தவக்காலம் 04 ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்


இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1ய,12-22

இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: `நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.

கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்iளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது.

அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.

அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.

அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’ இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள்.

அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 34: 16-17. 18-19. 20,22

பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.

ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி

அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

`மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.’

நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1,2, 10, 25-30

அக்காலத்தில் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.

எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக்கொண்டனர்.

ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.