மார்ச் :17 புனித பாட்ரிக் ஆயர்லாந்து நாட்டு அப்போஸ்தலர்

மார்ச் :17
புனித பாட்ரிக்
ஆயர்லாந்து நாட்டு அப்போஸ்தலர் – (கி.பி.385-461)

புhட்ரிக் பிரிட்டன் நாட்டில் உயர்குலத்தில் தோன்றியவர். ஆவர்தம் தாய் தூர்ஸ் நகர் மார்ட்டினுக்கு நெருங்கிய உறவினர். இவருக்கு 16 வயது நடக்கும் போது இவரை அயர்லாந்து நாட்டைச் சர்ந்த முரடர் சிலர் தங்களின் தாயகத்திற்கு கடத்திக் கொண்டு போய்விட்டனர். அங்கே ஒரு தலைவனிடம் ஒப்படைக்கப்படவே ஆடு மேய்க்கும் தொழிலுக்க உட்படுத்தப்பட்டார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியாமல் ஓடி தாயகம் வந்தடைந்தார். அயல் நாட்டில் அகதியாக வாழ்ந்தாலும் ஆன்மீகக் காரியங்களில் முழுக்கவனம் செலுத்தியவர். புpரிட்டனுக்கு திரும்பினாலும் அயர்லாந்து நாட்டினரை கிறிஸ்துவின் ஒளிக்கு கொண்டு வரும் ஆவல் அவரை ஈர்ந்தது. இருப்பினும் 20 ஆண்டுகளுக்கப் பின்னரே இந்த ஆவல் நிறைவேறியது.
கி.பி 430ல் திருத்தந்தை முதலாம் செலஸ்டின் பிரிட்டனைச் சேர்ந்த ஆயர் பலேடியஸ் என்பவரை அயர்லாந்துக்கு மறைபரப்பும் பணிக்கு அனுப்பினார். இங்கே அவருக்கு பெரும் எதிர்ப்பு. எனவே தாயகம் திரும்பி இறந்துவிட்டார்.
இச்சூழலில் பாட்ரிக்குக்கு 43 வயதாகும்போது அவரது கனவில் அயர்லாந்து நாட்டினர் “இளைஞரே, எங்களிடையே வந்து மீண்டும் நடமாட உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறோம்” என்று குரல் கொடுப்பது போல் கண்டார். “இறைவனுக்கு நன்றி, இவ்வாறு இறைவன் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அயர்லாந்துக்கு என்னை அழைக்கிறார், அது போதும்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டாராம்.
பிரிட்டனைச் சேர்ந்த பலேடியஸ் ஆயர் இறந்தபிறகு பாட்ரிக் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு அயர்லாந்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு இந்த முறை ஆயராக போனபொழுது ட்ரூயிட் இனத்து முரடர்கள் அவரை ஏற்றிச் சென்ற கப்பலை விரட்டியடித்தனர். அயர்லாந்தின் வடபகுதிக்கு கப்பல் சென்றடைந்தது. அங்கு டிச்ச என்ற பெயர் கொண்ட நாட்டுத் தலைவனை மனந்திருப்பினார். அவருடன் பலரும் திருமுழுக்குப் பெற்றனர். இதன் விளைவாக சால் என்ற இடத்தில் ஆலயம் எழுப்பினார். சில ஆண்டுகளுக்கப் பின்னர் டாரா என்ற இடத்தில் மலையடிவாரத்தில் பல பகுதித் தலைவர்களும் ஒன்றாக கூடினர். அவர்கள் முன் துணிச்சலாக இறையரசைப் போதித்தார். ட்ரூயிட் குருக்கள் ஆத்திரமடைந்து பல பேய் வித்தைகளால் பாட்ரிக்கை மிரட்டினர். அவரது செபத்தின் வல்லமையினால் ட்ரூயிட் குருக்களின் வித்தை சற்றேனும் பலிக்கவில்லை. இதைக் கண்ணுற்ற அரசன் லேயோகியேர், கிறிஸ்த்தவத்தை மேலும் பரப்ப இசைவு தந்தார்.
இதனால் 7 ஆண்டுகள் கன்னாட் பகுதியில் கிறிஸ்துவின் ஒளியைக் கொடுத்து வந்தார். பின்னர், அல்ஸ்டர், மீச், வெய்ன்ஸ்னர்,லிமெரிக் ஆகிய பகுதிகளில் பல புதுமைகள் ஆற்றி வேத விசுவாசத்தைப் பரப்ப இறைவன் இவருக்கு உறுதுணையாயிருந்தார். இருப்பினும் இவர் பலமுறை சிறையில் தள்ளப்பட்டார். உயிருக்கும் ஆபத்து நேர்ந்தது. ஆனால் இறுதியில் புனிதருக்கு பல வெற்றிகள் கிடைத்தன. ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்குப் பெற்றனர்.
இவருக்கு மேலும் உதவி செய்ய திருத்தந்தை 3 துணை ஆயர்களை அனுப்பினார். விரைவில் புனிதரின் முயற்சியால் மண்ணின் மைந்தர்கள் பலர் குருத்துவத்தை நாடினர். புல கன்னியர் மடங்களும், துறவற மடங்களும் தோன்றின. சுhல் என்ற இடத்தில் 493ல் புனிதர் இறந்த பொழுது இயர்லாந்து முழுவதிலும் திருச்சபை மிக நேர்த்தியான அடித்தளத்துடன் பொலிவுற்றுத் துலங்கியது. இவ்வாறாக இவரது அயராத உழைப்பினால் இவரை அயர்லாந்து நாட்டின் திருத்தூதர் என்று அழைப்பது மிகப் பொருத்தமானது.

தவக்காலம் 04 ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்



வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

`ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், `மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்’ என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.

படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 7: 1-2. 8-9. 10-11 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும். இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். பல்லவி

ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும். பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். பல்லவி

கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார். கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி வாசகம்

கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53

அக்காலத்தில் யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர்.

வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர்.

மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர்.

இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.

தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள்.

அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள்.

காவலர் மறுமொழியாக, “அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.

பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர்.

அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார்.

அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.