம் வற்புறுத்திக் கேட்டதால் கசிமிர், ஹங்கேரி நாட்டிற்கும் அரசரானார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பினார். அப்போது அவருக்கு வயது 15 தான். தந்தைக்கு இவர் திரும்பியது பிடிக்கவில்லை. ஆனால் கசிமிர் அதன் பின் ஆட்சிப் பொறுப்பு எதையும் ஏற்க விரும்பவில்லை. தந்தை ஆத்திரம் அடைந்தும் பயனில்லை. கசிமிர் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாதவராகவே இருந்தார். ஓர் அரசனின் மகளை மணந்து கொள்ள வற்புறுத்தப்பட்டபோதும் இசையவில்லை.
அரண்மனை வாழ்வு இவருக்குரியதாயிருந்தும், நலிவுற்றோர், ஒடுக்கப்பட்டோர், ஆதரவற்றோர், விதவைகள், நோயாளிகள், சிறைப்பட்டோர் ஆகிய இவர்களை தேடிச் சென்று தொண்டு புரிந்தார். இவர் கற்பின் மீது கொண்டுள்ள பற்றுதலின் காரணமாக இவர் இறந்து 122 ஆண்டுகளுக்குப் பின் இவரது கல்லறையைத் திறந்த போது இவரது உடல் அழியாதிருந்தது. மேலும் அதிலிருந்து இனிய நறுமணமும் புறப்பட்டது. இவர் தம் வாழ்நாளில் மரியன்னையின் மீது பக்திப்பற்றுதல் கொண்டிருந்தார். “தினமும் வாழ்த்துவோம், ஓ மரியே” என்ற மரியன்னைக்குரிய பாடலை அடிக்கடி பாடி பரவசமடைந்தார். இப்பாடலை ஒருநாள் பலமுறை பாடுவார். இப்பாடலின் மீது அவருக்கிருந்த பற்றுதல் எவ்வளவெனில் தாம் இறந்த பின் தம் உடலுக்கு அருகில் இந்தப் பாட்டு எழுதப்பட்ட ஏடுதான் வைக்க வேண்டுமென விரும்பினார். அவ்விருப்பம் நிறைவேறியது. இவரது உடல் அழியாமல் தோண்டி எடுக்கப்பட்ட போது இந்தப் பாட்டும் அழியாமல் காணப்பட்டது. 23 வயதில் காச நோயின் கொடுமையால் இறைவன் அடி சென்றார்.